ரேஷனைக் காப்பாற்றுவோம் : இந்தியாவிற்கு வழிகாட்டும் ஜார்கண்டு மக்கள் போராட்டம் !

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கு கோடிகோடியாய் வாரிக் கொடுக்கும் மோடி அரசு, ஆதார் இணைப்பு, நேரடி மானியத் திட்டம் என்ற போர்வையில் பொது மக்களின் வயிற்றில் அடிக்கிறது.

நேரடி மானியத் திட்டம் : ரேஷன் அரிசிக்கும் வந்தது ஆபத்து !

”ரேஷனைக் காப்பாற்றுவோம்!”- ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் வேர்விட்டிருக்கும் இந்த முழக்கமும் இதனை முன்னிறுத்தி அம்மக்கள் நடத்தத் தொடங்கியிருக்கும் போராட்டமும் அம்மாநிலத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அரிசிக்கும் கோதுமைக்கும் வழங்கப்படும் மானியத்தைக் கைவிடச் சொல்லி உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசை நிர்பந்தித்து வரும் வேளையில், நேரடி மானியம் என்ற குறுக்கு வழியில் உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாண்மையை இந்திய அரசு நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கும் வேளையில், ஜார்கண்டு பழங்குடியின மக்கள் முன்வைத்திருக்கும் முழக்கமும் போராட்டமும் இந்தியாவெங்குமே பொருந்தக்கூடியதாக, உழைக்கும் மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்கக்கூடியதாக உள்ளது.

சமையல் எரிவாயு விநியோகத்தில் நாடுதழுவிய அளவில் புகுத்தப்பட்டிருக்கும் நேரடி மானியத் திட்டத்தை – வங்கிக் கணக்கில் மானியத்தைப் போடும் திட்டத்தை – ரேஷன் பொருள் விநியோகத்திலும் புகுத்தத் திட்டமிட்டுள்ள மோடி அரசு, பாண்டிச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட தனது அதிகாரத்துக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களிலும், ஆந்திரா, ஜார்கண்டு ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மற்ற பகுதிகளைவிட, ஜார்கண்டு மாநிலத்தில், அதன் தலைநகர் ராஞ்சிக்கு அருகே அமைந்துள்ள நாக்ரி வட்டாரத்தில்தான் பெரிய அளவில் இப்பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏறத்தாழ 12,500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்கள் ரேஷன் கடையில் சந்தை விலையில் அரிசியையும், கோதுமையையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

நாக்ரி வட்டாரத்தில் வசித்து வரும் இந்த 12,500 குடும்பங்களுள் ஆகப் பெரும்பான்மையினர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் கட்டிட வேலை, வெல்டிங் உள்ளிட்ட உதிரித் தொழில்கள்தான் இவர்களின் வருமானத்திற்கு அடிப்படை. இக்குடும்பங்கள் அனைத்திற்கும் அக்டோபர் 2017-க்கு முன்பு வரை அந்த்யோதயா உணவு விநியோகச் சிறப்புத் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி, கிலோ ஒரு ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வந்தது. முப்பந்தைந்து ரூபாயும், முப்பந்தைந்து கிலோ அரிசியைத் தூக்கிச் சுமந்து வரும் தெம்பும் இருந்துவிட்டால், அரிசியை வீட்டிற்குக் கொண்டுவந்துவிட முடியும்.

நேரடி உணவு மானியத் திட்டத்தின் கீழ் இந்த 35 கிலோ அரிசியை வாங்குவதற்கு, ஒரு கிலோ அரிசி ரூ.32.60 என்ற விலையில் 1,141 ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த 1,141 ரூபாயில் 1,106 ரூபாயை ஜார்கண்டு மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடும். அந்த 1,106 ரூபாயோடு 35 ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் அரிசி வாங்கிவர வேண்டும்.

”அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் 1,106 ரூபாயைப் போட்டுவிட்ட தகவல், ஒவ்வொருவருக்கும் அவர்களது கைபேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அத்தகவல் வந்த உடனேயே வங்கிக்குப் போய் பணத்தை எடுத்துக்கொண்டு, ரேஷன் கடைக்குப் போய் அரிசியை வாங்கிவிடலாம்” என மாநில அரசு கூறிவருகிறது. கேட்பதற்கு வெண்ணெயை வெட்டுவது போலச் சுலபமாகத் தெரியும் இந்தத் திட்டம், நடைமுறையில் அரிசி வாங்குவதைக் குதிரைக் கொம்பாக மாற்றிவிட்டதோடு, குடும்ப அட்டைகளை இழக்கும் நிலைக்கு அப்பழங்குடியின மக்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

முதலாவதாக, வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துவிட்ட தகவல் பெரும்பாலும் யாருக்குமே வருவதில்லை. இந்த விவரத்தை வங்கிக்கு நேரடியாகப் போய்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாக்ரி வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வங்கிக்குப் போய்திரும்புவது என்பது வெளியூருக்குப் போய்வருவது போன்றது. ஒரு முறை வங்கிக்குச் சென்று திரும்ப நாற்பது ரூபாய் கையில் இருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கில் பணம் விழுந்துவிட்டாலும், அதனைச் சொந்தப் பணம் போல நினைத்த மாத்திரத்தில் எடுத்துவிட முடியாது. முதலாவதாக, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ரேஷன் அட்டை எனப் பல ஆதாரங்களையும் சான்றாவணங்களையும் பழங்குடியின மக்கள் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும், மறந்து வீட்டில் வைத்துவிட்டிருந்தாலும் பணத்தை எடுக்கமுடியாது.

இதற்கு அப்பால், பணத்தை எடுக்கப் போகும் நாளன்று வங்கியில் மின்சாரம் நின்றுபோகாமல் இருக்க வேண்டும். மின்சாரம் இருந்தாலும், இணைய தள சேவை தடையின்றிக் கிடைக்க வேண்டும். பணத்தை எடுக்கும் முன் அட்டைதாரரின் கைவிரல் ரேகை பெறப்படும். அந்த ரேகைப் பதிவும் ஆதார் அட்டைக்கு அளித்த ரேகைப் பதிவும் ஒத்துப் போக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று கோளாறு ஆனாலும் பணத்தை எடுக்க இன்னொரு நாள் போக வேண்டும். இப்படி மானியப் பணத்தை எடுப்பது என்பது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிரை எடுக்கப் போகும் சாகசப் பயணமாக மாறிவிட்டது.

சேட்டே கிராமத்தைச் சேர்ந்த ஜமுனா, ஒவ்வொரு மாதமும் மூன்று முறை – இரண்டு முறை பணம் வந்துவிட்டதா என விசாரிப்பதற்கு, மூன்றாவது முறை பணத்தை எடுப்பதற்கு – வங்கிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறுகிறார். வங்கிக்குச் சென்று திரும்பும் நாட்களில் ஜமுனா கூலி வேலைக்குச் செல்ல முடியாது. அந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து அவருக்கு 450 ரூபாய் கூலியிழப்பு ஏற்படுகிறது. ரேஷன் கடைக்குச் செல்லும் தினத்தையும் கணக்கில் சேர்த்தால் கூலியிழப்பு 600 ரூபாயாகிறது. வங்கிக்குச் சென்றுவர போக்குவரத்துச் செலவு 128 ரூபாய், பணத்தை எடுப்பதற்குச் சேவைக் கட்டணம் 40 ரூபாய் என ஆக மொத்தம் 168 ரூபாயைக் கையிலிருந்து செலவழிக்கிறார். கைக்குக் கிடைக்கும் 1,106 ரூபாய் மானியத்தில் கூலியிழப்பையும் சேர்த்து 768 ரூபாய் போக, அவருக்குக் கிடைக்கும் உண்மையான மானியம் 338 ரூபாய்தான். ஒரு ரூபாய் விலையில் வாங்கி வந்த ரேஷன் அரிசி, நேரடி மானியத் திட்டத்திற்குப் பிறகு ஜமுனாவிற்கு ஏறத்தாழ 23 ரூபாயாகிவிட்டது.

