இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி

நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார், டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ. நடைமுறையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன?

0
டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ (நடுவில்)

டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ மே 13 –ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஒரு அறிக்கையை வாசித்துள்ளார். அதில் நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் மே மாதம் 13–ஆம் தேதியிலிருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார். கூடவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஒரு வேளையாவது நோன்பு இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனில் குட்டோவின் அறிக்கை ஒளிவு மறைவின்றி கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளையும், அதற்கு ஒரு மத ரீதியான எதிர்வினையையும் பேசுகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகள் ஆட்டம் கண்டுள்ளதாகவும், மதச்சார்பற்ற கொள்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் 2019–இல் புதிய அரசு ஒன்றமைவதற்கு ஜெபவலிமையை கோருகிறது அந்த அறிக்கை. நாடு நலம் பெறவும், நாட்டின் தலைவர்களுக்கு புத்திமதி வேண்டியும் பொதுவாக ஜெபிப்பதை கிறிஸ்தவ பாதிரியார்கள் வழமையாக கொண்டவர்கள்.

ஆனால் டில்லி தலைமை பேராயரின் அறிக்கை சில திட்டவட்டமான விசயங்களை பேசுகிறது. இதற்கு காரணம் இல்லாமலில்லை. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014–ஆம் வருடம் பொறுப்புக்கு வந்த பிறகு சிறுபான்மை மதத்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இவை மோடி நேரடியாக தூண்டி நடைபெறுகின்றன என்று நம்ப வேண்டியதில்லை தான். ஆனால் அரசதிகாரத்தில் இருப்பவர்களின் உரைகளிலும், சமிக்கைகளிலும் உள்ள குறிப்புகளை உணர்ந்து ஹிட்லர் யுகத்தின் அட்டூழியங்களை நினைவுபடுத்தும் பாதகங்கள் சங்கபரிவார கும்பலால் அரங்கேற்றப்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் 2014–ஆம் வருடம் 133 தாக்குதல்கள், 2015–இல் 155, 2016–இல் 348, 2017–இல் 736 வன்முறை சம்பவங்களாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் சதவீதம் வெறும் 2.3 மட்டுமே. சிறியதும் பெரியதுமான இந்த தாக்குதல்கள் ஒரு தாழ்நிலை போரென்றால் மிகையில்லை.

அடுத்த வருடம் மே 19–ஆம் தேதியுடன் மோடியின் ஐந்தாண்டுகால ஆட்சி நிறைவடைவது தான் மே 13–ஆம் தொடங்கிய ஜெப விண்ணப்பத்துக்கு காரணம் என்றாலும் அந்த நாளை தேர்ந்தெடுத்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மே 13 –ஆம் தேதி தூய ஃபாத்திமா அன்னையின் விழா நாள். ஃபாத்திமா அன்னை, லூர்து அன்னை எல்லாமுமே இயேசுவின் தாய் கன்னிமரியாவை சுட்டுபவை தான். இந்து புரிதலில் அவற்றை மரியாவின் அவதாரங்கள் எனலாம்.

போர்ச்சுகல் நாட்டில் ஃபாத்திமா என்ற இடத்தில் அமைந்ததொரு ஆலயத்தின் சேகரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளுக்கு 1917–ஆம் வருடம் சில ரகசிய வெளிப்பாடுகள் கிடைத்தன. அச்சிறுமிகளின் பெயர்கள் ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மற்றும் லூசியா சான்றோஸ். 1917–ஆம் வருடம் மே 13–ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13–ஆம் வரையான காலகட்டத்தில் மரியாவின் திருவருகையை கண்டுணர்ந்துள்ளனர்.

