ஐ.டி துறை: இலாபம் கூடுகிறது – வேலைவாய்ப்பு குறைகிறது!

முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி வேலையற்றோர் பட்டாளத்தையும் சமூக ஏற்றத்தாழ்வையும் பெருகச்செய்யுமே தவிர ஒருபோதும் குறைக்காது என்பதே மார்க்சின் கூற்று. மெய்நடப்புகள் அதை மென்மேலும் நிரூபிக்கின்றன.

ந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையின் நான்கு முன்னணி நிறுவனங்கள் 2017-2018 நிதியாண்டில் 76 விழுக்காட்டிற்கு மேல் ஆளெடுப்பைக் குறைத்துள்ளன. ஆனால் இதே நிதியாண்டில் அந்நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் நிறுவனங்கள் மார்ச், 2018 நிதியாண்டு முடிவில் 13,972 ஊழியர்களை மட்டுமே புதிதாக பணியில் சேர்த்திருந்தன. மாறாக 2016-2017 நிதியாண்டில் 59,427 ஊழியர்களை பணியில் சேர்த்திருந்தன.

பாரிய வருவாய் உயர்வுக்கிடையிலும் குறைவான ஆட்சேர்க்கை என்பது நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்திற்கு செல்லும் போக்கையே காட்டுகிறதுஎன்று எச்.எஃப்.எஸ் (Hfs Research) நிறுவனத்தின் ஆலோசகரான டாம் ரீயூனர் கூறினார். “ஆட்சேர்க்கை குறைப்பும் ஆட்குறைப்பும் நாம் நினைத்ததை விடவும் தீவிரமாக இருக்கிறதுஎன்று என்று அவர் கூறியிருக்கிறார்.

ஊழியர்களை மையமாக கொண்ட பழைய மாடலின்படி, ஒரு நிறுவனத்தின் வருவாய் அதிகரித்தால் ஆட்சேர்க்கையும் இயல்பாகவே அதிகரிக்க வேண்டும். ஆனால் 2017-18 நிதியாண்டில் இந்நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியானது வருவாய்க்கும் ஆட்சேர்க்கைக்குமுமான இடையில் நிலவிய இணைப்பை வெற்றிகரமாக உடைத்துவிட்டது.

எடுத்துக்காட்டாக 2017-18 நிதியாண்டில் டி.சி.எஸ் நிறுவனத்தின் வருவாய் உயர்வு 8.6 % – ஆட்சேர்க்கை 2%. இன்போசிஸின் வருவாய் உயர்வு 7.2% அதன் ஆட்சேர்க்கை 1.9%. விப்ரோ நிறுவனத்தின் வருவாய் உயர்வு 5.5 % ஆட்சேர்க்கை 1 %.

பெருநிறுவனங்களில் பெரும்பாலானவை 2017-18 நிதியாண்டில் டிஜிட்டல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ததால் ஆட்சேர்ப்பை குறைத்து விட்டன. டி.சி.எஸ் நிறுவனம் 2017-18 ஆண்டில் 7,775 ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தி இருக்கிறது. முந்தைய ஆண்டில் 33,380 ஊழியர்களை பணியமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முறைசார்ந்த இந்தியத் தொழில்துறையில் இலாபத்தை முதன்மைப்படுத்தி தகவல் தொழில்நுட்பத் துறையில் நிகழும் பாரிய மாற்றத்தை சொல்லும் ஒரு சிறு சித்திரம் இது. அதே சமயத்தில் இந்தியத் தொழிற்துறையின் மற்றொரு பரிமாணத்தை பறைசாற்றும் சித்திரமும் இங்கே உண்டு.

ஒட்டுமொத்த இந்தியாவின் வேலைவாய்ப்பில் 81 விழுக்காட்டை முறைசாராத் தொழில்துறை அளிப்பதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. வெறுமனே 6.5 விழுக்காடு வேலைவாய்ப்பினை மட்டுமே முறை சார்ந்த தொழில்துறை வழங்குவதாகவும் இந்தியாவை விட பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முறைசார்ந்த வேலைவாய்ப்பினை வழங்குவதில் மேம்பட்டிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது. மேலும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 98.3 விழுக்காட்டினர் முறைசாரா தொழிலில் வேலை செய்வதாகவும் கூறுகிறது அவ்வறிக்கை.

6.5 விழுக்காடு வேலை வாய்ப்பை மட்டுமே வழங்கும் முறைசார்ந்த தொழில்களுக்கு வாரிக் கொடுப்பதன்மூலம்தான் ஜி.டி.பி. உயருமென்றும்வேலை வாய்ப்பு பெருகுமென்றும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயருமென்றும் ஆளும் வர்க்கமும் அரசும் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் ஆகப்பெரிய பொய். இந்த முறைசார்ந்த துறைகளின் நலனுக்காகத்தான் கல்வித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்தத் துறைகளும் இந்தியாவில் இயங்குகின்றன. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையான முறைசாராத் தொழில்களில் உழைக்கும் ஏழை எளிய மக்களிடமிருந்து சுரண்டப்பட்டதும் பறிக்கப்பட்டதும்தான் முறைசார் தொழில்களின் முதலாளி வர்க்கத்துக்குத் தீனியாகப் போடப்படுகிறது. சமூகத்தின் தயவில் உண்டு கொழுத்து வரும் முதலாளி வர்க்கமோ, தன்னுடைய தயவில்தான் சமூகம் வாழ்வதாக கருதிக் கொள்கிறது. மக்களையும் நம்ப வைத்திருக்கிறது.

வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க