“மேடம்….. மேடம்… தைக்கணுமா? மேடம் வாங்க … சுடிதார், பிளவுஸ் ஒன் ஹவர்தான் வாங்க மேடம் வாங்க…”

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் செல்லும் யாரும் இந்தக் குரல்களைக் கேட்காமல் கடந்து செல்ல முடியாது. பை வைத்திருப்பவர்கள் தங்கள் குரலுக்கு செவி மடுத்தார்களா இல்லையா என்று கவலைப்படுவதில்லை. புதுப் பையோடு இறங்கும் நபரின் இன்னொரு லக்கேஜ்போல் இவர்களும் ஒட்டிக் கொள்கிறார்கள்; ‘மேடம்… மேடம்’ என்று கூடவே ஓடுகிறார்கள். அவர்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் நகர்ந்தாலும் கவலையில்லை. திரும்பவும் இன்னொருவர் பின்னால் ஓடுகிறார்கள், ‘மேடம், மேடம்… ஒன்னவர்ல தைக்கலாம் மேடம்’.

“ஒரு நாளைக்கு இப்படி ஆயிரம் பேர் பின்னாடி சளைக்காமல் ஓடினால்தான் ஐந்து பேராவது தேருவார்கள்” என்கிறார்கள். இந்தத் தொழிலை பதினைந்து ஆண்டு காலமாக அதே சுறுசுறுப்புடன் தொடர்கிறார்கள். இப்படி முன்னூறு பேருக்கு மேல் இருக்கிறார்கள். அதில் ஆண்களும், பெண்களும் சரிபாதி. இவர்களுக்கு பெயர் பீஸ் பிடிப்பவர்கள்.

பீஸ் பிடிக்கும் சமீராவிடம் நாமும் ஓடிக் கொண்டே பேசினோம்.

“ஏங்க கொஞ்சம் நில்லுங்க… ஏன் இப்படி ஓடுறீங்க… இப்படி மதிக்காம போறாங்களே … அவங்க பின்னால் ஏன் ஓடுறீங்க….?” என்றோம். அவர் காதில் வாங்கவே இல்லை. அவருடைய எல்லையான பதினைந்து அடி தூரத்தை கஸ்டமர்கள் தாண்டியவுடன் அவரை விட்டுவிட்டு “மேடம், மேடம்” என்று இன்னொருவருக்கு குறிவைத்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்தவர்… ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம் மீது பரிதாபப்பட்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.

“இப்படி ஓயாமல் ஓடுவதால், என்ன கிடைத்துவிடும். இதுவும் ஒரு வேலையா?” என்றோம்.

அவர் நம்மை முறைத்து, “இதுதான் எங்க பொழப்பு… எங்க வேலை…” என்றார் அழுத்தமாக.

“ஒரு நாளைக்கு இப்படி ஆயிரம் பேர் பின்னாடி சளைக்காமல் ஓடினால்தான் ஐந்து பேராவது தேருவார்கள்” என்கிறார் சமீரா.

“உங்கள் குரலுக்கு பதில் சொல்லாமல் திமிராக நடந்து போகிறவர்கள் பின்னால், கேட்டுக்கொண்டே ஓடுவதைப் பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இப்படி ஆட்களை பிடித்துக்கொடுத்தால், உங்களுக்கு என்ன கொடுப்பார்கள் டெய்லர் கடைக்காரர்கள்?” என்றோம்.

“அது, நாங்கள் பிடித்துக்கொடுக்கும் கஸ்டமர்கள் என்ன தைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து. சாதா சுடிதார் ஒன்று தைத்தால் கடைக்காரர் எங்களுக்கு இருபது ரூபாய் கொடுப்பார். லைனிங், சுடிதார், பிளவுஸ் தைத்தால் எங்களுக்கு முப்பது கிடைக்கும். ஒருத்தரே நாலைந்து சுடிதார் பிளவுஸ் தைத்தால் சமயத்தில் நூறு ரூபாய்கூட கிடைக்கும். எல்லாம் ஆண்டவன் நமக்கு அன்னைக்கி அளக்கறதப் பொறுத்துதான். ஒரு நாள் ஐநூறூ கிடைக்கும், ஒரு நாளைக்கு ஒண்ணுமே இருக்காது”.