முதல் செய்தியாக உலகப் போர் சீக்கிரம் முடிவுக்கு வர ஜெபமாலை துணையுடன் அழுத்தமாக பிரார்த்திக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். அடுத்து ஜூன் மாதத்தில் நடந்த இரண்டாம் திருவருகையின் செய்தி சுவாரஸ்யத்துக்குள் பொதியப்பட்ட மற்றொரு சுவாரஸ்யம் எனலாம். கம்யூனிச கொள்கையிலிருந்து ரஷ்யா விடுபட கத்தோலிக்கர்கள் ஜெபிக்க கேட்டுக்கொண்டது இரண்டாம் ரகசியமாக பகிரப்பட்டுள்ளது. மூன்றாம் ரகசியம் ஆகஸ்ட் 13–ஆம் தேதி உரைக்கப்பட்டது. அது மனந்திரும்பாத பலர் அவதியுறப்போவது பற்றிய எச்சரிக்கை. அந்த வருடம் தமது கூற்றின் உண்மை தன்மைக்கு சான்றாக அக்டோபர் 13–ஆம் தேதி வானில் ஒரு அற்புதம் நிகழும் என்ற சிறுமிகளின் அறிவிப்பை தொடர்ந்து எழுபதாயிரம் மக்கள் ஃபாத்திமாவில் கூடினர். பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படத்தில் வெறும் இருட்டு மட்டும் தான் பதிவாகி உள்ளது. அந்த மூன்று சிறுமிகளில் இருவர் முன்னரே இறந்ததும் ஒருவர் பிழைத்திருந்ததும் கூட முன்னரே வெளிப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. தூய ஃபாத்திமா அன்னையின் திருவருகையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முடித்த கையோடு தான் அனில் குட்டோவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சரி விசயத்துக்குள் செல்வோம். இந்தியாவில் கிறித்தவ அணிதிரளுதலுக்கான புறநெருக்கடி ஒன்று வலுவாக தோன்றி இருக்கிறது என்றாலும் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருங்குவது அந்த நெருக்கடியின் தீர்வுக்கு பலனளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். இது போன்றதொரு எதிர்வினையை தான் எதிர்பார்ப்பது போலுள்ளது. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் அளவில் சுருங்கிக் கொண்டால் அறுவடை எளிது என்று நினைக்கிறது.

குஜராத் மாநிலத் தேர்தலின் போது பந்தக் வாலா என்றொரு முஸ்லிம் பேராசிரியரின் பேட்டி ஸ்கிராலில் வெளிவந்தது. அவரிடம் பட்டேல்கள், பிற்பட்டவர்கள் மற்றும் தலித்களை ஒன்றிணைத்த ஹார்த்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் மற்றும் ஜிக்னேஷ் மெவானி போன்ற சமூக தலைவர்கள் குஜராத்தில் கணிசமாக வாழும் முஸ்லிம்களிடம் ஏன் உருவாகவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு முஸ்லிம் தலைவர் எங்களிடம் உருவாகி விடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். ஏனெனில் அதனை பி.ஜே.பி. தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பிருந்ததை உணர்ந்திருந்தோம் என்றார்.

அனில் குட்டோவின் அறிவிப்பு டில்லி மறைமாவட்டத்துக்கானது. அது இந்திய அளவில் எடுக்கப்பட்டது தான். என்றாலும் அதனை இந்திய அரசியலில் வாடிகனின் தலையீடாக காட்டுவதில் பா.ஜ.க.வும், அதன் சார்பு ஊடகங்களும் முனைப்பு காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களை ஏய்க்கும் உத்தி கொண்ட இந்த கதையாடலுக்குள் சிக்கிக் கொள்வது விவேகமாக இருக்காது. அது தேசம் முழுவதும் இப்போது சூல் கொண்டு வரும் நரேந்திர மோடி அரசுக்கெதிரான அதிருப்தி உணர்வை குலைத்து குஜராத், உ.பி. தேர்தல் முடிவுகள் போன்று சமூக முனைவாக்கத்துக்கு இட்டு சென்று விடும் அச்சம் தொக்கி நிற்கிறது. தங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய புரிதலோ, எதிர் தாக்குதல் உணர்வோ இருக்கக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். ஆனால் அவை முழுமையின் நோக்கத்துக்கு (மோடியை அப்புறப்படுத்துவது) உதவுகின்ற வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரம், வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தோல்வி தலித், இசுலாமியருக்கெதிரான தாக்குதல்கள், கருத்து சுதந்திரப் பறிப்பு, பகுத்தறிவாளர்கள் கொலை என்ற ஒருங்கிணைந்த கோணத்தில் இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொள்வது தான் நல்லது. கன்னிமரியாவின் ஆவியுரு புனைவின் வழியாக இந்துத்துவத்தை வீழ்த்த முற்படுவது வீரகாவிய நையாண்டி வகையினதாக இருக்கிறது.

  • ராஜ்
    (சமூக அரசியல் விமர்சகர்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க