ணையதள பக்கங்களை முடக்குவதில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய இணைய சேவை நிறுவனங்களே இணைய தணிக்கை செய்யும் மென்பொருள்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றன என்றும் அதிக பக்கங்களை முடக்குகிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில் போர்ன் படங்கள், இணையதிருட்டு உள்ளிட்டவைகளை தவிர்த்து பெரும்பாலானவை அரசியல் தொடர்பான இணைய பக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுற்றுச்சூழல், மனித உரிமை, அரசியல் செயற்பாட்டாளர்களின் இணைய பக்கங்களை கணிசமான அளவில் முடக்கியிருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக கனடா நிறுவனமான நெட்ஸ்வீப்பர் என்ற நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், டொரண்டோ பல்கலைகழகத்தின் மக்கள் ஆய்வகம், கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேசன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை செய்திருக்கிறார்கள்.

இணைய பக்க முகவரி(யு.ஆர்.எல்.) மூலம் இவ்வகையான பக்கங்கள் பயனாளருக்கு தெரியாமல் தடுக்கப்படுகிறது. மேற்கண்ட சாப்ஃட்வேர் இணைய பக்கங்களில் முகவரிகளை தனது டேட்டா பேசில் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைகளாக (கேட்டகிரி) பிரித்து வைக்கிறது. மேலும் அந்த முகவரிகளுக்கான கோரிக்கைகள் வரும்போது அதை பயனருக்கு வழங்காமல் தடை செய்கிறது. உதாரணமாக ஸ்டெர்லைட்டோ இல்லை தண்டகாரண்ய சுரங்க பணிகளோ இயற்கையையும் மனித உரிமைகளையும் எப்படி நசுக்குகிறது என்ற தகவல்களை எழுதி ஒரு இணைய தளத்தில் பதிவு செய்கிறோம். அதற்கு என ஒரு முகவரி யு.ஆர்.எல். இருக்கும்.

நாம் ஏர்டெல் இல்லை ஜியோ அல்லது வேறு நிறுவனத்தின் வழியாக இணையத்தை தொடர்பு கொள்கிறோம். இப்போது ஏர்டெல் என்ன செய்கிறது என்றால் நம்மை நெட்ஸ்வீப்பர் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நாம் அப்பக்கத்தை அடையமுடியாமல் செய்கிறது. பெரும்பான்மை பக்கங்களுக்கு இப்பக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு எதுவும் தரப்படுவதில்லை. இதனால் பயனர்கள் வேறு ஏதோ பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு அதை கண்டு கொள்ளாமல் செல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இணையதள நிர்வாகிகளுக்கும் நாம் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது கூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. ஒரு பெரிய செய்தி இணையதளத்தின் சில இணைய பக்கங்கள் மட்டும் தடை செய்தால் அதை கண்டு பிடிப்பதற்கான சாத்தியக்கூறு மிக குறைவுதான். பயனர்களோ இணையதள நிர்வாகிகளே அப்பக்கத்தை நீக்கிவிட்டார்கள் என்று நினைக்கக்கூடும்.

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் மட்டும் நெட்ஸ்வீப்பரின் தொழில்நுட்பத்தை 42 இடங்களில் நிறுவியிருக்கிறார்கள். பாகிஸ்தான் 20 இடங்களில் நிறுவியிருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 10 நாடுகளில் மொத்தம் தடைசெய்யப்பட்ட 2464 பக்கங்களில் 1158 பக்கங்கள் இந்திய நிறுவனங்களால் தடை செய்யப்பட்டவை. இது ஆகஸ்ட் 2017- ஏப்ரல் 2018 காலத்தில் மட்டும் தடை செய்யப்பட்டவை.

இந்திய நிறுவனங்களால் தடைசெய்யப்பட்டதில் சில டிவிட்டர் கணக்குகள், ரோகிங்கியா முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள், இங்கிலாந்தின் டெலிகிராஃப், அல்ஜசீரா, பாகிஸ்தானின் டிரிபுனல் ஆகிய செய்தி நிறுவனங்களின் பக்கங்கள் இருக்கின்றன. இது போன்று இந்த பக்கங்களின் இணைய கோப்பகங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.

வடகிழக்கிலிருந்து ஆயுதபடை சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி போராடிவரும் ஐரோம் ஷர்மிளாவின் iromsharmilachanu.wordpress.com இணைய பக்கங்களும் இதில் அடங்கும்.மேலும் ஆய்வில் தடைசெய்யப்பட்டிருந்த இந்துமத வெறியர்களின் பக்கங்கள் சிறு சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. உதாரணமாக .com என்பதை மாற்றி .info என்று உள்ளிட்ட மாற்றங்களின் மூலம் செயல்படுத்திவருகிறார்கள். கூகிளின் பிளாக்கர் நிறுவனம் தடை செய்த bhandafodu.blogspot.com என்ற இணைய பக்கம் தனது பெயரில் மற்றொரு a சேர்த்துக்கொண்டு இயங்கி வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

பாரதி ஏர்டெல், ஹாத்வே, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், டாடா கம்யூனிகேசன்ஸ், டாடா ஸ்கை பிராட்பேண்ட், டெல்ஸ்ரா குளோபல், பசிபிக் இண்டெர்நெட், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களும் மேற்கண்ட  நிறுவனத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ”தாங்களாகவே எந்த பக்கத்தையும் தடை செய்வதில்லை என்றும் அரசு/நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு பிறகே சம்பந்தப்பட்ட பக்கங்களை தடை செய்கிறோம்” என்கிறது ஏர்டெல்.

சமூகத்தில் மதவெறி எனும் விசத்தை பரப்பிவரும் மதவெறி கும்பல்களை தடைசெய்யாமல் மனித உரிமை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகளுக்கு போராடிவரும் அரசியல் செயற்பாட்டாளர்களை குறிவைத்து இத்தடைகள் செய்யப்படுகின்றன. இதுதான் மாபெரும் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் இலட்சணம்!

களத்தில் இருக்கும் அடக்குமுறை இப்போது இணையத்திற்கும் வந்துவிட்டது. களத்தில் தடையை மீறுவது போல நாமும் இணைய தொழில் நுட்பத்தின் மூலம் இத்தடைகளை தகர்க்க வேண்டும். இல்லையேல் இந்தியாவில் பா.ஜ.க அரசை எதிர்த்து தீவிரமாக பேசும் தளங்கள் கேட்பாரின்றியே முடக்கப்படும்.

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க