பாலஸ்தீனியர்களை நரபலி கொடுத்து திறக்கப்பட்ட ஜெருசலேம் அமெரிக்கத் தூதரகம் !

ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல கொடூரக் கொலைகளை காசாவில் இஸ்ரேல் அரங்கேற்றிய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் திறந்து வைத்தது.

பிறந்தநாளை விதவிதமாகக் கொண்டாட விருப்பப்படும் குழந்தைகளைப் பார்த்திருப்போம்; தன்னுடைய இறுதிச்சடங்கு எப்படி நடக்க வேண்டும் என்று திட்டமிட்ட சிறுமியைப் பார்த்திருக்கிறீர்களா? அவள்தான் பதினான்கு வயதான சிறுமி வெசல் ஷேக் கலீல். காசா எல்லையில் இஸ்ரேலின் துப்பாக்கிக் தாக்குதலில் தான் எப்படியும் மரணமடைய நேரிடும் என்று அவள் உறுதியாக நம்பினாள். இதையறிந்தே தன்னுடைய தாய் ரீம் அபு இர்மானாவிடம், தான் இறந்த பிறகு தன்னுடைய தாத்தாவின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்படவேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி வைத்தாள்.

எட்டு மாத குழந்தையின் மரணத்தில் கதறி அழும் பெண்கள்

தன் மகளை இழந்த மறுநாளில் அந்தத் தாய் பேசுகையில் என் மகளுக்கு வாழ்க்கையின் மீதிருந்த நாட்டத்தை விட மரணத்தின் மீதுதான் அதிக நாட்டமிருந்தது, ஒவ்வொரு நாளும் போராட்ட முனைக்குச் செல்லும்போது இறைவனிடம் அவள் வைக்கக் கூடிய கோரிக்கை ‘இன்றே நான் வீரச்சாவு அடையவேண்டும்’ என்ற ஒன்று மட்டும் தான்.

கடந்த 22.05.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி 13 பேர் கோடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்களோ, அதே மே மாதத்தில் (14.05.2018) பாலஸ்தீனத்திலும் 60 அப்பாவிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள்.  ரோம் நகரம் எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல அமெரிக்க டிரம்ப்பின் ஆசியோடு இஸ்ரேல் இத்தனை கொடூரக் கொலைகளை அரங்கேற்றிய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திறந்து வைத்தது.

கொல்லப்பட்ட 60 அப்பாவி மக்களில் வெசல் ஷேக் கலீலும் ஒருவர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் மூச்சுத்திணறி எட்டு மாத கைக்குழந்தை ஒன்றும் உயிரிழந்தது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இத்தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு புவியியல் வரைபடத்தில் திணிக்கப்பட்ட 1948-ஆம் வருடத்தில்தான் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த சுமார் ஏழு இலட்சம் அப்பாவி பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு அகதிகளானார்கள். ‘நாக்பா தினம்’ அல்லது பேரழிவு தினம்  என்றழைக்கப்படும் இந்த சம்பவம் நடந்து 70 ஆண்டுகள் நிறைவு பெறப்போவதை நினைவுகூறும் வகையில் காசா எல்லையை நோக்கி பேரணியாகச் செல்வது என பாலஸ்தீனிய மக்களால் திட்டமிடப்பட்டிருந்தது.

பேரணியால் ஈர்க்கப்பட்ட சிறுமி வெசல் எத்தனை தடைகள் வந்தாலும் கண்டிப்பாக இதில் பங்கேற்கப்போவதாகத் தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டு காலமாக இஸ்ரேலும், எகிப்தும் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் எல்லைகளில் விதித்துள்ளதால் பண்டப் பரிவர்த்தனை மற்றும் ஆட்கள் போக்குவரத்து என்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிட்டது. ஏழு குழந்தைகளை வைத்துள்ள எனக்கு தங்கும் வீட்டிற்கு வாடகை தருவதென்பதே மிகப்பெரிய சவாலாகிவிட்டது; இதனால் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொருமுறை வீட்டை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அடிப்படையான வாழ்க்கை வசதிகள் என்றால் என்ன என்பதே என் குழந்தைகளுக்குத் தெரியாது என்கிறார் சிறுமியின் தாயார்.

எங்கள் பூர்வீகம் ஒரு சிறிய கிராமமாகும். இப்போது அது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை. மூன்று தலைமுறைகளாக காசா எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிறுமி வெசலோ காசாவை விட்டு எங்குமே செல்ல விருப்பப்பட்டதில்லை. அவள் இங்கு வாழ்ந்த காலங்களில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தாள். வர இருந்த தன்னுடைய தாயின் பிறந்த நாளுக்காக ஒரு வாழ்த்துப்பாடலைத் தயாரித்து, அதை மனப்பாடம் செய்து வீட்டில் பாடிக்கொண்டேயிருந்தாள்.

