#savetamiljournos : எஸ்.வி.சேகர் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் பணி நீக்கமா ?

தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி. சேகர் வன்மத்துடன் அவதூறு பொழிந்தார். அதை பகிர்ந்தேன், படிக்கவில்லை, மன்னிக்க என்று நாடகமாடினார். இதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராடினார்கள். சிலர் பா.ஜ.க அலுவலகத்தில் மனுக் கொடுத்தார்கள். சிலர் அதைத் தாண்டி சேகர் வீட்டின் முன்பு நியாயம் கேட்டு போராடினார்கள். கூடவே அந்த வீட்டுக் கதவின் மீது இரண்டு கற்களை வீசினார்கள். #savetamiljournos

உடனே மேட்டுக்குடி ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலருக்கு கோபம் வந்து விட்டது. எப்படி ஒரு பத்த்திரிகையாளர் தனது தொழில் அறத்தை மீறலாம் என்று துள்ளினார்கள். தங்களது கோழைத்தனத்தையே மற்றவரிடம் எதிர்பார்க்கும் இந்த காரியவாதிகள்தான், உண்மையில் ஜெயலலிதா போன்ற ஒடுக்குமுறையாளர்களை இதயத்தில் வைத்து போற்றுபவர்கள்.

இடையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கு ஒரு தொலைக்காட்சி நிர்வாகம் முயல்வதாக செய்தி வந்திருக்கிறது.

பா.ஜ.க தூண்டுதலில், தொலைக்காட்சி நிர்வாகங்கள் அப்படி நீக்கினால் தமிழ் சூழலில் ஒரு பத்திரிகையாளர் மக்கள் நலனோடும், முற்போக்கு பார்வையோடும் செயல்படுவதற்கான இடமே இருக்காது என்பது உண்மை.

தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

*****

Kavin Malar

உரக்கச் சொல்வோம்…
“முதல் கல்லை நாம் எறிந்திருக்கிறோம்”. காலணியை முதலில் கழற்றி எறிந்தது ஒரு பெண் பத்திரிகையாளர்தான். கண்ணில் பொங்கும் நீருடன் அந்தக் காரியத்தைச் செய்தார் அவர். அந்தக் கண்ணீரைவிட பலருக்கு கல்தான் பெரிதாகிவிட்டது.

சொல்லடியைவிட கல்லடி பெரிதல்ல தோழர்களே!

Divya Bharathi

காவேரி நியூஸ் சேனலின் இந்த கம்பீரமான அறிவிப்பு பெரும் நம்பிக்கை தருகிறது. மனதார அந்த நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன். இதுவே ஊடக அறம்.❤
பெரும் டீவி சேனல்கள் காவேரி நியுஸ் சேனலிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்.

பொறுக்கிகளுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து தங்கள் ஊழியர்களை பழிவாங்கும் முயற்சியில் இறங்கும் பெரும் டீவி சேனல்களை நினைக்கையில் கேவலமாக இருக்கிறது. ஊடக நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த சேனல்களை ஒட்டுமொத்தமாக நாம் புறக்கணிப்போம்.

மு.வி.நந்தினி

வேளாண் குடும்பப் பின்னணியில்(பெரும்பாலும்) பிறந்து அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்குப் போகாத தலைமுறையில் முதல் ஆளாக கல்லூரிக்குள் நுழைந்து, ஊடகப்பணி என்றால் என்னவென்று தெரியாத பெற்றோரிடம் விளக்கம் கொடுத்து, பத்து ஊடகங்களின் வாசலில் காத்திருந்து, ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்காக இரவு 11 மணி வரை உழைத்து, ஆமாம் திறமையால் மட்டுமெ முன்னேறி, ஏகப்பட்ட ஒடுக்குமுறைகளை சகித்து, வேலையிழந்து, மீண்டும் வேலைகிடைத்து முழுமையாக இல்லாவிட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் சமூகத்துக்கா எழுதும் பெண் பத்திரிகையாளர்க(ஆண்களும்தான்)ளை படுத்தால்தான் பிழைக்க முடியும் என அவதூறு செய்தால் சுரணையில்லாமல் இருப்பார்களா?

kural

கல் எறிவது யார்?

பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனின் கேள்விக்கு பதிலாக கன்னத்தை தட்டிய ஆளுநரின் சீரழிந்த செயலுக்கு கடுமையன கண்டனம் எழுந்தது. மன்னிப்புக் கேட்டார் ஆளுநர். ஒரு பெண் தன் பணியிடத்தில் தன் விருப்பமில்லாமல் பெண் என்பதற்காகவே ஒரு ஆணால் சீண்டலுக்கு உள்ளாவது தண்டனைக்குரிய குற்றம். மேதகு ஆளுநர் என்ற காரணத்துக்காக மன்னிப்பு கேட்டவுடன் இந்த விவகாரம் கைவிடப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை செய்தியாளரை பாலியல் சீண்டல் பேச்சுக்களை உதிர்த்தபோதும் இதேதான் நடந்தது. ’வருத்தம்’ மட்டுமே தெரிவித்தார் அவர். இதுவே தாரளவாத பத்திரிகையாளர்கள் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் நடந்திருந்தால் தொடர்புடையவர்கள் பதவி விலகலுக்கு உள்ளாகி இருப்பார்கள்.

பாலின சமத்துவம் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்நாட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் இரண்டாம்பட்சமான பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒருவேளை, அடுத்தடுத்த நடந்த இந்த இரண்டு பிரச்னைகளையும் பத்திரிகையாளர்கள் மிகத் தீவிரமான எதிர்வினை ஆற்றியிருந்தால், ஆளுநரே மன்னிப்புக் கேட்ட பின்பும், ஆளுநரை நியமித்த பாஜக அரசின் விசுவாசிகள் பெண் பத்திரிகையாளர்களை இத்தனை மோசமாக அவதூறு செய்திருக்க மாட்டார்கள் என்கிற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.

பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனிடன் ஆளுநர் மன்னிப்பு கேட்டபின் ட்விட்டரில் அவருக்கு எதிராக மிகக் கீழ்த்தரமான பதிவுகள் போடப்பட்டன. பொதுவெளியில் இயங்கும் பெண்கள் பொதுமகளீராகவே இருக்கக்கூடும் என்கிற பழமைவாதிகளின் குரலாக அவை ஒலித்தன. இதையெல்லாம் பாஜகவின் ட்ரோல் படை செய்துகொண்டிருந்தது. இந்த ட்ரோல்கள் குரலை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சினிமா அரசியல் பிரபலமாக அறியப்பட்ட எஸ். வி. சேகர் அகமகிழ்ந்து பகிர்கிறார். (மன்னிப்பு கடித்தத்தில் படிக்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சொல்வதை அவர் பகிர்ந்திருந்த மூவர்ணகொடியே காட்டிக்கொடுத்துவிடுகிறது).

பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டதற்காக ஆளுநர் தன் கையை கழுவ வேண்டும் என்கிற சாதிய மனோநிலையுடன் தொடங்கும் அந்தப் பதிவு பெண் ஊடகவியலாளர் படுக்கையை பகிர்ந்துகொள்ளாமல் முன்னேற முடியாது என சங்கராச்சாரியின் கருத்தை குமட்டி எடுத்து முடிகிறது. இந்தப் பதிவு சில மணி துளிகளிலேயே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி, தன் முகநூல் கணக்கையே முடக்கிவிட்டுப் போய்விட்டார் எஸ். வி. சேகர். ‘குரல்’ அமைப்பு எஸ். வி. சேகர் கைது செய்யப்பட வேண்டும் என முதல் முழக்கத்தை எழுப்பியது. பல பத்திரிகையாளர்கள் இதே கருத்தை காட்டத்துடன் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பல பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் கொடுப்பதென்றும் முடிவெடுக்கின்றன.

மத்திய அரசிலும் மாநில அரசிலும் எஸ். வி. சேகர் ‘செல்வாக்கு’ குறித்து ஊடகவியலாளர்கள் அறியாமல் இருக்க முடியாது. அவரை கைது செய்ய வேண்டும் என்கிற குரலைக்கூட அழுத்தமாக வைக்காமல் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு சில ஊடக அமைப்பினர் திரும்பினர். அரசியல்பாதிகள், சமூக ஊடகங்களில் இயங்குகிறவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் என பல தளங்களில் இயங்கும் பெண்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் என்கிற சித்தாந்தத்துடன் அவதூறு செய்யும் பாஜக-சங் பரிவார கும்பலின் மீதான ஒட்டுமொத்த கோபத்தின் விளைவாக எஸ். வி. சேகரின் வீட்டு முன் சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பேருந்திலோ, அலுவலகத்திலோ பாலியல் சீண்டலுக்கும் அவதூறு சொற்களுக்கும் உள்ளாகும் பெண்கள் இ.பி.கோ சட்டங்களை சிந்திப்பதில்லை. செருப்பை கழற்றி அடிப்பது தான் நடைமுறை. தன்மானமுள்ள செயல். எஸ்.வி.சேகர் வீட்டின்முன் கல் எறியப்பட்டதும் இப்படித்தான் இயல்பாக நடந்தது. அழுதுகொண்டே ஒரு பெண் பத்திரிகையாளர் தான் செருப்பை கழற்றி எறிந்தார். எவருக்கும் காயம் ஏற்படாதபட்சத்தில் இந்தப் போராட்டங்களில் என்ன தவறு இருக்க முடியும்? எஸ். வி. சேகர் வீட்டுக்கு வெளியே எவரும் இல்லை என்பதை அறிந்துதான், தங்களுடைய கடுமையான எதிர்வினையை தெரிவிக்க இரும்பு கேட்டின் மீது கல்லெறிகிறார்கள் போராட்டக்காரர்கள். இரும்பு கேட்டுக்கேகூட வலிக்காதபோது சில லிபரல் ஊடகவாதிகள் அறம் அறுந்துவிட்டதாக கதறுவது எஸ். வி. சேகர் கும்பலுக்குத்தான் சாதகமாக உள்ளது.

போராடுவதுகூட தெரியாமல் போராடி யாருடைய மனதும் புண்படக்கூடாது என்கிற தெளிவுடன் இவர்கள் நடந்துகொள்வது எப்போதும் சங் பரிவார் கும்பலுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. இப்போதும்கூட இரும்பு கேட்டுக்குக்கூட வலிக்காத நியாமான உணர்வை ‘வன்முறை’யாக சித்தரித்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிறு அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன. இந்த சிறு ஊடகங்கள் செய்யும் பணியை, பெரும் ஊடகங்களில் முதலாளிகளுக்கு பயந்துகொண்டே பணியாற்றுகிறவர்களால் செய்ய முடியாது. நிதர்சனம் இப்படியிருக்க, சிறு ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் ‘தூய்மைவாதம்’ இங்கே கட்டமைக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த தூய்மைவாதம் பார்ப்பனியத்தை ஒத்தது!

ஜல்லிக்கட்டில் நடந்த ‘வன்முறை’, ஐபிஎல் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’, பத்திரிகையாளர் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’ என போராட்டக் களங்களில் நடப்பைகளை ‘வன்முறை’ யாக சித்தரித்து காட்டிக்கொடுப்பவர்கள் கூடவே இருக்கிறவர்கள் என்னும்போது இத்தனை நாளும் நீங்கள் பேசிய ‘அறங்கள்’ வீழ்ந்துவிடுகின்றன. ஒடுக்கும் அரசுக்கோ அவதூறுகளை ஓயாது செய்யும் பரிவார கும்பலுக்கோ நீங்கள்தான் குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். சகோதரத்துவ முரண்பாடுகளுடன் இதைத் தெரியாமல் செய்கிறீர்களா? அல்லது கும்பல்களுக்கு செய்தி சொல்கிறவர்களாக இருக்கப்போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

– குரல்
Journo’s voices for the masses

Kavin Malar

டிவிட்டரில் எஸ்.வி.சேகரிடம் மன்னிப்பு கேட்ட சில ஆங்கில ஊடகவியலாளர்களின் செயல் புல்லரிக்க வைக்கிறது. சேகர் போன்றவர்களிடம் மன்னிப்பு கேட்பதன்மூலம் எதை நிறுவுகிறார்கள் இவர்கள்? சக பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுக்க வக்கற்றவர்கள் எதிரியிடம் சரணடைவது கல்லெறிந்தோரின் மீது வீசப்படும் சேறுதான். கல்லெறிந்த 30 பேரில் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கத் தயாரில்லாதபோது ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களுக்கும் தங்களை பிரதிநிதிகளாக உங்களை நீங்களே எப்படி கருதிக்கொண்டீர்கள்?
பத்திரிகையாளர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதாக‌ எப்படி நீங்கள் எண்ணிக்கொள்கிறீர்கள்?

Arul Ezhilan

ஒரு வெறிநாய் தெருவில் வருகிற போகிறவர்களையெல்லாம் கடிக்குமாம், விரட்டுமாம். அதற்கு பயந்துகொண்டு வெளியே வராமலா இருக்க முடியும்? அந்த வெறிநாயை என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நம் ஊடகத் தோழர்கள் செய்திருக்கிறார்கள்.

