ந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. இது குறித்து நாம் பெருமைப்படத் தேவையில்லை. ஏனென்றால் தடுப்பு மருந்தினால் எளிதில் குணப்படுத்தப்படக்கூடிய நோய்களின் காரணமாக, மிகப்பெரிய அளவுக்கு குழந்தைகள் இறக்கும் நாடும் இந்தியாதான். ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர்.

vaccine-productionதடுப்பு மருந்துகளை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் அனைவருக்குமான தடுப்பு மருந்து திட்டத்தை (universal immunisation) உறுதிப்படுத்துவதே இந்திய பொது சுகாதாரத்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அந்த வகையில் போலியோ நோய் இன்று இந்தியாவில் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்டது. இதை உலக சுகாதார நிறுவனமும் 2014-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது.

ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தை (23-30) உலகத் தடுப்பு மருந்து வாரமாக (World Immunisation Week) உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அனைவருக்குமான தடுப்பு மருந்து திட்டம் என்பதுதான் மிகவும் செலவு குறைவான நோய்த்தடுப்பு திட்டம் என்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இது உலகெங்கும் கிட்டத்தட்ட 20-30 இலட்சம் மரணங்களைத் தடுக்கிறது. மேலும் பல இலட்சக்கணக்கான மக்களை ஊடல் ஊனத்திலிருந்து காப்பாற்றுகிறது. தடுப்பு மருந்து திட்டம் முழுமையாக அமல் படுத்தப்பட்டால் மேலும் 15 இலட்சம் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.

ஆனால் நோய்நொடியற்ற எதிர்காலம் குறித்த இந்த நம்பிக்கை இந்தியாவில் வெறும் கானல் நீராகவே இருக்கிறது. நீண்ட நாட்களாகவே அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் இந்தியாவில் அமலில் இருந்தாலும், தடுப்பு மருந்து திட்டத்தை மிகக் குறைவான மக்களுக்கே வழங்கி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இத்திட்டத்தின் அமலாக்கம் குறித்து இந்தியா அளிக்கும் புள்ளி விவரங்களும் சந்தேகத்துக்குரியவையாகவே உள்ளன.

மெச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் அதன் முதன்மை ஆய்வாளர் நிஜிகா ஸ்ரீவஸ்தவாவின் கூற்றின் படி, இந்தியாவில் வெறும் 18 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே, தொண்டை அடைப்பான் (diphtheria), கக்குவான் இருமல் (pertussis) மற்றும் இசிவு (tetanus) நோய்களுக்கான தடுப்பு மருந்து (DPT) முறையாக – மூன்று முறை – அளிக்கப்படுகிறது. 10 மாத குழந்தைக்கு போட வேண்டிய தட்டம்மை (measles) தடுப்பு மருந்தோ, மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கே போடப்படுகிறது.

மெச்சிகன் பல்கலைக்கழகத்தை சார்ந்த மாத்யு பௌல்ட்டன் கூற்றுப்படி, தட்டம்மையை ஒழிக்க வேண்டுமேன்றால், 95 விழுக்காடு மக்களுக்கு தட்டம்மைக்கான தடுப்பு மருந்து போடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு போடப்படாத காரணத்தினால், இந்தியாவில் தட்டம்மை மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக 2010 -ஆம் ஆண்டில் தட்டம்மைக்கான தடுப்பு மருந்தை இரண்டாவது முறையாகப் போடத்தொடங்கினார்கள் பொது சுகாதார துறை அலுவலர்கள் .

உலக அளவில் தடுப்பு மருந்து வழங்குவதில் இந்தியாவுக்கு கெட்ட பெயர் இருப்பதாக ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். “1 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் மிக மோசமான நிலையில் இந்தியா இருக்கிறது” என்று அவர் கூறினார்.

தடுப்பு மருந்து போடாமல் போனால் ஏற்படும் விளைவு என்ன?

ஒருவேளை தடுப்பு மருந்து இல்லாமலேயே உயிர் பிழைத்துவிடும் குழந்தைகளுக்கு அந்நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் கொடுமையானது. பார்வையிழப்பு, செவித்திறன் குறைபாடு, மூளைப் பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இக்குழந்தைகள் ஆளாகின்றனர்.

மதம் மற்றும் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள் காரணமாக பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து போடுவதில்லை. அதைவிட தடுப்பு மருந்துகளின் நன்மைகளை அறியாமலிருக்கின்றனர். வேண்டாம் என்று நிராகரிப்பதைக் காட்டிலும், ஏன் வேண்டும் என்று அறியாமல் இருக்கின்றனர் என்பதே பிரச்சினை.

பெற்றோர்களின் மெத்தனப்போக்கும் இன்னொரு காரணம். இளம்பிள்ளை வாதம், கொடிய கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களால் தாக்கப்பட்ட குழந்தைகளை இன்றைய இளம் பெற்றோர்கள் பலர் பார்த்ததே இல்லை என்பதால் அந்த நோய்களின் கொடூரம் குறித்தும், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் இவர்களுக்குத் தெரிவதில்லை. இந்த நோயெல்லாம் ஏதோ ஒரு பழங்காலத்து விவகாரம் என்று இவர்கள் நினைப்பதால், இதன் அவசரமும் இவர்களுக்குத் தெரிவதில்லை.

people-waiting-for-vaccine

போலியோ சொட்டு மருந்து பொது சுகாதார பணியாளர்கள் மூலம் எளிதில் கிடைக்கிறது. ஆனால் ஏனைய தடுப்பு மருந்துகளைப் பொருத்தவரை, அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பதிவுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குழந்தை பிறந்தவுடன் இந்திய மருத்துவமனைகளில் ஒரு தடுப்பு மருந்து அட்டை வழங்கப்படுகின்றது. ஒருவேளை அந்த அட்டையை பெற்றோர் தொலைத்து விட்டால், மருத்துவமனையில் அதற்கு நகல் கிடையாது.

நகரங்களில் சேரிப்பகுதியில் வாழும் மக்களுக்கோ அல்லது தற்காலிக கொட்டகையில் தங்கி வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கோ, இவற்றையெல்லாம் பாதுகாத்து வைப்பதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.

வீடுகளிலோ அல்லது பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனைகளிலோ பிறக்கும் குழந்தைகள் பொது சுகாதார அமைப்பின் கண்காணிப்புக்கே வருவதில்லை. இவர்களுக்கெல்லாம் தடுப்பு மருந்து அரைகுறையாகத்தான் கிடைக்கிறது அல்லது முற்றாக கிடைப்பதேயில்லை.

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவின் மக்களுக்கு தடுப்பு மருந்து கிடைக்காமலிருப்பதற்கான காரணங்கள் இவைதான்.

மேலும் படிக்க: