ழ்வார்பேட்டை ஆண்டவர் கருநாடகாவுக்கு திக் விஜயம் மேற்கொண்ட செய்தி ஊடகங்களில் பரபரப்பாக அலசப்படுகின்றது. கருநாடக முதல்வர் குமாரசாமிக்கு தரிசனம் கொடுத்த ஆண்டவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசும் போதுதான் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கருநாடகம் வந்ததாக தெரிவித்தார். மேலும், காவிரி பிரச்சினை குறித்து முதல்வருக்கு அருளுரை வழங்கிய கமலஹாசன், குறுவை சாகுபடிக்கு காவிரியைத் திறந்து விட கோரியதாகவும் குறிப்பிட்டார். மேலும் இப்பிரச்சினை இன்று நேற்று வந்ததல்ல என்றும், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாகவும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். தமிழர்களும் கன்னடர்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் எனத் தாம் திருவுளம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் ஆண்டவரோடு தோன்றிய குமாரசாமி,  காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார். இதற்கிடையே கருநாடகாவைச் சேர்ந்த சில அமைப்புகள் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை அம்மாநிலத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கருநாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் அப்படத்திற்கு தடை விதித்திருந்தனர்.  இது குறித்து கருத்து தெரிவித்த ஆண்டவர், காலா படத்தை பற்றி கர்நாடக முதல்வரிடம் தான் பேசவில்லை என்றும் காலாவை விட காவிரி முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

காவிரிப் பிரச்சினை இருமாநிலங்களுக்கு இடையிலான தாவா எனும் நிலையைக் கடந்து உச்சநீதிமன்றத்தில் வழக்காகி, பல்வேறு குறைகளோடு ஒரு தீர்ப்பு வந்து, அதைக் கூட கசப்பு மருந்தாக தமிழகம் விழுங்கிக் கொண்ட பின், கர்நாடகத் தேர்தலுக்காக தாமதம் செய்து ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறது மத்திய அரசு. இப்போது காவிரி விசயத்தைக் குறித்துப் பேசுவதாக இருந்தால் அமைக்கப்பட்டிருக்கும் பல் இல்லாத ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசைக் கோரலாம். நீர் திறந்து விடப்பட வேண்டும் என்றால், அது ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பார்த்தால் நீரைத் திறந்து விடலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை குமாரசாமிக்கு இல்லை. அப்படி இருக்க ஆண்டவர் ஏன் பூட்டிய வீட்டின் முன் நின்று சவுண்டு விடுகிறார்? ஒன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு டுபாக்கூர் என்பதை ஆண்டவர் தனது ஞான திருஷ்டியில் உணர்ந்திருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தை விட (மைனாரிட்டி அரசின்) மாநில முதல்வருக்கு அதிகாரம் அதிகம் என்பதைக் கண்டறிந்திருக்க வேண்டும். ஆனால், அன்னாரின் தலைமைப் பூசாரிகளில் ஒருவரான பாரதி கிருஷ்ணகுமார் மேற்படி சந்திப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது இல்லை என்று கற்பூரம் அடிக்கிறார்.

உரிமைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் பெறுவது தான் தங்களது நோக்கம் எனக் குறிப்பிடும் பாரதி கிருஷ்ணகுமார், உரையாடலின் வழியே தீர்வு காண்பதுதான் எல்லாருக்கும் நல்லது என்கிறார். போலி கம்யூனிஸ்டுகளின் பாசறையில் வளர்க்கப்பட்ட அறிவுஜீவிப் பிராணி என்பதால் ”உரையாடல் & Stuff” மீது  பாரதி கிருஷ்ணகுமாருக்கு இருக்கும் நம்பிக்கையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சாதாரண அறிவு கொண்ட தமிழர்களோ “மீண்டும் முதலில் இருந்தா” என எரிச்சலுடன் கேட்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ”மேற்பார்வை” ஆணையம் ஒன்றை அமைப்பதாக முதலில் மத்திய அரசு அறிவித்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. நீரின் இருப்பையும் அதன் வரத்தையும் ஆராய்ந்து நீர் திறப்பதைத் தீர்மானிக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், ஆணையத்தை வெறும் நிர்வாக அமைப்பாக மாற்றும் போக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை (நீர் வளத்துறையின் செயலாளர்) நியமித்துள்ளது மத்திய அரசு.