ஏராளமான டெய்லர் கடைகள் இருக்கக்கூடிய ரெங்கநாதன் தெருவின் குறுக்குத் தெருக்களில் ஒன்று.

“இதற்கா, இப்படி ஓடுறீங்க; கம்பெனி வேலைக்குப் போனால் மதிப்பாக இருக்குமே” என்றோம்.

“மதிப்பு யாருக்கு வேணும். அத வைச்சிக்கினு என்ன பண்றது… இங்க கடைக்காரர்கள் முப்பதாயிரம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுப்பார்கள்… அங்கே கொடுப்பார்களா? அந்த அட்வான்ஸ நாங்க விருப்பப்பட்டத்தான் கழிப்போம். சமயத்தில பல மாசம் ஒரு பைசாக்கூட கழிக்க மாட்டோம். ஏதாவது அவசர செலவுன்னா கழிச்சப் பணத்தையும் கேட்டு வாங்கிடுவோம்…. எங்க பேர்ல எப்பவுமே நிரந்தரமா முப்பதாயிரம் கடன் இருந்துக்கினே இருக்கும்… இந்தச் சலுகை கம்பெனியில கிடைக்குமா?

படிக்க :
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
♦ கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

உடம்பு சரியில்லனா ரெண்டவரோட வேலைய முடிச்சிப்போம். பண்டிகை நேரம், முக்கியம்… மத்த நாள்ல விருப்பமா வருவோம். வந்தா துட்டு… வரலனா ரெஸ்ட்டு…. ஏன் வரலனு எவனுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல… அய்யய்யோ… அதிக நேரம் உங்ககிட்ட பேசிட்டேனே… இப்படியே பேசிட்டு இருந்தா பொழப்பு போய்டும்…. நீங்க டெய்லர் கடைக்குப்போய் எங்க ஓனர்க்கிட்ட மத்தத கேட்டுக்குங்க…” மேடம்…, மேடம்…. என்று புது துணிப்பைகளுக்குப் பின்னால் ஓடினார்.

கையில் விசிட்டிங் கார்டுகளுடன், பீஸ் பிடிக்கும் இன்னொரு பெண்ணை புகைப்படம் எடுக்க கேமராவைத் திருப்பினோம். பக்கத்தில் நின்ற, அதே வேலை செய்யும் இளைஞன், “சார் ஃபோட்டோ புடிக்காதீங்க” என்று நம்மைத் தடுத்தவர் மேலும் தொடர்ந்தார்.

“நீங்க பாட்டுக்கும் ஃபோட்டோ புடிச்சி நெட்டுல ஏத்திடுவீங்க, அவங்க குடும்பத்துக்குத் தெரிஞ்சா என்னாவுறது. எல்லாம் குடும்பப் பெண்கள் சார். நெறைய பேரு வீட்டுக்குத் தெரியாமத்தான் இங்கே வந்து வேலை செய்யிறாங்க. ஏதோ அவங்க குடும்பச் சுமையைக் குறைக்க தொண்ட தண்ணி வத்த கத்திகிட்டிருக்காங்க; அதுக்கும் உலைவச்சிடுவீங்க போலிருக்கே” என்றார் கோபமாக.

ஆட்கள் நடமாட்டமில்லாத தி.நகர் ரெங்கநாதன் தெருவில் காலை வேலையிலேயே தங்களது வேலையைத் தொடங்கிவிட்டார்கள், பீஸ் பிடிக்கும் தொழிலாளர்கள்.

அந்த இளைஞனின் கோபத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இதுவரை ஒழுக்கம் என்று போதிக்கப்பட்டவை, இன்று ஒழுங்கீனமாகிவிட்டது. இதுவரை குடும்பம் – கட்டுக்கோப்பான வாழ்க்கை என்றிருந்த நிலைமை இன்று உடைந்து சிதறிக் கொண்டிருக்கிறது. இதுவரை, இது அவமானமாகக் கருதப்பட்ட தொழில், இன்று மானத்தோடு வாழ அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஆனாலும், அந்த இளைஞனின் கோபம் நியாயமானதுதான், செலுத்த வேண்டிய திசைதான் வேறு.

மதியத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் ரெங்கநாதன் தெரு.

 

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க