பத்திரிகைச் செய்தி!

22.5.2018

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தை பிளவுபடுத்தி, சீர்குலைத்து ஒடுக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்!

“இலட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்று தூத்துக்குடி நகர மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கமிட்டிகள் இணைந்து இன்று (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ற போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

எத்தனை முறை மனு கொடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. தூத்துக்குடி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மொத்தம் 13 இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், பெண்டு பிள்ளைகளுடன் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக அமர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசுவதற்குக்கூட மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார்கள் மக்கள்.

போராட்டம் அறிவித்த பின்னரும், மக்களை அழைத்துப் பேசாமல், போராட்டத்தை முறியடிப்பதற்கான சதி வேலைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஒரு குழுவினரை வைத்து இரண்டு நாட்கள் முன்பு அறிவிக்கச் செய்தது. இதனை போராடும் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். முற்றுகைப் போராட்டம் நடந்தே தீரும் என்று 13 மக்கள் கமிட்டிகளும் உறுதியாக அறிவித்தனர். இதன் காரணமாக கடுமையான அடக்குமுறையை ஏவத்தொடங்கியிருக்கிறது அரசு.

நேற்று இரவு தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. முன்னணியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். கிராமப்புற சாலைகள், தூத்துக்குடி தெருக்கள், தேவாலயங்கள் என போராடும் மக்கள் இருக்கின்ற பகுதிகள் எல்லாம் தடுப்புவேலி அமைக்கிறது காவல்துறை. இவற்றை மீறி கிராமப்புறங்களிலிருந்து மக்கள் வந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, வேன் உரிமையாளர்கள் போலீசால் மிரட்டப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஸ்டெர்லைட் என்ற பன்னாட்டு கம்பெனிக்காக உள்ளூர் மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது போலீசு. சில ஆண்டுகளுக்கு முன் கூடங்குளத்தில் என்ன நடந்ததோ அதுதான் தற்போது தூத்துக்குடியிலும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அணு உலைக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் அமைதி வழிப் போராட்டம் நடந்தது. எல்லா கட்சியினரும் வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இறுதியில் கடுமையான அடக்குமுறையும் துப்பாக்கிச் சூடும் மக்கள் மீது நடத்தப்பட்டது. போராட்டம் நசுக்கப்பட்டது. அன்று தமிழகத்தின் கட்சிகள் அனைவரும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அவ்வாறு போராடியிருந்தால், இன்று 3,4,5 என்று அடுக்கடுக்காக அணு உலைகளைத் திணித்திருக்க முடியாது.

இன்று, ஸ்டெர்லைட் பிரச்சினையிலும் எல்லா கட்சியினரும் போராடும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.  இந்த நச்சு ஆலையை அகற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர். அவர்களெல்லாம் அரசு அடக்குமுறையை ஏவுகின்ற இந்த தருணத்தில் பேசவேண்டும். கூடங்குளம் மக்களுக்கு நேர்ந்த கதி தூத்துக்குடி மக்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

இதோ, தம் குழந்தைகளை புற்றுநோய்க்கு பலி கொடுத்த மக்கள் பிள்ளை குட்டிகளுடன் கத்திரி வெயிலில் வீதியில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் நமது ஆதரவு அந்த மக்களுக்கு தேவைப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி தூத்துக்குடி மக்களின் வெற்றியாக மட்டும் இருக்காது. இந்த வெற்றி நியூட்ரினோ முதல் ரசாயன மண்டலம் வரையிலான அனைத்து பிரச்சினைகளிலும் வெற்றி காணும் வரை போராடுவதற்கான உற்சாகத்தை மக்களுக்கு கொடுக்கும்.

எனவேதான் இந்த போராட்டத்தை நசுக்குவதற்கு வெறித்தனமாக முயற்சி செய்கிறது அரசு. இந்தப் போராட்டத்தை ஒடுக்கிவிட்டால், மற்ற எல்லா மக்களும் தானே அடங்கி விடுவார்கள் என்பதுதான் அரசின் அணுகுமுறை. எனவே இன்று ஸ்டெரிலைட் எதிர்ப்புக்கு நாம் கொடுக்கும் குரல்தான், நாளை நியூட்ரினோ முதல் ஹைட்ரோ கார்பன் வரையிலான எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவான குரலாக பல்கிப் பெருகும்.

இது எந்த ஒரு புதிய கோரிக்கையையும் வைத்து நடத்தப்படும் போராட்டம் அல்ல. எங்களை வாழ விடு என்று இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்துகின்ற போராட்டம். தங்களுடைய உயிரையும், தம் பிள்ளைகளின் உயிரையும், இந்த மண்ணையும், நீரையும், காற்றையும் காப்பாற்றுவதற்காக மக்கள் நடத்துகின்ற போராட்டம். இதனை ஆதரித்து குரல் கொடுக்குமாறு எல்லா கட்சிகளையும் இயக்கங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

போராடும் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகின்ற இந்த தருணத்தில் நாம் யாரும் மவுனம் சாதிக்கலாகாது. அனைவரும் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நேரம் இது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழகமே வீதிக்கு வர வேண்டும். நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீதேன், ரசாயன மண்டலம் போன்ற வாழ்வாதாரங்களை நாசமாக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடுகின்ற மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

இன்று மாலை 3 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வாயிலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், தூத்துக்குடி மக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதேபோல தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக எல்லா கட்சியினரையும் இணைத்துக் கொண்டு மக்கள் அதிகாரம் போராட்டம் நடத்தும்.

தமிழக அரசே,
போராடும் தூத்துக்குடி மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து!
144 தடை உத்தரவை ரத்து செய்!
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு