சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் “காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018  அன்று மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளாக பொதுமக்களும், தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன், காவிரி விவசாயிகள் சங்க திரு. G.வரதராஜன் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தோழர் வெற்றிவேல் செழியன்

தோழர் வெற்றிவேல் செழியன் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். –  தனது தலைமை உரையில்…”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் வேலையை நீதிமன்றத்தின் துணையோடு இந்த மோடி அரசாங்கம் செய்து வருகிறது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, “தமிழக மக்கள் கோருவது காவிரி மேலாண்மை வாரியம். அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியமும், அதை செயல்படுத்த கூடிய ஒழுக்காற்று வாரியமும் வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு என்பது நமது உரிமை. ஆறுகள் எல்லாம் தேசிய உடைமை ஆக்குவோம் என்கின்றனர். என்ன பொருள் கர்நாடக மாநிலத்தின், தமிழக மாநிலத்தின் உடைமையாக உள்ள காவிரியை இந்திய உடைமையாக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

பெங்களுரு தான் பெரிய நகரமா? சென்னை பெரிய நகரம் இல்லையா? காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால், சென்னை மக்களுக்கு வரும் தண்ணீர் அடைப்படுகிறது என்று பொருள். வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லை. காவிரியில் இருந்து தான் வீராணத்திற்கு தண்ணீர் வருகிறது. வீராணத்திலிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வருகிறது. கர்நாடகத்தின் பல  மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது என்று தீபக் மிஸ்ரா சொல்கிறார். தமிழகத்தின் மாவட்டங்கள் என்ன செழுமையாகவா இருக்கிறது? இங்கு வறட்சி இல்லையா? காவிரி உரிமை என்பது, காவிரி படுகைக்கான உரிமை.

தோழர் தியாகு

எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதாக தமிழக அரசு குறைபட்டு கொள்கிறது.  தமிழ்நாட்டில் நாங்கள் கேட்கும் அத்திக்கடவு-அவினாசி போன்ற கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஆதரவு தருகிறோம்.

வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை அழிக்கும் கார்ப்பரேட்களுக்கான திட்டங்களைத்தான் கொண்டு வருகிறது மத்திய அரசு.

நாங்கள் இந்தியாவை ஒன்று கேட்கிறோம். நாங்கள் எங்கள் ஆற்றை காப்பாற்றுங்கள் என்கிறோம், தமிழ்நாட்டு நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்கிறோம். ஆனால் உங்களால் முடியவில்லை எனவே நீங்கள் எங்களை விட்டு விடுதலை பெற்று போய் விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்திற்கு அதிகாரம் இருந்தால் யாரும் காவிரியை சிறைப்பிடிக்க முடியாது. தமிழக மக்கள் அனைவரும் ஒன்று கூடி உரிமையை மீட்டு எடுப்போம்” என்று பேசினார்.

தன்னாட்சி தமிழகம், ஒருங்கிணைப்பாளர்,  திரு. ஆழி செந்தில்நாதன், “கர்நாடகத்திற்கு சொந்தமான எதையும் நாம் கேட்கவில்லை. தமிழகத்திற்கு பல காலத்திற்கு சொந்தமான உரிமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தான் கேட்கிறோம். கர்நாடகத்தை பொறுத்தவரை காவிரி பிரச்சனையில் அங்கு உள்ள அனைத்து கட்சிகளும் தமிழகத்திற்கு எதிராக தான் பேசுகிறார்கள். ஒவ்வொரு முறையும் காவிரி பிரச்சனை வரும் பொழுதெல்லாம் கர்நாடகாவில் திட்டமிட்டே கலவரத்தை உருவாக்குகிறார்கள் பிறகு அதையே காரணம் காட்டி தண்ணீர் தர முடியாது என நாடகமாடுவார்கள்.