தங்கள் சுயமரியாதைக்காகவும், தங்கள் ஊடகப்பணியின் மாண்பைக் காக்கவும் நம் ஊடகத் தோழர்கள் போராடி இருக்கிறார்கள்.இந்துத்துவாக் கும்பலின் அழுத்தங்களுக்கும், அதிகாரத்துக்கும் பணிந்து, ஊடக முதலாளிகள் போராடிய ஊடகத் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவார்களேயானால், அவர்களுக்கு நாம் ஒன்றை அழுத்தமாகச் சொல்லிக் கொள்வோம்.

“மக்கள் போராடியவர்கள் பக்கம் இருக்கிறார்கள்!”

#savetamiljournos

Kavin Malar

ஆங்கில ஊடகங்களில் பணிபுரிவோர்தான் இத்தகைய மன்னிப்பு கேட்டுள்ளனர். சேகரின் வீட்டின் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தோரில் ஒரேயொரு ஆங்கில ஊடகவியலாளர் கூட இல்லை. ஒரேயொரு பார்ப்பனர்கூட இல்லை. யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இங்கே ஆங்கில தமிழ் ஊடகங்களுக்கிடையே இருக்கும் பாரதூர வேறுபாடுகள் வெளிப்படையானவை. அவற்றை வெகுகாலத்திற்கு மறைக்க முடியாது. இது குறித்து இங்கு பொதுவாக யாரும் பேசுவதும் இல்லை, ஒரு சிலரைத் தவிர. சிலர் கேட்கிறார்கள். ஏன் இப்படி பதிவுகளை போடவேண்டும்? நம் ஒற்றுமை குலையுமில்லையா என்கின்றனர். என்ன ஒற்றுமை வாழ்கிறது இங்கே..அது குலைவதற்கு? சிலவற்றை உடைத்துப்பேச வேண்டிய கட்டாயத்திற்கு இந்தப் போராட்டம் நம்மைத் தள்ளியிருக்கிறது.

மகிழ்நன் பா.ம

எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லுட்டது ரவுடித்தனம்னு நியூஸ்18 தமிழ் ஊடகத்தை மிரட்டி பார்க்குது காவி கும்பல்….

இறந்து போய்விட்ட பெரியாரின் சிலை மீது கைவைப்பேன் என்று சொன்ன கும்பலுக்கெதிராக, அவர் விதைத்த சுயமரியாதையோடு கொதித்த தமிழ்ச்சமூகம்,

களத்திலும், தங்கள் வேலையினூடாகவும் வினையாற்றும் ஊடகவியலாளர்களை காக்க இந்த #savetamiljournos எனும் ஹேஷ் டேக்கின் கீழ் பதிவு செய்யுங்கள்…

பணி பாதுகாப்பு தொழிலாளர்களின் உரிமை, அதை மோடி கும்பலோ, மோடியின் அல்லக்கைகளோ பறிப்பதை நாம் அனுமதிக்க கூடாது…..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை

அன்புடையீர் வணக்கம்,

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.

எஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்திற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.

ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.

ஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.

தற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் – எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும்.

எஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது, நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.

– கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Radhika Sudhakar

பார்ப்பன இந்திய இந்து சேகருக்கும் அவர் மீது மென்மை காட்டக் கூடியவர்களுக்கும் ஒரு கேள்வி. ஆண்களே தவறாக நடந்து கொண்டாலும் பெண்களின் ஒழுங்கீனம் என வர்ணிக்கும் சேகரின் இந்து மத ‘முற்போக்கு’ கண்டும் அறிவுத்திறமையை கண்டும் வியந்தேன். என் கேள்வி ஒன்று தான். சில காலம் முன்பு வரை அனைத்து ஆண் ஊடகர்களின் நண்பராக காட்டிக்கொண்ட சேகர், சில காலம் முன்பு, மிக பழங்காலம் அல்ல, சில காலம் தான், அவர் துறையை சார்ந்த பார்ப்பனரின் மனைவி பாடகி சுசித்ரா ஒரு மிகப்பெரிய அநீதி தன் துறை ஆண்கள் மூலமாக நடந்து வருவதாகவும் தான் சந்தித்து வருவதாகவும் பொது வெளியில் கூறினார்.

