ரெங்கநாதன் தெரு முழுக்க சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட தையற் கடைகள். இரண்டு மெஷின் முதல் இருபது மெஷின்கள் வரை கொண்ட பலதரப்பட்ட கடைகள்… இவையில்லாமல் சுடிதார் பிளவுஸ்களில் பல அலங்கார டிசைன்கள் வைத்துத் தைக்கும் பொருட்கள் விற்கும் கண்ணைக் கவரும் கடைகள். அங்கு நுழையும்போது … “சார், சார் இங்க வாங்க……” என்று சுடிதார், பிளவுஸ் தைக்க நம்மை கூப்பிடுகிறார்கள்.

ரெங்கநாதன் தெருவில் அமைந்துள்ள தையற் வளாகங்கள்.

அதில், ‘ஓம் ஸ்ரீ டைலர்ஸ்’ என்ற கடையை அணுகினோம். கடையின் உரிமையாளர் கல்பனா, இளம் கர்ப்பிணிப்பெண். அவர் கஸ்டமர்களிடம் புதிய துணிகளை வாங்கிக்கொண்டு, அவர்களின் அங்க அளவுகளை ஒவ்வொன்றாக நீண்ட நோட்டில் குறித்துக்கொண்டிருந்தார். அவரிடம் வந்த விஷயத்தைக் கூறி,.

“நீங்கள், முகம் தெரியாத புது வாடிக்கையாளருக்குத்தான் தைப்பீர்கள், நிரந்தர வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் அளவுக்கு உங்களுக்கு அனுபவமோ, தொழில் நேர்த்தியோ கிடையாதென்று ஊர் பக்கம் டெய்லர்கள் கூறுகிறார்களே உண்மையா” என்றோம்.

அவருக்கு சடக்கென்று கோபம் வந்தது. அதை மறைத்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் “அப்படியா? யாரோ வேலையில்லாதவர்கள் சொல்லியிருப்பார்கள். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் டிசைன்கள் காட்டி அதே மாதிரி வேண்டுமென்று கேட்கும் கஸ்டமர்கள்தான் அதிகம். ஒருவருக்கு தைத்ததை வைத்து அதே டிசைனை இன்னொருவருக்கு ஒப்பேத்த முடியாது. அதில் ஆயிரம் வித்தியாசம் கேட்பார். இப்படி தையுங்கள் என்று தனது ஆண்ட்ராய்ட் போனைக் காட்டி அதில் மாடல், மாடலாக பல ஃபோட்டோக்களை கொட்டுவார். அதில் கொஞ்சம் பிசகினாலும் கோபப்படுவார்கள்.

‘ஓம் ஸ்ரீ டைலர்ஸ்’ கடை உரிமையாளர் கல்பனா.

சில நேரத்தில், ‘நான் கொடுத்த துணியைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் தைக்க வேண்டாம்…. ஆயிரம் ரூபாய் மெட்டீரியலைக் கெடுத்துவிட்டீர்கள்’ என்று அழும் காலேஜ் பெண்கள்கூட உண்டு. அவர்களை சமாளித்து அவர்கள் சொல்லும் திருத்தங்களை செய்து கொடுத்தால் கூலி மட்டும்… பஜார் கூலியிலிருந்து ஐந்து பைசா அதிகம் தர மாட்டார்கள். ஆனால் ஆயிரம் அலங்கார வேலைகளை  சொல்லி வேலையை கூட்டுவார்கள். அதற்கு கூலி பத்துரூபாய் அதிகம் கேட்டால், ‘துணியே…… ஐந்நூறூ, ஏழுநூறு…. கூலி இவ்வளவ்வா….’ என்று டக்கென்று வேறு டெய்லரிடம் தாவி விடுவார்கள்….

இதனால் பல ஆண்டுகளாக கூலியை கூட்டவேயில்லை…. சாதா சுடிதார் தைச்சா நூற்றி இருபது, லைனிங் வைச்சி தைக்க இருநூத்தி நாப்பது, லைனிங் மெட்டீரியல் நாங்களே போட்டா மூன்னூற்றி அறுபது எனக் கூலி வாங்குவோம். இதில் அவர்கள் கழுத்து, கையில் எக்ஸ்ட்ரா வேலை ஸ்பிரில், அம்பரெல்லா ரிச் மாடல் என ஆயிரம் சொல்லுவார்கள்.