மேலும், நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும் கூட, அதன் தீர்ப்பை ஏதேனும் ஒரு மாநிலம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்கிறது மத்திய அரசு. அதாவது மீண்டும் தமிழக விவசாயிகள் தன்னிடம் கையேந்திப் பிச்சை கேட்க வேண்டும் என்கிறார் மோடி. நியாயமாக ஆண்டவர் சண்டமாருதம் செய்திருக்க வேண்டியது தில்லியில்; பிரதமர் அலுவலகத்தின் முன்.

ஆனால், தன்னைத் தானே தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்துக் கொண்டு குமாரசாமியிடம் பேசியிருக்கிறார்.  கமல்ஹாசனுக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக பரிவட்டம் கட்டியது யார் எனக் கொந்தளிக்கின்றனர் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணியாக நியமித்தவர்களே இதையும் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை. மேலும், காவிரியைக் கேட்டு குமாரசாமியின் பூட்டிய வீட்டின் கதவுக்கு முன் சவுண்டு விடும் அளவுக்கு ஆண்டவர் முட்டாள் அல்ல.

தற்போது காலா திரைப்படத்திற்கு கன்னட அமைப்புகள் தெரிவித்து வரும் எதிர்ப்பை கமல் அறிவார். காவிரிக்காக தானும் கூட்டத்தோடு கோவிந்தா போட்டதை கன்னட அமைப்பினர் அறிந்திருப்பார்கள் என்பதையும் அறிவார். எனவே விஸ்வரூபம் 2-ஆம் பாகம் வெளியாவதற்கு முன்பே ஊருக்கு முந்திச் சென்று துண்டைப் போட்டு வைத்துக் கொள்வோம் என்று கருதியிருக்கலாம். அல்லது, தனது தூத்துக்குடி விஜயம் பத்தோடு பதினொன்றாகிப் போனதை அடுத்து விளம்பர வெளிச்சத்துக்காகக் கூட கருநாடக விஜயத்திற்கு திட்டமிட்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், கமலின் பெங்களூரு நாடக காட்சிகளுக்கும் மக்கள் நலனுக்கும் மயிரளவுக்கும் சம்பந்தமில்லை. தனது சொந்த சுயநலனுக்கான பயணங்களின் மேல் ”மக்கள் நலன்” என்கிற முகமூடியை கமல் போர்த்திக் கொண்டு அலைவது அவரது சொந்த வாழ்க்கையை விட படு மோசமாக நாறுகிறது என்பதே உண்மை. தற்போது “பிக்பாஸ்:  சீசன் 2” ஆரம்பிக்க இருப்பதால் இப்படி டி.ஆர்.பி.யை ஏற்றவும் வேண்டியிருக்கிறது! மற்ற ஓட்டுக்கட்சி தலைவர்கள் அரசியலை பயன்படுத்தி பிசினெஸ் செய்து சம்பாதிப்பார்கள் என்று பொதுவில் சொல்வார்கள்! ஆனால் கமல்ஹாசனைப் பாருங்கள் – பிசினசையே அரசியலாக்கி விடுகிறார்! இந்த சாமர்த்தியம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இல்லையே!

கருத்துக் கணிப்பு:

கேள்வி: கமல்ஹாசனது கர்நாடக பயணத்திற்கு காரணம் என்ன?

  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரம்
  • சபாஷ்நாயுடு – விஸ்வரூபம் 2 படங்களுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பில்லாமல் செய்வது
  • ஆளே இல்லாத டீக்கடையான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு பிரேக்கிங் நியூஸ்!
  • பிளான் பி ரஜினியுடன் இவர் பிளான் சி-யாக பா.ஜ.க.-வின் அஜெண்டாவிற்கு வேலை செய்கிறார்.

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)

1 மறுமொழி

  1. பிளான் பி ரஜினியுடன் இவர் பிளான் சி-யாக பா.ஜ.க.-வின் அஜெண்டாவிற்கு வேலை செய்கிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க