அப்பொழுது அவர் வாய் எங்கே சென்றது ? அவர் துறை தானே அது ? மிக வெளிப்படையான குற்றச்சாட்டு தானே அது! அப்பொழுது என்ன செய்தார் சேகர்? அவரது துறையே மூடி மறைத்த ஒன்றுக்கு அவரும் உடந்தையாக இருந்துவிட்டு இன்று பெண்களின் நடத்தையைப் பற்றி பேச இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கின்றது? ஆனால் ஒரு பார்ப்பனரல்லாத பெண் ஊடகரிடத்தில் ஆளுநரின் சகிக்க முடியாத செயல்பாடு குறித்துக் கண்டித்ததும், அந்த செயல்பாடு கணடனத்திற்கு வந்தவுடன் ஊடக பெண்களின் நடத்தை பற்றி கேவலமாக பேசி ஆனந்தப்பட்டார் !

அப்பொழுது பார்ப்பன பெண்கள் தங்களை இதில் ஒரு பகுதியாக குறிப்பிட்டதாக பார்க்கவில்லையா? தன் துறையில் ஆண்கள் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு சேகரோ அல்லது இன்று கல் எறிந்துவிட்டார்கள் என்று ஆத்திரப்படும் ஊடகத்துறை பார்ப்பன பெண்களோ என்ன செய்துவிட்டார்கள்? இரும்பு கதவின் மீது கல் எரிந்தது போன்ற மென்மையான செயல்பாடு அல்ல சுசித்ரா சந்தித்தது அல்லது ஆளுநர் செயல்பட்டது.

கதவின் மீது விட்டெறியப்பட்ட கல் பலகாலமாக கட்டமைத்த சாதியையும் அதன் ஆணாதிக்கம் மீதும் விட்டெறிந்த கல். பிராமணர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்படாத ரௌடிகள் என்பதை தெரிந்தே வீசப்பட்ட கல். பிராமணர்கள் தங்களை எந்த சட்டத்திற்கும் உட்படாதவர்களாக நினைத்துக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தை உடைக்க வீசப்பட்ட கல். பார்ப்பனரல்லாதோரின் கோபத்தை வெளிப்படுத்திய கல் அது.

அதை பிராமண ஊடகப் பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஊடகத்துறையில் நிலவும் சாதிய மற்றும் பெண்ணுரிமை குறித்த பார்ப்பன பெண்களின் பார்வையும் அதில் உள்ள வேறுபாட்டையும் தான் வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் எல்லோரும் ஒன்று அல்ல, அவர்களின் உரிமைப் போரும் ஒன்று அல்ல சாதிய சமூகத்தில் என்பது மீண்டும் நிரூபித்துள்ளது. கணிசமாக பெருகிவரும் பெண் ஊடகத்தார் பற்றி வரலாற்றில் இதுவும் ஒரு சம்பவம் இனி இது எப்படி உருவெடுத்தாலும் கூட. கல்வித் புலத்தில் இயங்கிய எட்வர்ட் செய்ட் டும் கல்லெறிந்தவர் தான் இசுரேலியா ராணுவத்தினரை நோக்கி. இந்திய இராணுவத்தினரின் மீது கல்லெறியும் பலரும் மாணவர்கள் தான், காசுமீரத்தில். எனினும் , காசுமீரத்தின் உரிமை மறுக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவது கிடையாது.

அ.ப. இராசா

கர்நாடக பத்திரிகையாளர்களின் செருப்படி….

Swara Vaithee

எஸ் வி சேகர் வீட்டில் கல் எறிந்ததாகக் கூறப்படும் 30 பத்திரிக்கையாளர்களையும் வேலையை விட்டு நீக்க அழுத்தம் தரப்படுவதாக அறிகிறேன். இது கண்டிக்கத்தக்கது. குஜராத் கலவரம் செய்தவன் ஆட்சியில் கல்விட்டு எறிவதெல்லாம் தவறே இல்லை. #savetamiljournos

மு.வி.நந்தினி

#savetamiljounos பிரபலமாக இருக்கும் ஒருவர் பெண் பத்திரிகையாளர்களை வாய்ப்புக்காக படுக்கிறவர்கள் என பகிரங்கமாக பதிவுசெய்கிறார். அவருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் அவருடைய கேட்டின் மீது செருப்பு வீசுகிறார்கள். சூடுசுரணையுள்ள பத்திரிகையாளர்கள் சக பத்திரிகையாளர்களின் உணர்வினை புரிந்துகொண்டு ஒதுங்கியிருப்பார்கள். ஒருசிலர் ஓடிவந்து ‘காட்டிக்கொடுத்து’ தங்களது சுயத்தை காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்காக ஒரு காலத்தில் ஆதரவாக இருந்தோம் என்று நினைக்கிறபோது அருவருப்பாக உள்ளது.

