ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !

வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு"

0

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மற்றும் மாநகர மக்கள் ஒன்றிணைந்து  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். பல்வேறு மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியில் 22.05.2018 அன்று கூட்டமைப்பின் சார்பில் மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

போராட்டம் அறிவித்த நாள் தொடங்கி பல முன்னணியாளர்களை தேடித் தேடி கைது செய்தது போலீசு. மேலும் பல்வேறு வகைகளில் போராட்டத்தை முடக்க முயற்சித்தது.

இதைத் தொடர்ந்து 22-ம் தேதி போலீசு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டது. மக்கள் போராட்டம் அறிவித்திருந்த வேளையில் 144 தடையுத்திரவை பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர்.

இந்த தடைகள் அனைத்தயும் மீறி பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என அனைவரும் கூட ஆரம்பித்தனர். இது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. வீட்டிற்கு ஒருவர் கேன்சருக்கும் இன்னும் பல நோய்களுக்கும் ஆளாகியுள்ள துயரம் அவர்களை ரோட்டுக்கு இழுத்து வந்ததுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், முத்துநகர், தாளமுத்துநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முத்துநகர் மாதா கோவிலில் கூடி வருகின்றனர். இங்கு ஒன்று கூடி பின்னர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று அறிவித்திருக்கின்றனர்.

முத்துநகர் மாதா கோவில் நோக்கி மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக போலீசு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

போலீசின் தடையை மீறி மக்கள், பல்வேறு வழிகளில் மாதா திடலில் குவிந்து வருகின்றனர். இதுவரையில் ஆயிரத்துக்குமேற்பட்ட மக்கள் அங்கே திரண்டிருக்கின்றனர்.

மக்கள் பேரணி புறப்பட்டது.

முத்துநகர் மாதா கோவிலில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்ட மக்களை தடுக்கும் விதமாக போலீசு வேனை குறுக்கே நிறுத்தியிருந்தது. தடையைத் தகர்த்து முன்னேறும் மக்கள் வெள்ளம்.

காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா?

போலீசு தடுத்தால் என்ன? ஸ்டெர்லைட்டை மூடும் வரை ஓயமாட்டோம்! வருமானம் உங்களுக்கு ! 144 எங்களுக்கா தேவர்புரம் சாலையில் தடுப்பரண்களைத் தகர்த்து முன்னேறும் மக்கள். தடை பல தாண்டி அலைகடலாய் திரண்டு வந்த மக்கள் வெள்ளம்!

பேரணிக்குள் போலீசு மாட்டை அவிழ்த்துவிட்டது. மாடு முட்டியதால் பாதிக்கபட்ட மக்களுக்கு முதலுதவி செய்யும் பகுதி மக்கள்.

மாட்டை அவிழ்த்துவிட்டால், முடங்கிவிடுமா மக்களின் எழுச்சி?

போலீசு வீசிய கண்ணீர் புகை குண்டு வீச்சு ! போர்க்களமானது தூத்துக்குடி.

வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் “எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு”

ஸ்டெர்லைட்டை மூடச் சொன்னதுக்கா நெஞ்சைப் பார்த்து சுட்டார்கள்?

– வினவு செய்தியாளர்கள், தூத்துக்குடியிலிருந்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க