படிக்க :
♦ திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
♦ அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

சிலர் பார்ட்டி, பங்ஷன், பர்தேடேக்குன்னு தைக்க சொல்லுவார்கள். சுடிதாரில், சமிக்கி, கல், ஆரம் தனியாக வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு மட்டும் நாங்கள் கூலியை அதிகம் கேட்போம். இப்படி எங்கள் வேலையைப் பார்த்து பிடித்துப்போய் தொடர்ந்து வரும் கஸ்டமர்களும் உண்டு. வேலை பிடிக்காமல் சாபம் விடும் கஸ்டமர்களும் உண்டு. எல்லோரையும் அனுசரித்துப் போனால்தான் இங்கு தொழில் செய்ய முடியும்.

இந்த இடத்தில் டெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும். அவர்கள் என்ன கேட்டாலும் கோபம் வராமல் சிரித்துப் பக்குவமாகப் பதில் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான், நமது வேலையில் சிறு குறை இருந்தாலும், அனுசரிப்பார்கள். அதுதான் இந்த வேலையின் இரகசியம்.

இந்த ஏரியாவில் தொழில் செய்வதற்கு பல லட்சங்களைக் கொட்டியிருக்கிறோம். இந்த கடை பத்துக்கு பத்து. இதற்கு பகடி (அட்வான்ஸ்) மட்டும் பத்து லட்சம். கடை வேண்டாம் என்றால் நாமே இன்னொருவருக்கு கை மாற்றி போட்ட பணத்தை எடுக்க வேண்டும். பகடி அப்போதைய மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து கூடவும், குறையவும் செய்யும். இதில்லாமல் மாத வாடகை பதினெட்டாயிரம் ரூபாய். தனியாக மெயின்டனன்சு ஆயிரம், கரண்ட் பில் ஆறாயிரம் வரும். கடையில் வேலை செய்பவர்களுக்கு அட்வான்ஸ் தனி. கட்டிங் மாஸ்டருக்கு ஐம்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம். டெய்லருக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம். தெருவில் நின்று கஸ்டமர்களை அழைத்துவரும் பீஸ் பிடிப்பவர்களுக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் – இவை நிரந்தர அட்வான்ஸ்.

இவையில்லாமல், எல்லோருக்கும் அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ப பீஸ் ரேட் தனி. ஒரு சுடிதாருக்கு டெய்லர், கட்டிங் மாஸ்டர், பீஸ் பிடிப்பவர் என்று எழுபது ரூபாயிலிருந்து நூற்றிருபது வரை போய்விடும் மீதிப்பணத்தில்தான் நாங்கள் இவ்வளவு செலவையும் செய்ய வேண்டும். சமயத்தில் எங்கள் கூலியையும் சேர்த்துப் பார்த்தால், எதுவும் மிஞ்சாது.

ஆண்டுக்கு ஆறு மாதங்கள்தான் வேலையே; மீதியை பண்டிகை நாட்களில்தான் சரிகட்ட வேண்டும். ஆனால் அப்போது தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள். மாவு உரலில் நாய் தலைய விட்டக் கதைதான் எங்க வேலை. வேறு தொழிலுக்கு போகவழியில்லை என்பதால் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்” என்றார்.

கட்டிங் மாஸ்டர் ரவி :

ரவி, கட்டிங் மாஸ்டர்

இந்தத் தொழில் எனக்கு நாப்பது வருட அனுபவம். இவ்வளவு நாள் நிக்கணும்னா கஸ்டமரையும் முதலாளியையும் மனசு நோகாம நாங்க வைச்சிருக்கணும். அவங்க என்ன டிசைன் கேட்டாலும் கட் பண்ணி காண்பிக்கணும். டம்மி மாடல் கட் பண்ணுவதற்கு ஒரிஜினல் துணி தேவையில்லை, பழைய பேப்பர் வைத்தே கட் பண்ணி காண்பிப்போம். சுடிதார், பிளவுஸ் எதுவாக இருந்தாலும், கஸ்டமருக்கு கச்சிதமா பொருந்தணும். பிளவுஸ்னா பாடி, ஆர்ம்ஸ்; சுடிதாருன்னா, இடுப்பு, பாட்டம் நச்சுன்னு இருக்கணும். அதுக்கு துல்லியமா வெட்டணும். லைனுக்கு (டெய்லர்களுக்கு) சளைக்காம கட் பண்ணி கொடுத்துக்குனு இருக்கணும்.

