சென்னை மாநகரத்தின் குறியீடான எல்.ஐ.சி கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ளதுதான் ஜி.பி ரோடு. இது 4 மற்றும் 2 சக்கர வாகனங்களை மெருகூட்டி அழகுபடுத்தும் கடைகள் நிறைந்த பகுதி.

சுமார் 1 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதியில் சிறியதும் பெரியதுமான 2500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தென்னிந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னை, ஒரகடம், படப்பையைச் சுற்றி உற்பத்திச் செய்யப்படும் அனைத்து ரக கார்களும் பியூட்டி பார்லருக்கு படையெடுக்கும் புதுமணத் தம்பதிகள் போல, தங்களை அலங்கரித்துக் கொண்டு சாலைப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

நாம் அந்தச் சாலையில் நுழைந்தபோது, காரின் கலரைப் போலவே தங்களின் முடிகளை கலர்  அடித்துக்கொண்டு போகும் வரும் கார்களை கைபோட்டு மடக்கி, “இங்கே வாங்க சார்” என்று கார்களை இழுத்துக் கொண்டிருந்தனர், மெக்கானிக் மற்றும் கார் மேக்கப் வித்தை தெரிந்த அந்த இளைஞர்கள்.

காதர் என்ற இளைஞர் மாருதி இன்டிகா காரின் டேஷ் போர்டில் ஸ்பீக்கர் செட்டும் புது வைபரும் மாட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

காதர்

“காலையிலிருந்து வேலையே இல்லாமல் இப்பதான் சின்ன வேலை வந்திருக்கு. இந்த நேரத்துல வந்துட்டீங்களே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, என் ஃபிரெண்டுகிட்டே ஒப்படைச்சிட்டு வர்றேன். இந்த வேலைய செஞ்சிகிட்டே ஒங்ககிட்ட பேச முடியாது” என்று சென்றவர், சிறிது நேரத்தில் சிரித்த முகத்துடன் நம்முன் ஆஜரானார்.

“சார் நான் 10-வதுதான் படிச்சிருக்கேன். ஆட்டோ மொபைல் பத்தி நான் என்ன சொல்ல போறேன். இந்த எடத்துக்கு 15 வயசுல வேலைக்கு வந்தேன். எனக்கு இப்போ 30 வயசாகுது. 20 கடைகள் இருந்த இந்த ரோட்டுல இப்ப 2000 கடைகளுக்குமேல வந்துருச்சி. டெய்லி இங்கே 300 பேருக்கு மேல வேலைக்கு வர்றாங்க. அதுக்கு மேல 500 பசங்க சீசனுக்கு மட்டும் வந்து போறாங்க.

மழைக்காலமுன்னா வைபர், பல்ப், மிதியடி மாட்டுறதுன்னு புதுசா வேலை வரும். வெயில் காலமுன்னா கண்ணாடிக்கு சன் ஸ்கிரீன் ஒட்டுறது, ஏசி ரிப்பேர் பண்றதுன்னு சில வேலை வரும். மத்தபடி வருசம் ஃபுல்லா சின்ன சின்ன ரிப்பேர்னு வண்டிங்க வரும். பவர் லாக் வேலை செய்யல, ஸ்டீரியோ நாய்ஸ் வருது, டோர் கிரிப் இல்ல – திடீர்னு ஜாம் ஆகுதுன்னு வருவாங்க.

படிக்க:
உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !
♦ சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

இங்கே பேசிக் மாடல் காருங்கதான் நெறைய வரும். மிட் ரேஞ்ச், பிரிமியம் காருங்க கொஞ்சம்தான் வரும். டாப் என்ட் காருங்கள்லாம் இந்த மார்கெட்டுக்கு வராது. அதெல்லாம் பல கோடி ரூபாய் வெலை. சின்ன ஸ்பேர் மாத்தனுமுன்னாலும் ஒரிஜினல்தான் போடுவாங்க. அங்கதான் சர்வீசும் பண்ணுவாங்க.