Kuttima Nasi is with Ameen Korky.

பத்திரிக்கை சுதந்திரமும்,
ஊடகவியலார்களின் பாதுகாப்பும்;

s.v சேகரின் பத்திரிக்கையாளர்களின் பார்வையை பற்றிய ஆபாச பேச்சில்,வழக்கு பதிந்து கைது செய்யும் நடவடிக்கை அரசு மேற்கொள்ளும் வேலையில்!
sv.சேகருக்கு முன்ஜாமீன் வாங்குவதில் காட்டும் முணைப்பும்,சேகர் தலைமறைவு என்ற செய்திகளும் நம்மை மறக்கடிக்க செய்யும் நிகழ்வு.

பத்திரிக்கையாளரின் பாதுகாப்பும்! நலனும்!

சேகரின் பேச்சை கண்டித்து அவரின் வீட்டு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களின் மீது வழக்கு புணையபடுவதும்! பணி நீக்கவும் நிர்பந்தபடுத்தப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது!
வெறுமனே மக்கள் பிரச்சனையை ஊடகங்களையும்!ஊடகவியாளர்களையும் குறைசொல்வதற்கும் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவு அவர்களை பாதுகாப்பதிலும் உள்ளது.மக்களுக்கான பொறுப்பு!
இந்த பாதுகாப்பை கருதியே அவர்கள் அலுவலகத்திற்கு வேலை செய்வதோடு நின்றுவிடுகின்றனா்.
கோவையில் அனைத்து பாத்திரிக்கை நிருபர்களும்,ஊடகவியாளர்களும்.கண்டனத்தை பதிவு செய்கின்றனா்.
பாசிசம் எத்துறையில் வஞ்சித்தாலும் நீதிக்கேட்டு போராட வேண்டிய நிலையில் தமிழகம்! இப்பொழுது,பத்திரிக்கை துறையிலும் பாசிசத்தின் கருப்பாடுகள், கயமைத்தனத்தை கட்டு அவிழ்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
முற்போக்கு எழுத்தாளர்களும், ஊடகவியலார்களும் ஒன்றுபட்டு நலன் காக்க வேண்டும் மக்களும், ஒன்று இணைய வேண்டும்!

மு.வி.நந்தினி

#savetamiljournos பத்திரிகையாளர்கள் எஸ். வீ. சேகர் வீட்டு கேட்டின் மீது கல்லெறிந்ததற்காக பத்திரிகையாளர் மு. குணசேகரன் கண்டனம் தெரிவித்திருக்கும் ட்விட்டர் பதிவில் இந்துத்துவ ட்ரோல்கள் கடுமையாக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் நியூஸ் 18 ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பேசிவருகின்றனர். ஆனால், முற்போக்கு முகாமிலிருந்து ஒரு ஆதரவும் இல்லை. போராடிய பத்திரிகையாளர்கள் தங்கள் சொந்தக் காரணத்துக்காகத்தான் போராடினார்கள் என திராவிட, தமிழ்தேசிய உணர்வாளர்கள் நினைத்து அமைதி காக்கிறார்களா?

#savetamiljournos நீங்கள் நாலு பேருடன் படுத்தால்தான் ஊடகத்தில் பணியாற்ற முடியும் என ஒரு கழிசடை பதிவு போடுகிறது. அதை ரசித்து, தேசியகொடி பறக்க பகிர்கிறார் பிரபலமாகவும் ஒரு கட்சியின் முகமாகவும் இருக்கும் எஸ். வி. சேகர். மூன்றாம் தரமான இந்தச் செயல்பாட்டுக்கு மனுகொடுத்து யாருக்கும் வலிக்காமல் போராட்டம் நடத்துவது ஒரு சில பத்திரிகையாளர்களின் போராட்ட உத்தியாக இருக்கலாம். கழிசடை பதிவை அங்கீகரித்து வெளியிட்டவருக்கு சுரணையுடன் எதிர்வினையாற்றுவதும் ஒரு சில பத்திரிகையாளர்களின் உரிமை. அவர்கள் எதிர்வினைக்கு என்ன எதிர்வினை வரும் என்பதை அறிந்தேதான் செய்திருப்பார்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுங்கள். உங்களுக்கேன் காட்டிக்கொடுக்கிற வேலை?

30 பத்திரிகையாளர்கள் பணி நீக்க முயற்சி? : எமர்ஜென்ஸியா நடக்கிறது?

ஊடகப் பெண்கள் குறித்து மிகக் கீழ்த்தரமான அவதூறு பரப்பியவருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் கூண்டோடு பணிநீக்கம் செய்வது, ஊடக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிடும். எஸ். வி. சேகர் வீட்டின் முன்கேட்டுக்கே வலிக்காத செருப்பு வீச்சுக்கெல்லாம், பணிநீக்கம் என்றால் இங்கே என்ன அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியா நடக்கிறது?

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி :
அ. மார்க்ஸ் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர்.

இன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

சற்று முன் கிடைத்த செய்தியின்படி நியூஸ் 18 தொலைக் காட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களைத் தற்போது கட்டாய விடுப்பில் அனுபப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

அந்தத் தொலைக் காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் நீக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே சன் டிவி வீரபாண்டியன் இப்படிச் சங்கிகளின் அழுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

இம்மி ஆதரவைக்கூடத் தமிழகத்தில் திரட்ட இயலாத சங்கக் கும்பல்கள் சேகர், ராஜா போன்ற ஆபாசப் பேச்சாளன்களை ஆட்டு வித்து மேற்கொள்ளும் இப்படியான ஆபாசத் தாக்குதல்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டே போவோமானால் எதிர்காலத்தில் நாம் இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

பத்திரிகையாளர்களிலேயே உள்ள சில இந்துத்துவ ஆதரவாளர்கள் இளம் தமிழகம், FITE போன்ற அமைப்பினர் அன்றைய பிரச்சினையின்போது ஊடுருவியதாகச் செய்தி பரப்பி வருவதும் கண்டிக்கத்தக்கது. இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தோழர் பரிமளா போராட்டத்தில் கலந்து கொள்வற்காக அன்று அங்கு செல்லவில்லை. மகேஸ்வரி எனும் பத்திரிகையாளரைச் சந்திக்கச் சென்ற அவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளது அதை வைத்து பரிமளா சார்ந்துள்ள இந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்தையே கொச்சைப் படுத்திச் சில பத்திரிகையாளர்களே பதிவிடுவது அழகல்ல.

இப்போது ஆபாச வெறிப் பதிவாளன் சேகருக்கு anticipatory bail பெறுவதற்கான முயற்சிகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் ஆபாசச் சொற்களால் தாக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேல் கடும் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

சன் டி.வி. வீரபாண்டியனுக்கு நேர்ந்த கதி மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நேரக் கூடாது.

இது தொடர்பாக ஒட்டுமொத்தமான கண்டனக் குரல்களை நாம் எழுப்ப வேண்டும்” என தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

2 மறுமொழிகள்

  1. SV.சேகர்,எச்ச ராஜாக்களை பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும்.
    பத்திரிகையாளர்கள் வீசிய செருப்பு சேகர் என்ற பா.ஜ.க கழிவின் மேல் விழவில்லையே என்பதுதான் வருத்தம்.
    சேகர் வீட்டு முன் போராடிய நிருபர்களை வேலையை விட்டு தூக்க முயலும் நிர்வாகத்தையும், பார்ப்பன பாசிஸ்ட்டுகளையும் பொதுமக்கள் கடுமையான கண்டணத்தை பதிய வேண்டும்.

  2. பெய்டு நியூஸ் பாேட்டு காசு பார்க்கும் கபாேதிகளிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் ..! பட்டை சேகர் தலை மறைவான பின் ..நீதிமன்றம் கைது செய்யலாம் என்று கூறிய பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசின் ..மந்திரிகளையும் ..முதல்வரையும் பல முறை சந்தித்து பலவித கேள்விகள் எழுப்பிய ஊடகங்கள் … பட்டை சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று ஒரு வார்த்தை கேள்வியாக கேட்காததின் மர்மம் என்ன ..? தன் துறை சார்ந்தவர்களுக்கு நேர்ந்ததை பற்றி கண்டுக்காம இருக்கும் ஒரு சிலர் பச்சாேந்திகளா ..பணத்துக்கு அடிமைகளா…?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க