நாக்ரி பகுதியில் அக்.2017 மாதம் தொடங்கி நேரடி மானியத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. பிப்.2018 முடியவுள்ள ஐந்து மாதங்களில் ஒரேயொரு மாதம் தவிர, மற்ற மாதங்களுக்குரிய மானியத் தொகை ஜமுனாவிற்குக் கிடைத்துவிட்டது. ஆனால், பெரும்பாலோருக்கு ஜமுனாவிற்குக் கிடைத்த ‘அதிருஷ்டம்’ வாய்க்கவில்லை.

ஹல்ஹூ கிராமத்தைச் சேர்ந்த பெர்காவ் ஓரேனுக்குச் சேர வேண்டிய மானியத் தொகை வேறொருவரின் வங்கிக் கணக்கிற்குச் செல்கிறது. ஜனவரி 2018-க்குப் பிறகு அந்த மானியத் தொகையும் வரவேயில்லை.

புத்னி ஓரேனுக்கு டிசம்பர் 2017-க்குப் பிறகு மானியத் தொகை வரவேயில்லை. 32 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியை வாங்க முடியாத வறுமையில் வாடும் அவரது குடும்பம், வெளிச்சந்தையில் 19 ரூபாய்க்கு நொய்யரிசி வாங்கிப் பசியாறுகிறது.

வங்கிக்கு அலையமுடியாத நிலையில் உள்ள 78 வயது முதியவர் விநாயக் முண்டா நவம்பர் 2017-க்குப் பிறகு ரேஷன் அரிசி வாங்குவதையே கைவிட்டுவிட்டார். அவருக்கு இப்பொழுது புத்னி ஓரேன் குடும்பம்தான் கஞ்சி ஊற்றுகிறது.

உணவு உரிமைக்கான இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஜனவரி 2018-இல் நாக்ரி வட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வில், ஜனவரி உள்ளிட்டு நான்கு மாதம் வர வேண்டிய மானியத் தொகையில் ஆகப் பெரும்பாலோருக்கு இரண்டு மாதம் மட்டுமே மானியத் தொகை வந்திருப்பது தெரிய வந்தது.

மானியத் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. கடன் வாங்கியோ அல்லது வேறு வழிகளில் 1,141 ரூபாயைப் புரட்டியோ 35 கிலோ அரிசியை வாங்கிவிட வேண்டும். இல்லையென்றால், தமது குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் அநியாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.

சப்ரோன் கிராமத்தைச் சேர்ந்த பப்லு கச்சாப் தனது குடும்ப அட்டையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை, 32 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார். சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் திர்கி, ஜமுனா திர்கி உள்ளிட்ட பலருக்கு ரேஷன் அட்டையை ரத்து செய்யும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள முதியவரான ஜோசப் கெர்கெட்டாவிற்கு மானிய அரிசி மறுக்கப்பட்டதன் காரணமாகத் தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

343 குடும்ப அட்டைகள் பதியப்பட்டுள்ள வந்தேயா கிராம நியாயவிலைக் கடையில், ஜனவரி மாத்தில் வெறும் 200 குடும்ப அட்டைகளுக்குத்தான் மானிய அரிசி விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதத்திலும் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் குறிப்பிடும் அக்கடையின் நிர்வாகி அஸ்கர் அன்சாரி, ”இதைத்தான் இந்த அரசு விரும்புகிறதா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

இந்தக் கேள்விக்கு ஆம் என்பதைத் தவிர வேறொரு பதிலில்லை. ஆனால், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும் அதிகார வர்க்கமும் மானியம் கிடைப்பதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்துவிட்டால், நேரடி மானியத் திட்டம் போல யோக்கியமான திட்டம் வேறில்லை எனக் காதில் பூச்சுற்ற முயலுகிறார்கள்.

ரேஷன் பொருள் விநியோகத்தில் ஒட்டகம் என்றோ மூக்கை நுழைத்துவிட்டது. முதலில் ஏழைகளைக் காட்டி, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருள் விநியோகம் செய்ய வேண்டிய அரசின் சட்டபூர்வக் கடமையை ரத்து செய்தார்கள். அடுத்து, நேரடி மானியத் திட்டம் என்ற பெயரில் ரேஷன் விநியோக முறையிலிருந்து ஏழைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, ரேஷன் கடைகளையே மூடிவிடும் முடிவை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள். இந்த உண்மையை மூடிமறைப்பதற்காகவே ரேஷன் பொருள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே வங்கியில் மானியப் பணம் போடப்படுகிறது எனக் கதையளக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் முறைகேடுகளை ஒழிப்பதல்ல; மாறாக, உணவுப் பொருட்களைச் சந்தை விலைக்கு வாங்குவதற்குப் பொதுமக்களைத் தயார்படுத்தும் சூழ்ச்சியாகும்.