மெர்சிடிஸ், பென்ஸ், வால்வோ, பி.எம்.டபிள்யூ, லெக்சஸ், டெஸ்லா, இன்பினிடி, ஆடி, லேன்ட்ரோவர், ஜாகுவார்… இப்படி 50 லட்சம் முதல் 1 1/2 கோடி ரூபாய் உள்ள காருங்கல்லாம் நாங்க சாலையில பார்ப்பதோடு சரி. இங்கே வருவதெல்லாம் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ள வண்டிகள் மட்டுமே.

பிலாலுதீன்

பவர் ஸ்டியரிங்க், பார்க்கிங் சென்சார், ஏர் பேக், ஆன்டி பிரேக் கிட், அல்லாய் வீல், சன் ரூப், மூன் ரூப், ரியல் ஏசி, ரிமோட் ட்ரங்க் ஓப்பனர், ரிமோட் ஃபியூல் லிட் ஓப்பனர் என்று கோடி ரூபாய் விலையுள்ள காரில் உள்ள வசதிகளை நாங்கள் 10 லட்சம் விலையுள்ள பிரிமியம் கார்களுக்கு செய்து கொடுப்போம். அவரவர் வசதியைப் பொருத்து, எக்ஸ்ட்ராவா 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை செலவு செய்து அவங்களுக்கு விருப்பமான டாப் என்ட் கார் வசதிகளை உருவாக்கிக் கொடுப்போம். வேலையைப் பொருத்து 1 வாரம் முதல் 1 மாதம் நேரம் புடிக்கும்.

பணக்கார கல்லூரி மாணவர்கள், தங்கள் கார்களை ஸ்போர்ட்ஸ் கார்களாக மாற்றித்தரச் சொல்லி வருவார்கள். அதையும் செய்வோம். ஆல்ஃபா ரோமியோ, மார்கன் ரோட் ஸ்டாரிலிருந்து பெர்ராரி வரை… கொடுக்கும் பணத்துக்குத் தகுந்த மாதிரி ஆல்டர் செய்வோம்.

நிறைய பேர் பேசிக் மாடல்களில் பிரிமியம் வசதிகளை செய்துதரச் சொல்லிக் கேட்பார்கள். குறைந்தது 50 ரூபாயிலிருந்து 2 லட்சம் வரை செலவு செய்து அவர்கள் விருப்பப்படி மாட்டிக் கொடுப்போம்.

சாலைக்குள் நுழையும் கார்களை, தங்கள் விசிட்டிங் கார்டுகளை காண்பித்து, அன்போடு வழிமறித்து அழைத்துச் செல்லும் ‘மார்கெட்டிங் ரெப்ரெசன்டேட்டிவ்’. ஒரு கார் கிடைத்துவிட்டால், அப்போது அவர்கள் காரை அழகுபடுத்தும் கலைஞர்கள்.

ரொனால்ட் கியூட், மாருதி பிராங்கோ, ஆல்டோ, செல்ரியோ, ஹூண்டாய் டன்ரோ. இதை ரெனால்ட் கேப்டன், போர்ட் குகா, ஹோண்டா பியார், டயோட்டா குவாலிஸ், மகிந்த்ரா XUV இந்த கார்களில் உள்ள வசதிகளைக் காட்டி அதே மாதிரி கேட்பார்கள். சிலர் ஸ்டியரிங், டேஷ் போர்ட், பவர் டோர், லெக் ரூம், ஸ்டீரியோ, ஊஃபர் இவற்றில் வெரைட்டி கேட்பார்கள். 4 லட்ச ரூபாய் காரை 10 லட்சம் ரூபாய் காராக மாற்ற அதிகபட்சம் 1 லட்சம் செலவு செய்வார்கள். காரணம் கேட்டா, என் பையன் விரும்புறான், பொண்ணு விரும்புறா, என்ன செய்யிறது; செலவோடு செலவா இதையும் செய்ய வேண்டியிருக்கு என்பார்கள்.

