ம் மனித இனத்துக்கு கடந்த 12000 ஆண்டுகளாக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ஒரு கொள்ளை நோய் “பெரியம்மை” (Small pox) ஆகும். பெரியம்மை என்பது கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்தே மனித இனத்தை அச்சுறுத்தும் கொள்ளை நோயாகும். கிமு 300 ஆம் ஆண்டு எகிப்த்தை ஆட்சி செய்த பாரோ மன்னனுக்கு இருந்தது என்பதை அவனது பதப்படுத்தப்பட்ட மம்மியில் இருந்த அம்மைத் தழும்புகள் உறுதி செய்தன.

இப்போது கோவிட்-19 எப்படி இருமுவதால் தும்முவதால் பரவுகிறதோ அதே போன்று எளிதில் பரவும் நோயாக இருந்தது. இந்த நோய் தாக்கிய பத்து பேரில் மூன்று பேர் இறந்து வந்தனர். குழத்தைகளை தாக்கினால் 80 சதவிகிதம் மரணம் தான். தப்பிப்பிழைத்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவு தழும்புகளை பரிசாகத்தந்து விடும் கொடிய நோய் அது.

பெரியம்மை. மாதிரிப் படம்.

உலகில் முதன் முதலாக அறியப்பட்ட தடுப்பூசி வைத்தியம் “பெரியம்மையை” தடுப்பதற்காக செய்யப்பட்ட “வேரியோலேசன்” (Variolation) எனும் முறையாகும்.
இந்த முறையில் பெரியம்மை வந்து குணமடைந்தவரின் உடலில் ஏற்பட்ட புண், காய்ந்த பின் அந்த சருகை (Scabs) எடுத்து மூலிகையுடன் சேர்த்து இடித்து பொடியாக்கி விடுவார்கள். அந்த பொடியை தோள்களில் புண் உண்டாக்கி அதில் தேய்ப்பது அல்லது சுவாசக்காற்று மூலம் உள்ளே இழுத்துக்கொள்வது என்ற முறையில் மக்களுக்கு கொடுத்து வந்தனர்.

இதன் மூலம் வேரியோலேசன் செய்யப்பட்ட மக்களுக்கு சிறிது நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், உடல் முழுவதும் படை தோன்றும். ஆனாலும் பெரியம்மை தாக்கி மரணமடையும் மக்களை விட வேரியோலேசன் செய்யப்பட்ட மக்கள் குறைவாகவே இறந்தனர்.

பெரியம்மை வந்து 30% பேர் இறந்தார்கள் என்றால் வேரியோலேசன் செய்யப்பட்டவர்களில் மரண விகிதம் 2% என்று குறைந்தது. இதற்கடுத்தக்கட்ட முயற்சியாக 1796 ஆம் ஆண்டு இங்கிலாந்து மருத்துவரான எட்வர்ட் ஜென்னர்(1749-1823) அவர்கள் பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் ஆயத்தப்பணிகளில் இறங்கினார்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்
கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பால் பீய்ச்சும் பெண்ணான சாரா நெல்ம்ஸ் மற்றும் தனது தோட்டப்பணியாளரின் ஒன்பது வயது மகனான ஜேம்ஸ் ஃபிப்ஸ் இருவரையும் தனது ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார். நெல்ம்ஸ்க்கு வந்திருந்த பசு அம்மை நோயினால் ஏற்பட்ட புண்ணில் இருந்து சலத்தை எடுத்து சிறுவனான ஃபிப்ஸின் தோள்களில் செலுத்தினார். சிறிது நாட்களுக்கு பிறகு ஃபிப்ஸை பெரியம்மை நோய் வந்தவர்களுடன் பலமுறை நெருங்கி இருக்கச்செய்தார். அத்தனை முறையிலும் ஃபிப்ஸ்க்கு பெரியம்மை நோய் தாக்கவில்லை. இந்த ஆராய்ச்சியை முறைப்படுத்தி 1801ஆம் ஆண்டு தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டார்.

உலகின் முதல் தடுப்பூசி கண்டறியப்பட்டு விட்டது. கண்டறியப்பட்ட தடுப்பூசி முறை பழைய வேரியோலேசன் முறையை பின்னுக்குத் தள்ளி உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுமார் 12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.

என்னதான் வளர்ந்த நாடுகளில் ஒழிக்கப்பட்டாலும் வளரும் நாடுகள் இருக்கும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தொடர்ந்து பெரியம்மை நிலைத்து வந்தது. வளர்ந்த நாடுகளில் கிடைத்த நம்பிக்கையான முடிவுகளை ஒட்டி பெரியம்மை நோயை உலகை விட்டு ஒழிக்க முடியும் என்று சபதம் எடுத்து உலக சுகாதார நிறுவனம் (World health organisation) 1959ஆம் ஆண்டு பெரியம்மை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தது. தொடக்கத்தில் பெரிய அளவில் ஆதரவும் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லாமல் தோல்வி முகத்தில் இருந்த இந்த இயக்கமானது, 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் பிஹார், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஏற்பட்ட பெரிய்மமை கொள்ளை நோய்க்கு பிறகு வீரியமடைந்தது.

இதற்கு காரணம் அந்த கொள்ளை நோயில் மட்டும் இந்தியாவில் 15,000 பேர் மரணமடைந்தனர். உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து
ஜனவரி 1975ஆம் ஆண்டில் “இலக்கு பூஜ்யம்” (TARGET ZERO) என்ற இயக்கத்தை ஆரம்பித்து இந்திய மக்கள் அனைவருக்கும் பெரியம்மை தடுப்பூசியை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

படிக்க:
எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்
கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

இந்திய மக்கள் அனைவரும் பெரியம்மை தடுப்பூசிகளை தேடித்தேடி போட்டுக்கொண்டனர் என்கிறது வரலாறு. இதன் விளைவாக 1975 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி பெரியம்மை நோய் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டது.
உலகின் கடைசி கொடிய பெரியம்மை (wild variola major) நோயாளியாக 1975ஆம் ஆண்டில் பங்களாதேஷைச் சேர்ந்த ரஹிமா பானு என்ற மூன்று வயது குழந்தை அமைந்தாள்.

ரஹிமா பானு

உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சியான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 1980ஆம் ஆண்டு பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி சேதப்படுத்தி வந்த பெரியம்மை நோய் உலகை விட்டு ஒழிக்கப்பட்டு விட்டது என்று
அறிவித்து மகிழ்ந்தது.

இப்போதே உங்களின் வீட்டில் இருக்கும் 1980க்கு முன்பு பிறந்தவர்களின் இடது தோள்களில் இருக்கும் பெரியம்மை தடுப்பூசி தழும்பை ஒருமுறை தொட்டுப்பாருங்கள். அறிவியல் பாதையில் பயணித்தால் எத்தனை பெரிய சுகாதார அச்சுறுத்தலில் இருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

தாங்கள் காணும் இந்த புகைப்படத்தில் இருப்பது உலகின் கடைசி கொடிய பெரியம்மை தொற்று பெற்ற சிறுமி – ரஹிமா பானு புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு -1975,வங்கதேசம். (ஆனந்தவிகடன் இதழில் நான் எழுதிய “மீண்டும் மீள்வோம்” எனும் தொடரின் ஒரு பகுதியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன்)

அன்பார்ந்த பெற்றோர்களே,

21ஆம் நூற்றாண்டில் 2K கிட்ஸ்களுக்கு என்னவென்றே தெரியாத இந்த நோய் குறித்தும் தடுப்பூசிகளின் தேவை குறித்தும் ஒரு சிறு உரை நடத்துங்கள்.
நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்