ந்த ஆண்டுடன் தான் உற்பத்தி செய்து வரும் கார்களில் 6 வகைகளை நிறுத்தவிருப்பதாகவும், ஐந்து உற்பத்தி ஆலைகளை மூடவிருப்பதாகவும் அறிவித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். அதே போல் முஸ்டாங் எனும் ஒரு மாடலைத் தவிர பிற அனைத்து மாடல் கார்களின் உற்பத்தியையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது ஃபோர்டு நிறுவனம். தங்களுடைய நிறுவனம் தன்னோட்ட (Self Driving) தொழில்நுட்பம் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களிலும் கவனத்தைக் குவிக்கும் என ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

கார்கள் வாங்கும் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எஸ்.யூ.வி. மற்றும் கிராஸ் ஓவர் வகை கார்கள் மற்றும் பிக்கப் டிரக் வகை கார்களையே மக்கள் அதிகம் விரும்புவதாகக் குறிப்பிடும் இந்நிறுவனங்கள் மேற்கொண்டு சிறிய ரக கார்களின் மேல் அதிக கவனத்தைக் குவிப்பது தேவையில்லை என்கின்றன. இது ஓரளவுக்கு உண்மை என்றாலும் இதையும் தாண்டிய வேறு காரணங்களும் உள்ளன.

வட அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் இளைஞர்கள் ஓட்டுனர் உரிமம் பெரும் சதவீதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. உதாரணமாக, 1983-ல் 92 சதவீத அமெரிக்க இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருந்தனர். இது 2014-ல், 77 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போல் ஜெர்மனியில் 17-ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவது மூன்று இலட்சமாக கடந்த பத்தாண்டுகளில் குறைந்துள்ளது.

இதற்கு சொல்லப்படும் காரணங்களில் பயணப் பகிர்வு சேவை வழங்கும் ஊஃபர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியும், தன்னோட்ட கார் தொழில்நுட்பமும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இதில் பிந்தையது இன்னும் பரவலாகவில்லை. முதலாவதாக சொல்லப்படும் காரணமான பயணப் பகிர்வைப் பொறுத்த வரை சொந்தமாக கார் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் கூட்டாக வாடகைக் கார்களைப் பயன்படுத்திக் கொள்வதில் பொருளாதார அடிப்படையும் உண்டு. பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி உலகெங்கும் வேலை வாய்ப்பின்மையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளந்தலைமுறையினர் மேலும் மேலும் பொதுப் போக்குவரத்துகளை நாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனரே அன்றி, சொந்தமாக கார் வாங்கும் போக்கு குறைந்து வருகின்றது.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

மற்றொரு காரணமாக சுட்டிக் காட்டப்படும் தன்னோட்டக் கார் தொழில்நுட்பம் இன்னும் பரவலாக சந்தைக்கு வரவில்லை. எனினும், இந்தப் போக்கு எதிர்காலத்தில் கார்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து விடும் என்பதைப் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். உதாரணமாக இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். மேற்குலகில் ஒவ்வொருவரும் தங்களது பணி இலக்குக்கோ அல்லது பள்ளி கல்லூரிகளுக்கோ செல்ல தனித்தனி கார்களை வைத்துக் கொள்வது வாடிக்கை.

இதே தன்னோட்ட கார்கள் புழக்கத்துக்கு வரும் போது இந்த போக்கில் மாறுதல் உண்டாகும். குடும்பத் தலைவர் அல்லது தலைவி தனது பணி இலக்கிற்குச் சென்ற பின் தனது தன்னோட்டக் காரை வீட்டுக்கு அனுப்பி குழந்தைகளை அதே காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யலாம். அதே கார் மாலையில் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரவும், முன்னிரவில் குடும்பத் தலைவரை பணியிடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வரவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு ஓட்டுநரை இதற்காக பணிக்கமர்த்திக் கொள்ளவும் தேவையில்லை.

தொடரும் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறம் தனிப்பட்ட முறையில் கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை குறைத்து வரும் நிலையில், கூட்டுப் பயணப் பகிர்வு சேவை வழங்கும் நிறுவனங்கள் பல புதிதாக துவங்கப்பட்டு பரவலாகி வருகின்றது. இந்நிலையில் தன்னோட்டக் கார்கள் மூன்றாம் உலக நாடுகளில் புழக்கத்துக்கு வர ஒரு சில ஆண்டுகள் கூடுதலாகலாம் என்றாலும், முன்னேறிய நாடுகளில் நான்கு கார்களின் இடத்தை ஒரே கார் நிரப்பும் வாய்ப்பை வழங்குகின்றது. இதனால், ஒட்டுநர் சம்பளத்தில் இருந்து நான்கு கார்களுக்கான பராமரிப்பு என பொருளாதார ஆதாயங்களும் உண்டு.

மாறி வரும் சூழலில் ”நீங்களே உங்கள் பயணங்களைப் பார்த்துக் கொள்ளவும்” (do-it-yourself transportation) என்பதில் இருந்து பொதுப் பயணங்கள் (do-it-for-me) என்று மாறி வருகின்றது. தன்னோட்ட தொழில்நுட்பம் மேலும் வளர்ந்து நடைமுறைப் பயன்பாட்டுக்கு வரும் போது இந்த போக்குகள் இன்னும் வேகமெடுக்கும். இதன் விளைவாக அடுத்த பத்தாண்டுகளில் கார்களின் பயன்பாடு 20-ல் இருந்து முப்பது சதவீதம் வரை குறைந்து போகும் என கணிக்கப்படுகின்றது.

கார் உற்பத்தியின் சரிவு ஆலைகளின் கதவடைப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு என நேரடி கார் தயாரிப்பு நிறுவனங்களை மட்டும் பாதிக்கப்போவதில்லை. கார் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்யும் சிறு குறு நிறுவனங்களையும் அத்தொழிற்சாலையால் மறைமுகமாக வேலை வாய்ப்புப் பெற்று வந்தவர்களையும் பாதிக்கவுள்ளது. ஒருபுறம் புதிய தொழில்நுட்பங்களின் வருகையை எதிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், மறுபுறம் இதே பொருளாதார அமைப்புக்குள் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்து கொடுக்காமல் இருப்பது அவர்களைக் கடுமையாக பாதிப்பதாக இருக்கும்.


சாக்கியன்
நன்றி: scroll.in

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க