இங்கே வரும் வாடிக்கையாளர்களில் கரைவேட்டிக் கட்டிய அரசியல்வாதிகள்தான் அதிகம். அதை விட்டா கொஞ்சம் பிசினஸ் மேன், சில உயரதிகாரிகள் வருவார்கள்” என்றார்.

கார் உரிமையாளர்.

நாம் அவரிடம் “IT ஊழியர்கள் வரமாட்டார்களா, அவர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்களே” என்றோம்.

அதற்கு அவர், “அதெல்லாம் 5 வருசத்துக்கும் முன்னே, இப்போ புதுசா யாரும் வர்றதில்ல. அப்படியே வந்தாலும் இன்டிகேட்டர், வைபர், சீட் கவர் மாத்துறதுனு சிம்பிளா முடிச்சிட்டுப் போவாங்க. ஏன் சார்… புது கார் வாங்கலியான்னு கேட்டா, அதற்கு ஒரு சிரி சிரிப்பாங்க.

இப்படி வர்றவங்க வேலை ரொம்ப குறைஞ்சி போச்சு. சில நாளு காலை டீ, பன்னு சாப்பிடக்கூட வேலை வராது. இருந்தாலும் இந்த வேலைய விட்டு எங்கேயும் போக முடியாது. எங்களுக்கு வேற வேலை எதுவும் தெரியாது” என்றார்.

***

டிரைவர் ராமன், தாம்பரம்

கார் ஓட்டுநர் ராமன்

கால் டாக்சி டிரைவராத்தான் இந்த வண்டியை ஓட்டுறேன். 4 மணி நேரம் ஓட்டுனா 350 ரூபா கூலி கொடுப்பாங்க. எக்ஸ்ட்ரா ஹவருக்கு 70 ரூபா. அதுல சில பேருதான் சாப்பாடு, டீன்னு வாங்கிக் கொடுப்பாங்க. கால் டிரைவருன்னா திடீர் டிரைவர்தானே, நாமதான் எல்லாம் பாத்துக்கணும், அவங்க பொறுப்பு இல்ல.

டூர் சவாரி, கோயில் குளம், திருவிழா, வீட்டு விசேசம் இப்படி ஏதாவது சவாரி வந்தா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் பார்ப்போம். மத்தபடி லோக்கல்ல ஓட்டுனா வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். என்ன பண்றது.

***

எங்கப்பா அஜித் ரசிகர், அதான் அஜித் பேர வச்சிட்டாரு. அப்பா, அண்ணா எல்லோரும் இந்தத் தெருவுலதான் இதே வேலை செய்யிறோம்.

அஜீத்

நான் 10 வயசுலேயே இந்த வேலைக்கு வந்துட்டேன். சரியா படிக்கல. ஆனா, வேலைய நல்லா கத்துகிட்டேன். இப்போ வேலை எதுவும் இல்ல. முன்ன தினமும் 3 வண்டி வேலை பார்ப்பேன். ஒரு நாளைக்கு 1500 கூட கெடைக்கும். இன்னைக்கு காலையிலேயே வந்தேன், பகல் 12 மணியாகுது. இந்த ஒரு வேலைதான் வந்தது. 300 ரூபா கெடைக்கும். ஃபுல் சீட் கவர் மாத்தணும், சாயாங்காலம் ஆயிடும். அடுத்த வேலை எப்ப வருமுன்னு தெரியாது.

எலக்ட்ரிக், டிங்கரிங், பெயிண்டிங்க் எல்லா வேலையும் தெரியும், எனக்கே இதுதான் நிலைமை.

***

கார் கண்ணாடிகளுக்கு சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டும் தொழிலாளி.
சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டும் தொழிலாளியின் தற்காலிக நடைபாதைக் கடை.
எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு, கூட்ட நெரிசலில் திணறிய ஜி.பி சாலை தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

மேலும் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க