மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள போரியா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் போராளிகள் 16 பேரை கடந்த ஞாயிரன்று (22.04.2018) சுட்டுப் படுகொலை செய்துள்ளது அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசு. கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களை மீட்டு அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலிசு தெரிவித்துள்ளது. மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு, மாநில டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதில் எவ்வளவு பேர் மாவோயிஸ்டுகள், எவ்வளவு பேர் பழங்குடி மக்கள் என்பது யாருக்கும் தெரியாது. போலீஸ் சொல்லும் செய்தியைத்தான் ஊடகங்கள் அப்படியே வெளியிடுகின்றன. இதற்கு முன்னர் நடந்த பல என்கவுண்டர்கள் போலி மோதல் என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று (24.04.2018) அதிகாலையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 6 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக் கொல்லப்பட்டதாக மராட்டிய போலீசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 22.04.2018 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயத்துடன் தப்பிச் சென்ற 11 மாவோயிஸ்டுகளின் உடல்கள் ஆற்றில் மிதந்து வந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது மராட்டிய போலீசு. கடந்த மூன்று நாட்களுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டு தோழர்களின் எண்ணிக்கை 36-ஐ எட்டி’யிருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் 6 பெண் போராளிகள் உள்பட 10 மாவோயிஸ்டுகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலை குறித்து தெndங்கானா மாநில போலிசு உயரதிகாரி ஒருவர் “சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள புஜாரி காங்கேர் வனப் பகுதியில் நக்ஸல்கள் முகாமிட்டு இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவல் அதனடிப்படையில், அந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். ஓர் இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்தோம்” என்று விளக்கமளித்தார்.
இதுபோன்ற எண்ணற்ற படுகொலைகள் மாவோயிஸ்ட் போராளிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. “தனது உயிருக்கு ஆபத்து வரும்போதுதான், எவர் ஒருவரையும் சுட்டுக் கொல்லும் உரிமையை போலீசாருக்கு சட்டம் வழங்குகிறது” இதனைப் பயன்படுத்தி தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஆயுதங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்கிறது போலிசு படை. இப்போது நடந்த சம்பவங்களில் பல தோழர்கள் போலிசால் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்று கூறுகிறார்கள். உண்மையில் தேச விரோதிகள் யார்? யார் சட்டத்தை மீறுகிறார்கள்? மத்திய இந்தியாவின் வனப்பகுதியிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றி விட்டு அவற்றை ஆக்கிரமித்து பல லட்சம் கோடி மதிப்புள்ள தாதுப்பொருட்களை இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக சட்டதிருத்தங்களை செய்து கொள்ளைக்கு வழிவகுக்கும் அரசா? அதை தடுத்து இயற்கை வளங்களை காக்கப் போராடும் மாவோயிஸ்ட்களா? மாவோயிஸ்டுகளின் தலைமையை ஏற்று அணிதிரளும் பழங்குடி மக்களா?
முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு கொண்டு வரும் ஒப்பந்தங்களை, திட்டங்களை நடைமுறைப்படுத்த தடையாக இருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள் என்பதனாலேயே காட்டுமிராண்டித்தனாமான தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறது இந்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் போலிசு படை.
மாவோயிஸ்ட் அமைப்பில் ஒருவர் இருக்கிறார் என்பதாலேயே அவரைக் கைது செய்ய முடியாது என்று கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் மாவோயிஸ்டு என்றாலே அவரைக் கொல்லலாம் என்று ஜனநாயகத்தை கேலி செய்கிறது போலிசு. எப்பொழுதெல்லாம் போலிசு அத்துமீறி மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்துகிறதோ அதை கண்டுகொள்ளாமலும் விட்டிருக்கிறது நீதிமன்றம்.
மாவோயிஸ்டுகள் ஆயுதம் வைத்து இருக்கிறார்கள்.அவர்களை சுட்டுப் பிடிப்பதை தவிர வேறு வழியில்லை என்று சிலர் கூறலாம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், காவிரி, நெடுவாசல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு போராடும் மக்களை மட்டும் இவர்கள் கண்ணியமாக நடத்துகிறார்களா? இல்லை. தடியடி, எண்ணற்ற பொய் வழக்குகள் போட்டு மக்களை நசுக்குகிறார்கள். போராடுகின்ற மக்களுக்கு ஆதரவாக உள்ள ஜனநாயக சக்திகளையும், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறையைத்தான் ஏவிவிடுகிறது அரசு.
மாவோயிஸ்டு கட்சியினரும் அவ்வப்போது போலீசைத் திருப்பித் தாக்கினாலும், அவர்களால் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி மக்களை அணிதிரட்ட முடியாமல் உள்ளது. மக்களை அரசியல் படுத்தி எழுச்சிப் போராட்டம் நடத்தாமல் மாவோயிஸ்டு கட்சியினரும் குறிப்பிட்ட பகுதிகளைத் தாண்டி பரவ முடியாது என்பதையும் இச்சோக சம்பவங்கள் உணர்த்துகின்றன. இருப்பினும் தன்னுயிரை ஈந்து நாட்டிற்காக போராடும் அத்தோழர்களை ஏதோ பயங்கரவாதிகள் போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
மாவோயிஸ்டுகள் மீதான படுகொலை முதல் மக்களின் உரிமைக்கான போராட்டம் வரை தனது எல்லா நடவடிக்கைகளிலும் அரசும், போலீசும், நீதித்துறையும் அப்பட்டமாக ஜனநாயகத்துக்கு எதிராகத்தான் உள்ளது. அதுதான் அன்றாடம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலும், மாவோயிஸ்ட் தோழர்கள் மீதான தாக்குதலும். இவை இரண்டும் வேறு வேறல்ல- என்பதை இந்த போலி ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்டோர் உணரவேண்டிய தருணமிது!
– வினவு செய்திப் பிரிவு.