மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !!

நூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின் போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா?

1

மே-22 பொதுவேலைநிறுத்தம் – ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மற்றும் மாநகர மக்கள் ஒன்றிணைந்து  “ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை” ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

குறிப்பாக குமரட்டியபுரம் பகுதி மக்களின் போராட்டம், 100-வது நாளை எட்டியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் முன்முயற்சியில் ஐந்து நபர்களை கொண்ட பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அம்மக்கள் மத்தியில் பிரசுரம் விநியோகித்தும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தியும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். சாதி, மதம், அரசியல் கட்சி இவற்றுக்கு அப்பாற்பட்டு, ‘’நாசகார ஸ்டெர்லைட்டை மூடு’’ என்ற பொதுக் கோரிக்கையின் கீழ் அம்மக்களை அணிதிரட்டி வருகின்றனர்.

இப்போராட்டத்தின் 100-வது நாளையொட்டி, வருகின்ற மே-22 அன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது இக்கூட்டமைப்பு. மேலும், பொதுவேலைநிறுத்தம் என்ற அறிவிப்போடு வீட்டில் முடங்கிவிடாமல், பெருந்திரளான மக்கள் பங்கேற்கக்கூடிய போராட்டமாகவும் அமைய வேண்டுமென்ற நோக்கில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

கூட்டமைப்பின் பொதுவேலைநிறுத்த அழைப்பை ஏற்று, வியாபாரிகள் சங்கம் , விவசாயிகள் சங்கம் , உப்பள தொழிலாளர் சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு சங்கங்களும் பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. மேலும், தமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பும் விடுத்துள்ளன.  

மே – 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுவேலை நிறுத்தம் மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் என்பது ஏதோ தூத்துக்குடி மாவட்ட மக்களின் உள்ளூர் பிரச்சினைக்கான போராட்டம் அல்ல. டெல்டா விவசாய வயல்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பு, தேனியில் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைப்பு போன்ற நாசாகரத் திட்டங்களுள் இதுவும் ஒன்று என்ற அடிப்படையில், இது அனைத்து மக்களுக்குமான பிரச்சினை.

நூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின்  போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா?

தகவல்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.