“தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா…? மக்களா…?” என்ற முழக்கத்தை முன்வைத்து 23.04.2018 அன்று காலை மக்கள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை “ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு” ஒருங்கிணைத்தது. மடத்தூர் பகுதியில் தொடங்கிய இப்பேரணியின் இறுதி நிகழ்வாக சிப்காட் அலுவலகத்திலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் அனைத்து கிராமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

கொடுக்கப்பட்ட மனுவில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:

       ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு:9944246063,6380010462,9003553557

நாள்.23.04.2018

பெறுநர் :

1.மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அவர்கள்
மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  தூத்துக்குடி.

2.துணை இயக்குநர் அவர்கள்
சிப்காட், தூத்துக்குடி.

ய்யா,

பொருள்:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, தூத்துக்குடி சிப்காட்டை விட்டு வெளியேற்றக் கோரி மனு

கடந்த 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் துவங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர் மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், கர்பப்பை சிதைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

மேற்படி பாதிப்புகளால் நூற்றுக்கணக்கனோர் இறந்து விட்டனர்.எங்கள் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கின்றன.இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகி விட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் சிப்காட்டில் செயல்பட்டால் நாங்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் சூழல் ஏற்படும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கண்டறியப்பட்டு  ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாகி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்றுவருகிறது.1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லைட்டில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாகும். இந்தியாவின் மொத்த தேவை ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் எனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.

வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின்  விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.

சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற  நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.

எனவே, பணக்கார நாட்டு மக்கள் சுகாதாரமாய் வாழ தமிழகத்தின் ஏழை மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு Writ Pétitions No. 15501 to 15503 of 1996.

5769 of 19 7& 16861 of 1998 வழக்குகளில் “ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை” பிறப்பித்தது. மேற்படி தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

கடந்த 2013-ல் CIVIL APPEAL Nos. 2776-2783 OF 2013ன் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் பத்தி 42-ல்

“By this judgment, we have only set aside the directions of the High Court in the impugned common judgment and we make it clear that this judgment will not stand in the way of the TNPCB issuing directions to the appellant-company, including a direction for closure of the plant, for the protection of environment in accordance with law.” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இல்லை.

மேலும் ஸ்டெர்லை ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்குவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.

இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் அரசியல் சட்டக் கடமையாகும்.

ஆகவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து,தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு,பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கு.வி.ந.பிரிவு.133-ன் கீழ் நிரந்தரமாக மூடி,தூத்துக்குடி சிப்காட்டை விட்டு உடனே வெளியேற்ற வேண்டுகிறோம்.

இவண் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 99442 46063,63800 10462,90035 53557.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க