டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !

ஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை.

ம் ஊர் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒரு பழக்கம். எதற்கெடுத்தாலும் “ஜப்பானைப் பார்” என்று அந்த நாட்டுத் தொழிலாளிகளை முன்மாதிரியாக காட்டுவார்கள். “அங்கே வேலைநிறுத்தமே கிடையாது. நிர்வாகத்தின் மீது அதிருப்தி இருந்தால் தொழிலாளிகள் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை செய்வார்கள். தொழிலாளிகள் அந்த மாதிரி இருந்தால்தான் நாடு வல்லரசாகும்” என்றெல்லாம் சிலாகித்து பேசுவார்கள். அப்பேர்ப்பட்ட வல்லரசு ஜப்பானின் தொழிலாளர்கள் ஒரு வித்தியாசமான போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது நம் ஊர் முதலாளிகளுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை.

ஜப்பானின் ஒகாயாமா நகரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 02.05.2018 முதல் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை. பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால் “பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பதில்லை” என்பது இந்தப் போராட்டத்தின் சிறப்பம்சம்.

ஜப்பானின் ஒகாயாமா என்ற நகரில் பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. போராட்டம் நடத்தும் தொழிலாளிகள் ரியோபி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்கின்றனர். இவர்கள் ஓட்டிச்செல்லும் அதே வழித்தடங்களில் மெகூரின் என்ற மற்றொரு தனியார் நிறுவனம் பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது. சந்தையைப் பிடிப்பதற்காக கட்டண சலுகைகளை அறிவித்து புதிய பேருந்துகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

ரியோபி நிறுவனத்தைச் சார்ந்த பேருந்து தொழிலாளிகளோ, பணிப்பாதுகாப்பு கோரி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டம் நிறுவனத்தின் நிதியாதாரத்தைப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும், தனியார் நிறுவனத்தின் நெருக்கடிக்குப் பயப்படாமல் இந்தப் போராட்ட வடிவத்தை தெரிவு செய்திருக்கிறார்கள் ஜப்பான் தொழிலாளர்கள்.

சமீபத்தில் தமிழகத்தில் அரசுப்பேருந்து தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தபோது, சிரமங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு தொழிலாளிகளின் போராட்டத்தை ஆதரித்தார்கள் தமிழக மக்கள். பொதுமக்கள் தொழிலாளிகளுக்கு அளித்த பேராதரவால் பீதியடைந்த காரணத்தினால்தான், எடப்பாடி அரசு தொழிலாளிகளின் போராட்டத்திற்குப் பணிந்தது.

தானியங்கி கட்டண எந்திரத்தை துணியால் மூடி மறைத்துள்ள பெண் ஓட்டுனர்

அடுத்த சில மாதங்களிலேயே வந்தது அயோக்கியத்தனமான கட்டண உயர்வு. மக்கள் கொதித்தார்கள். குமுறினார்கள். மக்கள் அதிகாரம் அமைப்பினர், “பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்யுங்கள்” என்று பயணிகளிடம் அறைகூவல் விட்டனர். “இலவசப் பயணத்தை அனுமதியுங்கள், மக்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று ஓட்டுநர் நடத்துனர்களிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்கள் அதிகாரத்தின் அறைகூவலை பயணிகள் வரவேற்றார்கள். சிலர் பயணச்சீட்டு வாங்க மறுத்து பயணம் செய்தார்கள். ஆனால் நடத்துனர்கள் இதனை ஆதரிக்கவில்லை. சிலர் தங்களுக்கு வேலை போய்விடும் என்று பதறினார்கள். மற்றவர்களோ, “கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியிருக்க வேண்டும். ஒரேயடியாக ஏற்றியதுதான் தவறு” என்று கட்டண உயர்வுக்கு முட்டுக்கொடுத்துப் பேசினார்கள்.

“எங்களுடைய ஓய்வூதியத்தையும், சேமநல நிதியையும் அரசு திருடிவிட்டது. போக்குவரத்து துறையில் தலைவிரித்தாடும் ஊழலும், நிர்வாகச் சீர்கேடும்தான் இதற்கு காரணம்” என்று வேலை நிறுத்தம் நடத்தியபோது அரசை சாடிய தொழிற்சங்கத் தலைமைகள், அநியாய கட்டண உயர்வை மக்கள் மீது அரசு திணித்தபோது அந்த உண்மையைப் பேசவில்லை. கட்டண உயர்வை சத்தம்போடாமல் அமல்படுத்தினார்கள்.

“உயர்த்தப்பட்ட கட்டணத்தை மக்களிடமிருந்து வசூலிக்க மாட்டோம். பழைய கட்டணத்தைத்தான் வாங்குவோம்” என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தால்? அப்படி ஒரு போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தியிருந்தால்? தொழிலாளிகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இடையில் அற்புதமானதொரு ஒற்றுமையை அது ஏற்படுத்தியிருக்கும்.

புதிய போராட்ட முறைகள், புதிய உத்திகள் வேண்டும், தொழிலாளர்களே, ஜப்பானைப் பாருங்கள்.

  • வினவு செய்திப் பிரிவு