சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சுனா பானா !

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாராம் கபில் சிபல். அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுனிச்சாம். வேறென்ன செய்ய முடியும்? மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.

ச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கொண்டு வரவிருந்த கண்டனத் தீர்மானத்தை அனுமதிப்பதற்கு கடந்த ஏப்ரல் 23 அன்று, துணை குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து காங்கிரசு எம்பிக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று (08-05-2018) விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களான ப்ரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷாத்யாய் யாக்னிக் ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

”அரசியல் சாசன சட்டத்தின்படி தலைமை நீதிபதியை நீக்க 64 எம்பிக்கள் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை ஏற்று விசாரணைக் குழுவை அமைப்பதுதான் மாநிலங்களவைத் தலைவர் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறிய வெங்கையா நாயுடுவின் உத்தரவை இரத்து செய்து விசாரணைக் கமிசன் அமைக்க உத்தரவிடவேண்டும்” என்று மனு தாக்கல் செய்தனர்.

மேலும் துணைக் குடியரசுத் தலைவரின் இந்த நடவடிக்கை, அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 14க்கு எதிரானதாக இருப்பதையும், அது இந்திய அரசியல் சாசன சட்டம் மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம் ஆகியவை வழங்கியிருக்கும் அதிகாரத்தை மீறியதாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஒதுக்காமல், வழக்கு எண் ஒதுக்காமல் தாமதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதனை ஒட்டி, திங்கள்கிழமை (07-05-2018) காலையில் நீதிபதி செல்லமேஷ்வர், நீதிபதி கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், பிரசாந்த் பூஷன் ஆகிய இருவரும் இம்மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

நீதிபதி கவுல், இது குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடாதது ஏன் என்றும், தலைமை நீதிபதிதான் வழக்குகளை பொருத்தமான அமர்வுகளுக்கு பிரித்து வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவர் என்றும் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த கபில் சிபல், இந்த நடைமுறை தெரிந்ததுதான் என்றாலும், ஒருவர் தான் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தானே நீதிபதியாக இருப்பது முறையானதல்ல என்றும், இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் கூறினார்.

மேலும் இவ்வழக்கில் தலைமை நீதிபதி சம்பந்தப்பட்டிருப்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதியின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், தலைமை நீதிபதி தனது அதிகாரத்தை பதிவாளரிடம் காட்டக்கூடாது என்றும் கூறினார். இவ்வழக்கை 08-05-2018 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறினர்

பொதுவாக அரசியல் சாசன விவகாரங்கள் பற்றிய வழக்குகளை உச்சநீதிமன்ற பதிவாளர் நேரடியாக அரசியல் சாசன அமர்வுக்கு ஒதுக்க முடியாது. ஒரு வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற முடிவு ஒரு நீதித்துறை உத்தரவின் மூலம்தான் எடுக்கப்பட முடியுமேயன்றி, தலைமை நீதிபதி தனது வழமையான நிர்வாக அதிகாரத்தின் கீழ் அரசியல் சாசன அமர்வை அமைத்து உத்தரவிடக்கூடாது.

இந்நிலையில், நேற்று (07-05-2018) மாலை திடீரென இம்மனுவிற்கு வழக்கு எண் அளிக்கப்பட்டு நீதிபதிகள் எஸ்.கே.சிக்ரி, .எஸ்.ஏ.பாப்டெ, என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஏகே கோயல் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது.

செல்லமேஷ்வர், கவுல் அடங்கிய அமர்வு எவ்வித உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன்னரே இவ்வழக்கு இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அமர்வை சட்டத்துக்கும் மரபுக்கும் விரோதமான முறையில் தீபக் மிஸ்ராதான் அமைத்திருக்க முடியும்.

இன்று (08-05-2018) விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ஆஜரான கபில்சிபல், இவ்வழக்கை இந்த ஐந்து பேர் கொண்ட அமர்வுக்கு ஒதுக்கி யார் உத்தரவிட்டார்கள்? அந்த ஆணையின் நகல் வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் “அந்த ஆணையின் நகலை வழங்க முடியாது” என்று அமர்வு மறுத்துள்ளது.

இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் சுமார் 45 நிமிடங்கள் நடந்தன. “தரமுடியாது” என்ற உங்களது கூற்றை எழுத்து பூர்வமாகவாவது பதிவு செய்யுங்கள் என்று கோரினார் கபில் சிபல். முடியாது என்று மறுத்தது ஐந்து பேர் அமர்வு.

“அந்த உத்தரவே சட்ட விரோதமானது, முறைகேடானது என்று அதற்கு எதிராக வழக்கு தொடுக்கும் பொருட்டுத்தான் அந்த உத்தரவைக் கேட்டேன். மறுத்து விட்டார்கள்” என்கிறார் கபில் சிபல்.

தானும் சம்மந்தப்பட்ட மருத்துவக்கல்லூரி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பதற்கான நீதிபதிகளை தீபக் மிஸ்ராவே நியமித்துக் கொண்டார் என்பது அவரைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் ஒரு குற்றச்சாட்டாகும். பல வழக்குகளில், சாதகமான தீர்ப்பை பெறும் வகையில், குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு அந்த வழக்கு விசாரணைகளை ஒதுக்கிக் கொடுத்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டாகும். மேட்ச் பிக்சிங் போல இது பெஞ்ச் பிக்சிங் என்ற மிக மோசமான ஊழலும் அதிகார முறைகேடும் ஆகும்.

தற்போது தனக்கு எதிரான இம்பீச்மென்ட் (பதவி நீக்க) தீர்மானம் தொடர்பான வழக்கிலும் “பெஞ்ச் பிக்சிங்” செய்து விட்டார் தீபக் மிஸ்ரா. “இதற்கு மேல் எந்தக் கோயிலில் போய் முறையிடுவது?” என்ற நிலையில் வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்து விட்டார் கபில் சிபல்.

தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்துக்கு வெங்கையாநாயுடு அனுமதி மறுத்ததற்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக காங்கிரசு கூறியபோது, அதனைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தோம். நமது கேள்வியை மெய்ப்பித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

நான்தான் நீதிபதி என்று ஒரு குற்றவாளி கொக்கரிக்கும்போது…. அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் நாங்களும் நீதிபதிகள்தான் என்று அணிவகுத்து நிற்கும்போது, இந்தக் கும்பலைச் சேர்ந்த யாருக்கும் நேர்மை மட்டுமல்ல, கவுரவமோ, வெட்கமோ, கூச்சமோ கடுகளவும் இல்லாதபோது, இப்படிப்பட்ட ஒரு மன்றம், உச்ச நீதிமன்றம் என்று தனக்குப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கும்போது…

இதனை கேடுகெட்ட இழிநிலை எனலாம். இந்த அரசியல் கட்டமைப்பின் மீளமுடியாத நெருக்கடி எனப் புரிந்து கொள்ளலாம். நெருங்கி வரும் பாசிசத்தின் நுழைவாயில் என்றும் எச்சரிக்கை கொள்ளலாம்.

– வினவு செய்திப் பிரிவு

சந்தா