தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்தப்பி, படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவது என்ற சம்பிரதாயமான நடவடிக்கையைக்கூட மேற்கொள்ள எடப்பாடி அரசு தயாராக இல்லை. மாறாக, 144 தடையுத்தரவு இருப்பதால் தூத்துக்குடி செல்லவில்லை என்று எகத்தாளமாக கோட்டையில் இருந்தபடியே பேட்டியளித்தார் எடப்பாடி.
எல்லாம் முடிந்த பின்னர், எடப்பாடியின் எடுபிடி, அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி நகருக்குள் நுழைந்ததுமே காத்திருந்தது அதிர்ச்சி. சென்ற இடமெல்லாம் கேள்விகளால் துளைத்து துரத்தியடித்தனர் தூத்துக்குடி மக்கள். மருத்துவமனைக்குள் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறும் நாடகத்தையும் அரங்கேற்றிவிடும் திட்டத்தில் நுழைந்தார், கடம்பூர் ராஜூ.
உடம்பில் குண்டுகள் துளைத்தும், சதை கிழிந்தும், எலும்பு முறிந்தும் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் அந்த நிலையிலும் உறுதி குலையாமல், ”கம்பெனிகிட்ட எவ்வளவு காசு வாங்குனீங்க? அதவிட நா மூனு மடங்கு தாரேன். எப்போது ஆலையை மூடுவீங்க? வாயால சொல்லாதீங்க., எழுதி கொடுங்க” என்று அடுத்தடுத்த கேள்விகளால் அமைச்சரை திணறடித்தார், அந்தப் போராளி.
துப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்…? கேள்வியெழுப்புகிறார்கள்., தூத்துக்குடி மக்கள்.