திரு. ஆழி செந்தில்நாதன்

மத்திய அரசின் கடமை என்ன? கர்நாடக அரசு என்ன சொல்கிறதோ அதை தான் மத்திய அரசும் சொல்கிறது. இப்பொழுது கர்நாடகத்தில் தேர்தல் என்கிறார்கள். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் இதையே தான் சொல்வார்கள்.

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று நாம் கேட்கிறோம். காவிரியை காப்பாற்ற போராடுகிறோம். ஆனால் அவர்கள் காவிரி படுகைக்கு கீழே இருக்க கூடிய இயற்கை வளத்தை கொள்ளையடிக்க, அதை ஒரு ஹைட்ரோகார்பன் மண்டலமாக மாற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. மோடி அரசாங்கம் யாரின் பக்கம் இருக்கிறது? தனக்கு ஓட்டு போடாத, மோடி வந்தால் கருப்பு கொடி காட்டும் தமிழக்கத்தின் பக்கம் அவர்கள் செயல்பட மாட்டார்கள். தமிழகம் இந்தியா என்ற கட்டமைப்பை பல வகையில் ஏற்று கொண்டிருக்கிறது. ஆனால் டெல்லி என்றும் நம்மை சமமாக நடத்தியதில்லை.

தமிழகத்தில் ஏன் தொடர்ச்சியாக போராட்டம் நடக்கிறது என்று கேட்கிறார்கள். தமிழகம் தொடர்ச்சியாக பல வகையில் ஒடுக்கப்படுகிறது அதனால் தான் இங்கு போராட்டங்கள் கடுமையாக நடக்கிறது. காவிரி பிரச்சனையை மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் முன்னெடுக்கும் போது உண்மையிலேயே நம்பிக்கை பிறக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து திருவாரூர், காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த,                 திரு. G. வரதராஜன் ஆற்றிய உரையில்…மக்கள் அதிகாரம் அமைப்பு, விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து கொண்டிருக்கும் போது, ”நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்று திருவாரூரில் போராடினார்கள். தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பல ஆயிரம் மக்களை அணிதிரட்டி மாநாடு நடத்தினார்கள். காவிரி தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடலில் ஓடும் ரத்தம். விவசாயிகள் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் ரேசன் கடைகளில் தான் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள் என்பதை உணர்த்தவே இங்கு இந்த கூட்டம்.

திரு. G. வரதராஜன்

தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்று டெல்லி நினைக்கிறது. விவசாயிகள் காவிரிக்காக மட்டும் போராடவில்லை, விளைநிலங்களை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார்கள். ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. மக்கள் வாழ முடியாத இடமாக கிராமங்கள் மாறி வருகிறது. 21 மாவட்டங்களுக்கு ஆதரமாக இருப்பது காவிரி. காவிரி இல்லையென்றால் விவசாயிகள் வாழ்க்கை அழிந்துவிடும். மத்திய அரசை எதிர்த்து போராடி தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜு  ஆற்றிய உரையில்…

“காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததை அடுத்து மக்கள் அதிகாரம் உட்பட பல அமைப்புகளும், பொதுமக்களும்  இதை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களை டெல்லி கொஞ்சம் கூட மதிக்கவில்லை. தீபக் மிஸ்ரா இன்னொரு மோடியாக செயல்படுகிறார். நமக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

தோழர் ராஜீ

கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், பி.ஜே.பி நமக்கு எதிராக செயல்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்யும் கடமை மத்திய அரசுக்கு தான் உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த பிரச்சனையை சரி செய்யாமல் இருக்கிறது. 8 கோடி தமிழகமக்களை பற்றி என்ன நினைக்கிறது இந்த மத்திய அரசு? நாம்  எல்லா வகையிலும் போராடி விட்டோம். தமிழ்நாட்டில் இன்னும் என்ன செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்? காவிரி தர வேண்டும். அது நமது உரிமை. இதை யாரும் மறுக்க முடியாது.