வெசல் ஷேக் கலீல்

21 வயதான அவளின் சகோதரன், அந்தப் பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரித்திருந்தான். ஒரு முறை அவளிடம் விளையாட்டாக பேரணியில் கலந்து கொண்டால் உன்னுடைய காலை முறித்து விடுவேன் எனக்கூற உடனே சிறுமி வெசல் நான் தரையில் ஊர்ந்து கொண்டே பேரணியில் பங்கெடுப்பேன் என்று கூறியதை அவளின் தாயார் நினைவுபடுத்துகிறார்.

சிறுமி வெசலின் மற்றுமொரு சகோதரன் முகம்மது, தன் சகோதரி சுட்டுக்கொல்லப்படும்போது அவளுக்கு அருகில் இருந்திருக்கிறான். 11 வயதான அவன் கூறும்போது ’நாங்கள் முள்வேலிக்கு அருகிலிருந்தோம், என் சகோதரியிடம் சக போராட்டக்காரர்கள் வெட்டு எந்திரத்தைக் கொடுத்த அந்தத் தருணத்தில் தலையில் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாள்’ என்றான்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில் ‘ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பேரணி என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்’ என்று வியாக்கியானம் பேசியது. ஆனால் மார்ச் 30 2018 அன்று ஆரம்பித்த போராட்டங்கள் முதல் இன்றைய நாள் வரை நடந்த போராட்டங்களில், ஒரே ஒரு இஸ்ரேல் படை வீரர் கூட கொல்லப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சிறுமி வெசலின் சகோதரன் முகம்மது மறுநாள் செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முற்பட்டுள்ளான்; ஆனால் அவனது தாய் மறுத்துவிட்டாள். எதிர்காலம் பற்றி அவளிடம் கேட்டபோது ’எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை; ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் என் மகள் இப்போது என்னோடு இல்லை, அவ்வளவுதான்’.

15.05.2018 அன்று, துப்பாக்கிச் சூட்டுக்கு மறுநாள் காசா நகரம் முழுவதும் ஒரு வித மயான அமைதி நிலவியது. குழந்தைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். பழங்களும், தின்பண்டங்களும் வழக்கம்போலக் கிடைத்துக் கொண்டிருந்தன.

இன்னொரு சாலையில் ஊதா நிற பந்தல் போடப்பட்டு அந்தச் சாலை மறிக்கப்பட்டிருந்தது. அதனுள்ளே சிறியவரும் பெரியவருமாக 10-க்கும் மேற்பட்டவர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். ஆம்! சிறுமி வெசலைப் போலவே இங்கும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். 23 வயதான அவர் பெயர் யாசின்-அல்-தெளபாசி. இரண்டு வயது குழந்தைக்குத் தந்தையான அவரும் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டுக்கு களப்பலியாகியுள்ளார்.

தெளபாசியின் தந்தை இப்ராஹிம் உறவினர்களுடன் சோகமயமாக அமர்ந்திருந்தார். ஒட்டுமொத்த உலகமும் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த சின்னஞ் சிறிய காசா பகுதியை வேட்டையாடி வருவது மிகவும் கவலையளிக்கிறது. நானும் கூடத்தான் போராட்டத்திற்குச் சென்றேன். இது ஒவ்வொரு பாலஸ்தீனியரின் கடமை என்றே சொல்வேன். முள்வேலி அருகே செல்லாமல் இருந்ததால் ஒருவேளை நான் கொல்லப்படாமல் இருந்திருக்கலாம்.

தெளபாசி மற்றும் இதுபோல மரணமடைந்த மற்ற சக பாலஸ்தீனியர்களின் இறுதிச்சடங்கிற்கு ஹமாஸ் இயக்கம் உதவியிருப்பதை இஸ்ரேல் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. பிணந்தின்னி கழுகுகளுக்கு அவர்கள் உடல்கள் இரையாக்கப்பட வேண்டும் என்ற கொடூர எண்ணம் இருக்கும்போலத் தெரிகிறது.

நாங்கள் வேண்டுமானால் உலக நாடுகளால் கைவிடப்பட்டிருக்கலாம். ஆனால் போராட்டம் தான் எங்களது வாழ்க்கையாகிவிட்டது. மறுபடியும் போராடிக்கொண்டே இருப்போம். ஒருவேளை நாளையே என் மகன் தெளபாசிக்கு நடந்தது எனக்கும் நடக்கலாம் என்கிறார் தெளபாசியின் தந்தை இப்ராஹிம்.

குறிப்பு: 14.05.2018 அன்று நிகழ்த்தப்பட்ட இந்தத் துயர சம்பவத்தில் இதுநாள் வரை மொத்தம் 120 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

நன்றி:தி கார்டியன்

தொடர்புடைய கட்டுரைகள்:
பாலஸ்தீன் நாக்பா பேரணி : நாங்கள் மீண்டும் வருவோம்

  •  வினவு செய்திப் பிரிவு

1 மறுமொழி

  1. கச்சநத்தம் தேவர் ஜாதி வெறியர்களின் வெறியை பற்றி நீங்கள் எழுதாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க