குருதியில் நீந்தும் காலம்

சுடுடா சுடு
நிராயுதபாணிகளை
நெஞ்சுக்கு நேராகச் சுடு
குண்டுகள் வீணாக்காமல் சுடு
பத்துக்குண்டுகளுக்கு
பத்துப்பேர் விழவேண்டும்

முதலில் ஆகாயத்திற்கு நேரே சுடவேண்டியதில்லை
முதலில் முட்டுக்கு கீழே சுடவேண்டியதில்லை
கண்ணீர் புகைக் குண்டுகள் வேண்டியதில்லை
வீண் செலவுகளை தவிர்க்கவேண்டும்
துப்பாக்கியை நெஞ்சுக்கு நேரே உயர்த்து
நாங்கள் சாகப்பிறந்தவர்கள்
மக்கள் வாழ்வதற்காக சாகப்பிறந்தவர்கள்

சுடுடா மறுபடி சுடு
குருவிகளை சுடுவதென்றால்கூட
குறிபார்க்கவேண்டும்
மிருகங்களை சுடுவதென்றால்கூட
மறைந்து காத்திருந்து சுடவேண்டும்
மக்களைச்சுட எதுவுமே தேவை இல்லை
எதிர்த்து நிற்பவர்கள் நெஞ்சில்
ஈய ரவைகளை செலுத்து
அவர்கள் அதை புரிந்துகொள்வதற்குள்
தம் நெஞ்சில் வழியும் குருதியைக்கண்டு
அவர்கள் வியக்கும்படி
அத்தனை விரைவாய் சுடு

மக்கள் நச்சுக்காற்றை எதிர்த்துப்போராடினார்கள்
கேன்ஸரை எதிர்த்துப்போராடினார்கள்
கருவிலிருக்கும் தம் குழந்தைகள்
ஊனமடைவதை எதிர்த்துப்போராடினார்கள்
எளிய மக்கள் தாங்கள் நஞ்சாகக்கப்படுகிறோம்
என்று அறிந்த நாளில் தெருவுக்கு வந்தார்கள்
பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை
இப்போது துப்பாக்கிக்குண்டுகளால்
அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது

ஒரு பதினேழு வயது சிறுமி
ஒரு அறுபட்ட புறாவைபோல
ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள்
இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள்
எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன

திறந்த கண்களுடன்
ஒரு இளைஞன் கைகளை விரித்தபடி
வீழ்ந்துகிடக்கிறான்
அவன் மனைவி மார்பில் விழுந்து கதறுகிறாள்
அவள் நெற்றியில் துப்பாகிக் குருதி
குங்குமம் போல பரவுகிறது
இப்படித்தான் நீதி கேட்கப்படுகிறது

இந்த அந்தியின் வெளிச்சம்
குருதிவண்ணத்தில் இருக்கிறது
இந்த அந்தியின் காற்றில்
குருதியின் உப்புக் கரிக்கிறது

பத்துப்பேர் இறந்துவிட்டார்கள்
இன்றைய இலக்கு நிறைவடைந்ததா?
திரும்பிச்செல்லுங்கள்
உங்கள் முதலாளிகள்
இன்றிரவு நிம்மதியாகக் குடிப்பார்கள்
உங்களுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்
இன்றிரவு நிம்மதியாக புணர்வார்கள்

ஊரில் பத்துவீடுகளில்
சாவின் அதிகாரம் நிரம்பியிருக்கிறது
பத்து சவ ஊர்வலங்கள் ஒரே நேரத்தில்
கிளம்புகின்றன
மக்கள் மனம் சிதறி அழுகிறார்கள்
இயலாமையுடன் சாலைகளை மறித்து
லத்தியால் அடிவாங்கி ஓடுகிறார்கள்

மக்களை இன்னும் எப்படி அச்சுறுத்துவதெனெ
வேட்டை நாய்கள்
ரகசியமாக கூடிப்பேசுகின்றன
பத்துப்பேரை கொல்லும் அளவு
தனக்கு அதிகாரம் இருப்பதைக் கண்ட தலைவன்
அந்தரங்க கிளுகிளுப்புடன்
நீலிக்கண்ணீர் வடிக்கிறான்

நமது காலம் நெருப்பில் நீந்துகிறது
நமது காலம் கண்ணீரில் நீந்துகிறது
நமது காலம் குருதியில் நீந்துகிறது

அடுத்த வெடியோசைக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.
தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்.

எதற்கு என்று கேட்காதீர்கள்.
மக்கள் தங்களை வன்மத்துடன் ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்.

22.5.2018
மாலை 6.16
மனுஷ்ய புத்திரன்

1 மறுமொழி

  1. In the name of law and order EPS and OPS close friends of our Prime Minister have killed our fellow citizens. My heart felt condolences . How long the on lookers of Tamizhnadu and other law abiding citizens of India are going to tolerate such attrocities ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க