இடைநிலை ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும் !

ஆசிரியர்கள் தங்களுக்கு ஒரு வேலை இருப்பதையும், அதில் கணிசமான சம்பளம் வருவதையும் எண்ணி திருப்தி கொள்ளவேண்டும் என ஆசிரியர்களுக்கு உபதேசித்திருக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.

‘சம வேலைக்கு – சம ஊதியம்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 23-04-2018 முதல் தொடர்ச்சியான உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்குள்ளாக சுமார் 58-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 31.05.2009-ஆம் தேதிக்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், 30.6.2009-ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட சுமார் 18000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது.

ஒரே கல்வித் தகுதியோடு பணி புரியும் தங்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 7-ஆவது சம்பளக் கமிசனில், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்படும் என்று எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தது அரசு. அன்று அரசின் எழுத்துப் பூர்வ உறுதி மொழியை நம்பி போராட்டத்தை முடித்துக் கொண்டனர் ஆசிரியர்கள்.

ஏழாவது சம்பளக் கமிசனின் அறிக்கையில் அவர்களுக்கு சம ஊதியம் பரிந்துரைக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து கடந்த 23.04.2018 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 5000-திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இப்போராட்டத்தில் ஒரே கல்வித் தகுதியோடு பணிபுரியும் தங்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும், புதிய பி.எஃப். திட்டத்தைக் கைவிட்டு, பழைய பி.எஃப். திட்டத்தைத் தொடர வேண்டும், அடிப்படை ஊதியத்தை ரூ.8,300 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சென்னையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற உண்னாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களைக் கைது செய்த போலீசு அவர்களை சென்னை இராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைத்தது. அங்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடந்தனர்.

இராசரத்தினம் மைதானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தராமல் இழுத்தடித்து அவர்களை வெயிலில் காய வைத்தது போலீசு. ஆசிரியர்களைக் கலைப்பதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டது போலீசு. எனினும், நேரம் செல்லச் செல்ல இப்போராட்டத்தில்  அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர்.

இந்நிலையில் போராடும் ஆசிரியர்களை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைத்தது போலீசு. அங்கும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கையில், ஆசிரியர்களின் இந்த பிரச்சினைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாகத்தான் தீர்வு காண முடியும். ஆகையால் போராட்ட்த்தைக் கைவிடும்படி கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அரசு 2016-ஆம் ஆண்டு கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்குறுதியைப் பற்றி தமது அறிக்கையில் வாய்திறக்க மறந்துவிட்டார்.

ஆசிரியர்களின் இப்போராட்டம் குறித்து திருவாய் மலர்ந்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ஹெல்மெட் புகழ்’ கிருபாகரன், ‘12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்தும் பணி சமயத்தில் ஆசிரியர்கள் இவ்வாறு செய்வது சரியற்றது. ஆசிரியர்கள் தங்களுக்கு ஒரு வேலை இருப்பதையும், அதில் கணிசமான  சம்பளம் வருவதையும் எண்ணி திருப்தி கொள்ளவேண்டும். எஞ்சினியரிங், எம்.பில். படித்தவர்கள் எல்லாம் துப்புரவுத் தொழிலுக்கு ரூ. 7500 மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யும் போது, இப்படி போராட்டங்களை நடத்துவது தவறு’ என்று கூறியுள்ளார்.

நீதிபதிகளுக்கான சம்பள உயர்வின் போது இந்த என்சினியரிங் மாணவர்கள் குறித்து கனம் நீதிபதி அவர்களுக்கு நினைவிற்கு வரவில்லை. இப்போது வந்திருக்கிறது. ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டம் என எந்தப் போராட்டமாக இருந்தாலும், உயர்நீதிமன்றத்திற்கு அது வேப்பங்காயாகவே கசக்கிறது.

இடைநிலை ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் அவர்களின் உரிமைக்கான போராட்டம். ஆசிரியர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்! துணைநிற்போம்!

– வினவு செய்திப் பிரிவு