போராடும் மக்களை ஏன் தமிழக அரசு தடுக்கிறது? மக்கள் அதிகாரத்திற்கு சீர்காழியில் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என தடை விதிக்கிறது. போராட்டத்திற்கு பாதுகாப்பு தர வேண்டியது தான் போலீசோட வேலை. நீதிமன்றம், போலீசுக்கு மக்கள் அடிமை கிடையாது. உங்களை உருவாக்கியது யார்?. மக்கள்  தான்!

தாசில்தார், கலெக்டர் மனு கொடுத்து நாங்கள் தோற்றுவிட்டோம். மணல் கொள்ளையடிப்பவனுக்கு இவர்கள் துணை போகும் போது மக்கள் தான் மணல் கொள்ளையை தடுப்பார்கள். குட்கா ஊழல் யார் மீது வழக்கு, மாநிலத்துடைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி மீது புகார், தடை செய்த குட்கா விற்பனைக்கு மாதம் மாதம் சம்பளம் மாதிரி மாமூல் வாங்கியுள்ளார்கள். மக்கள் அதிகாரம் இதை சொல்லவில்லை. வருமான வரித்துறை சொல்கிறது. இவர்கள் விசாரணை செய்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிடும். ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தோற்றுவிட்டது.

3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் வர போகிறதா? டெல்லி அமைக்க போவது கர்நாடகத்திற்கு ஆதரவாக தான் இருக்கும். தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தப்பி தவறி வந்தாலும், அதை கர்நாடக ஏற்று கொள்ள போவதில்லை. மேல் முறையீட்டுக்கு போவார்கள். நாம் மீண்டும் போராட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் முழுவதும் கச்சா எண்ணெய், நிலக்கரி எடுக்கவேண்டும் என்பது  மத்திய அரசாங்கத்தின் திட்டம், கொள்கை. இந்த திட்டத்தை மாநிலத்தில் இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் ஏற்று கொள்கிறது. எரிவாயு எடுப்பதற்கும், எண்ணெய் எடுப்பதற்கும் காவிரி தண்ணீர் எதற்கு? இந்த விசயங்களை தீர்மானிக்க கூடிய அதிகாரத்தை, கொள்கையை கேள்வி கேட்காமல் முறியடிக்காமல் நம்முடைய கோரிக்கையை எப்படி சாதிக்க முடியும்?

எல்லா திட்டங்களையும் வளர்ச்சி என்கிறார்கள். யாருக்கான வளர்ச்சி? அம்பானி, அதானி, மிட்டல், மல்லையா போன்றோரின் வளர்ச்சி, நீரவ் மோடி, லலித் மோடி, போன்றோரின் வளர்ச்சி தான் வளர்ச்சி என்று மோடி அரசு கூறுகிறது.

மோடியின் கொள்கை என்பது கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்க, வழி வகுத்து தருவது தான். ஒரு லட்சம் கோடி கச்சா எண்ணெய் மூலம் மத்திய அரசுக்கு லாபம் போகிறது. ஆனால் வேலை வாய்ப்பு 500 பேருக்கு தான் என்கிறார்கள்.

தமிழக மக்கள் ஏமாளியாக இருக்கிறார்கள் என்று டெல்லி நினைக்கிறது. மெரினாவில் மாற்றியிருக்கிறோம், சாதித்து காட்டியிருக்கிறோம். அது போல காவிரியை மீட்காமல் வீட்டுக்கு போக கூடாது என முடிவு செய்வோம். போலீசுக்கு பயப்படாமல் கோர்ட்டுக்கு பயப்படாமல் போராடினால் காவிரிநீர் கண்டிப்பாக வரும்” என எழுச்சியுரையாற்றினார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சி மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல்கள் பாடியது சிறப்பாக இருந்தது. மார்க்கெட் பகுதி என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பொதுக்கூட்டத்தை கவனித்தனர்.

மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம், தொலைபேசி : 91768 01656