பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?

ஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா?

0

ம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபாவிற்கு நேர்ந்த கொடூரம் உலகையே அதிர்ச்சியடைய வைத்தது. எட்டு நாட்கள் கோவில் கருவறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட அச்சிறுமி, இந்துத்துவ வெறியர்கள் மற்றும் போலீசு உட்பட 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டாள்.

இந்த அயோக்கியத்தனத்திற்கெதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சென்னை சூளைமேட்டில் 21-ஆம் தேதி  இரவு கன்னிகா பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் விளையாடிய  மூன்றரை வயது சிறுமியை கோயில் பூசாரி உதயகுமார் கோயில் வளாகத்தின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோயில் பூசாரி உதயகுமாரை அடித்து உதைத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  அதைதொடர்ந்து கோயில் பூசாரி உதயகுமாரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதேபோல், சென்னை  புரசைவாக்கம் சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அபிலாஷ், தனது ஒன்பது வயது மகளுடன் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலாவிற்குச் சென்றுவிட்டு, சென்னைக்கு திருவனந்தபுரம் – சென்னை ரயிலில் முன்பதிவு பெட்டியில் 21-ம் தேதி பயணம் செய்தனர்.

அதே முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பா.ஜ.க.வின் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் வேட்பாளர், பிரேம் ஆனந்த் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அபிலாஷ் அளித்த புகாரின்பேரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-இன்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர்.

இதேபோல் குழந்தைகளுக்கு எதிராக தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் பல கொடூர பாலியல் கொலைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது அவை குறித்து விவாதங்கள் எழுந்தாலும், சட்டங்கள் கடுமையாக்கப்ட வேண்டும் என்ற கருத்து மேலெழும்புவதோடு சரி. அதற்கான  தீர்வு கிடைப்பதில்லை.

இதற்குக் காரணம், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கும் அமைப்புகள் முறையாக செயல்படுவதில்லை என்றக் குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கிறார்கள். அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் பணிகளில் “மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்” ஈடுபடுவதில்லை.

இந்த ஆணையம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்கவும் போக்சோ சட்டத்தை கண்காணிக்கவும், யாரை வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது. ஆனால், இத்தகைய அதிகாரம் கொண்ட ஆணையத்திற்கு வழக்கறிஞர் பிரிவுகூட இல்லை, ஆவண காப்பகங்கள், உறுப்பினர்கள், தலைவரால் ஆய்வு மேற்கொள்ளப்படுவது என எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. 60 பேர் பணியாற்ற வேண்டிய அலுவலகத்தில் 10-க்கும் குறைவானவர்களே பணியாற்றி வருகின்றனர். இதனால், ஆணையம் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது.

‘’ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பிரிவு இல்லாததால் போரூர் சிறுமி கொலை குற்றவாளி தஷ்வந்த் பிணையை எதிர்த்து ஆணையத்தால் மனு அளிக்கக் கூட முடியவில்லை. இவையனைத்தும் தமிழக அரசுக்கு குழந்தைகள் நலன் குறித்த அக்கறை இல்லாததையே காட்டுகிறது’’ என்கிறார்கள்  குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் செயல்பாடுகள் முடங்கியுள்ளதால் குழந்தைகள் மீதான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஷ்மீரில் நடந்தது போன்று தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மேம்படுத்துவது, சுதந்திரமான அமைப்பாக செயல்பட விடுவது, குழந்தைகளுக்கு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றால் மட்டுமே முடியும், என்கிறார்கள்.

இவையெல்லாம் நல்ல ஆலோசனைகள்தான் மறுப்பதற்கில்லை. ஆனால் இவை மட்டும் போதுமா? உண்மையில், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் என்பது இந்தியா முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இருந்து பார்த்தால் அவை தவிர்க்க முடியாத பார்ப்பனியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்பதையும், இந்த குற்றங்களுக்கு இந்நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மறைமுகமாக துணை போவதையும் புரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் குழந்தைகள் மீதான அத்துமீறல் பற்றிய ஆய்வு 2007 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில்,  சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் குழந்தைகள் மீதான அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்றும், 53.2 சதவிகித குழந்தைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இக்குற்றங்கள் இன்னும் பன்மடங்கு அதிகரித்திருக்க கூடும்.

பொருளாதாரத்தில் நாடு முன்னேறுவதாகக் கூறப்படும் நிலையில், விவசாயிகளின் தற்கொலை ஏன் அதிகரிக்கிறது? அதே போன்று இன்னமும் நிலவுடமை பண்பாடு கோலேச்சும் நாட்டில் இணைய தொழில் நுட்பம் வந்த பிறகு பாலியல் குறித்த பார்வைகள் திட்டமிட்டு மாற்றப்படுகின்றன. குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன. இயற்கையான பாலுறவு ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்டு வெறியூட்டப்படுகிறது. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று விரும்பத்தக்கவையாக மாற்றப்பட்டுவிட்டது.

தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.

தருமராசன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி சிறுமி வல்லுறவின் குற்றாவாளிகள் 2005 இல் 35 பேரை விடுவித்தது கேரள உயர்நீதி மன்றம். முக்கிய குற்றவாளியான தருமராசனது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் மீதான குற்றச்சாட்டை  உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. 2007 இல் இத்தீர்ப்பு வெளியானது. 2007 இல் குரியனுக்காக உச்சநீதி மன்றத்தில் வாதாடி அவரை குற்றத்திலிருந்து விடுவித்தவர் அப்போதைய ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், தற்போதைய நிதியமைச்சருமான  பா.ஜ.க. வின் அருண் ஜேட்லி.

அதே அருண்ஜெட்லி தான் இன்று கதுவா சிறுமி பிரச்னையை பெரிதாக்கினால் சுற்றுலாவால் கிடைக்கும் வருமானம் குறைந்து விடும் என்று சொல்லியிருக்கிறார். டெல்லி நிர்பயா சம்பவத்தின் போது தான் அப்படி சொன்னார். இப்போது  அவர் சொன்னதாக வருவது வாட்ஸ் அப் வதந்தி என்கிறார்கள். பொதுவில் பா.ஜ.க தலைவர்கள் இத்தகைய பாலியல் வன்கொடுமை வழக்குகளின் போது ஆட்சியாளர்கள் என்ற முறையில் பொறுப்பேற்பதல்லை. மாறாக குற்றவாளிகள் தரப்பில் இருந்து திசைதிருப்புவதை செய்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் முதலிடத்தை பிடித்திருக்கக் கூடியது தற்போது ஆளும் பா.ஜ.க.தான். ஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா?  அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா?

சமூக வாழ்வில் பார்ப்பனிய பண்பாடு கோலேச்சும்  போது சாதி – மத – சடங்கு ரீதியாக பெண்கள் அடிமைப்படுத்தும் போது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரிக்கின்றன. குறிப்பாக வட இந்தியாவில் இத்தகைய வன்முறைகள் அதிகம் நடப்பதும் அங்கே பார்ப்பனிய அமைப்புகள் செல்வாக்கோடு இருப்பதும் ஒரு சான்று. சமீபத்திய வன்முறைகளில் பா.ஜ.க-வின் அதிகார பெருந்தலைகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதும் எதைக் காட்டுகிறது?

அரசியல் ரீதியிலும், சமூக ரீதியிலும் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டங்கள் இங்கே அதிகம் நடக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட சட்டங்களைக் கூட உண்மையிலேயே அமல்படுத்த முடியும்.

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க