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் இதுதானே நடந்து வருகிறது. முதலில் சமையல் எரிவாயு உருளையின் விலையைச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பத் தீர்மானிக்கும் உரிமையை ஆயில் கம்பெனிகளின் அதிகாரிகளிடம் தூக்கிக் கொடுத்தது, மைய அரசு. அதனைத் தொடர்ந்து, நேரடி மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் உருளையைச் சந்தையின் விலைக்கு வாங்குவதற்குத் தயார்படுத்தப்பட்டனர். அதன் பிறகு, எரிவாயு உருளையின் விலையை மாதாமாதம் இரண்டு ரூபாய், நான்கு ரூபாய் என உயர்த்திக்கொண்டே போய் மானியத்தைப் படிப்படியாக வெட்டியதோடு, மார்ச் 2018-க்குள் எரிவாயு உருளைக்கு வழங்கும் மானியத்தை முற்றிலுமாக நிறுத்திவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலைதான் கூடிய விரைவிலேயே உணவுப் பொருள் விநியோகத்திலும் வரவிருக்கிறது. ஜார்கண்டு மாநில பா.ஜ.க. முதல்வர் ரகுபார் தாஸ், ”ரேஷன் கடைகளைப் படிப்படியாக மூடிவிட்டு, பொதுமக்களைச் சந்தையிலேயே உணவுப் பொருட்களை வாங்கத் தயார்படுத்த வேண்டும்” என அரசு விழாவில் வெளிப்படையாகவே பேசி, இந்தச் சூழ்ச்சியைப் பச்சையாகவே உடைத்துப்போட்டுவிட்டார்.

உணவுப் பொருட்களுக்கு மானியத்தைக் கைவிடுவது என்பது ஏழைகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல. அரிசி, கோதுமை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலையைத் தீர்மானித்து, அதன் கீழ் கொள்முதல் செய்யும் அரசின் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவிவிட்டு, விளைபொருட்களுக்கு விலையைத் தீர்மானிப்பதையும், அதனைக் கொள்முதல் செய்வதையும் முழுமையாக வர்த்தகச் சூதாடிகளிடம் ஒப்படைப்பதாகும்.

விவசாய விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலை கிடைக்காமல் விவசாயிகள் நட்டமடைந்து வரும் வேளையில், வேலையில்லாத் திண்டாட்டமும் வேலையிழப்பும் அதிகரித்து வரும் வேளையில், குறைந்தபட்ச கூலிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருந்துவரும் வேளையில், உணவுப் பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை ரத்து செய்வது ஏழைகளைப் பட்டினியில் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு வரித் தள்ளுபடிகள், மானியங்கள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன், கடன் தள்ளுபடி என விதவிதமாகச் சலுகைகளை வாரிவழங்கும் அரசும் அதிகார வர்க்கமும் ஏழைகளுக்குத் தரப்படும் உணவு மானியத்தை அடியோடு ரத்து செய்து, அவர்களின் வயிற்றில் அடிக்கத் துணிகிறது. சேமநல அரசு என்ற சல்லாத் துணியையும் களைந்துவிட்டு, பொதுமக்களின் எதிரியாக நம் முன் நிற்கிறது.

இந்தச் சதித்தனத்தை எதிர்த்துதான், இந்திய மக்களின் உணவு உரிமையை நிலைநாட்டும் பொருட்டுத்தான் ஜார்கண்டு மாநிலப் பழங்குடியின மக்கள் ரேஷனைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடத் தொடங்கியிருக்கின்றனர். இதன் முதல்கட்டமாக, கடந்த பிப்ரவரி இறுதியில் ஜார்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியில் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ஜார்கண்டில் எழுந்துள்ள சிறுபொறி பெருங்காட்டுத் தீயாக மாறட்டும், இந்தியாவெங்கும் பரவட்டும்!

– ரஹீம்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க