நான் இதற்கு முன் சவுகார் பேட்டையில் வேலை செய்தவன். அதனால இந்த இடத்தில் வேலை செய்யறது சாதாரணம். மார்வாடிங்க உடம்ப தூணு மாதிரி வைச்சிக்கிணு, தைக்கிற துணி மாட்டுனா செப்பு சிலை மாதிரி தெரியுணும்னு நினைப்பாங்க…. அவங்க வந்தாங்கன்னா நம்மகிட்ட சிலை வடிக்கிற சிற்பிகிட்ட, சொல்ற மாதிரி – இப்பிடி, அப்பிடியினு இன்ச், இன்சா  சொல்லுவாங்க. நம்ம வேல அவங்களுக்கு பிடிச்சிப்போச்சினா, ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி டஜன் கணக்குல துணி தைப்பாங்க.

இங்க தி. நகர்ல கூலி கம்மி ஆனா வேலை நிரந்தரம். ஒரு பீஸ் கட் பண்ணா சராசரியா முப்பது ரூபாய் கிடைக்கும். கொறஞ்சது இருபது பீஸ் கட் பண்ணாத்தான் வீட்டுக்கு எதாவது கொடுக்க முடியும். சில நேரத்துல கடன் வாங்கி செலவுப் பண்ணறது நடக்கும். ரொம்ப டல் அடிக்கும்.

டெய்லர் சிவா :

சிவா, டைலர்

முப்பது வருச அனுபவம். விடிஞ்சா இந்த மெஷின்லத்தான் கண் முழிக்கிறேன். பண்டிகை சீசனுக்கு ஒரு நாளைக்கு மூணு மணி நேரங்கூட தூங்க மாட்டோம். வேலைன்னு வந்தா உடம்பு தானே சுறுசுறுப்பாயிடும். நாங்க தொழில் கத்துக்கினதெல்லாம் இப்ப மாதிரி இல்ல…. அப்ப எல்லாம் குருக்கிட்ட மந்திரத்தை கத்துக்கிட்ட மாதிரி கத்துக்கிட்டோம். மெஷின்ல கால் வைக்கிறதுக்கு தவம் கிடப்போம். மொதலாளி பழைய துணிய எங்ககிட்ட ஓரம் அடிக்க கொடுக்கறதுக்கே மூணு வருசமாகும்.

படிக்க :
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
♦ சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

எனக்கு படிப்பு வராததால எங்க ஆயா, நடையா நடந்து இந்தத் தொழில்ல விட்டாங்க…. தொழிலுக்கு புதுசுல டீ கிளாசு கழுவுறதுதான் வேல. டீ வாங்கறதுக்கு ஒரு சீனியர் இருப்பான், நான் கடைய பெருக்கணும், மெஷின  துடைக்கணும், கிளாசக் கழுவணும். இதுதான் ஒரு வருசம் என் வேலை. சாயங்காலம் வீட்டுக்குப்போகும் போது மொதலாளி ஐம்பது பைசா கூலி கொடுப்பாரு…. அதுவும் சில நாள் வேல இல்லடானு இருபது பைசாவாக்கிடுவாரு….. மொதலாளிக்கு மொகம் கோணாம இப்படி வேல செஞ்சா… கொக்கி, பட்டனு கட்றது, எம்மிங் பண்ணறது, காஜா எடுக்கறதுனு ஒரு வருசம் போச்சு. அதுக்கு அப்புறம் புடவைய ஓரம் அடிக்கற வேலய கொடுத்தாங்க…. புதுசா மெஷுனுல உட்கார்ந்தவுடன் தலைகால் புரியாது. பெருமையா இருக்கும்….. அப்படி கத்துக்கிட்டோம் இந்த வேலையை….

ஆனா, இப்ப வர்றதுங்க…. மெஷின்ல எப்படி உட்காரதுன்னே தெரியாம நான்தான் டெய்லருன்னு காலர தூக்கி விட்டுக்குதுங்க…… அவங்கதான் மொதலாளியினு நிக்கறாங்க…. எல்லாம் காலத்துக்கேத்த கோலம்….” என்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க