சிக்கலான தருணம்தான்; எனினும் போர் முடிவுக்கு வரும்

பாலஸ்தீனத்தின் இளந்தலைமுறையினர் தங்களது உறவினர்கள் அன்றாடம் இறப்பதைப் பார்த்தும், பாலஸ்தீனத்தின் விடுதலையை சாதிக்கவும் எந்தவித தியாகத்திற்கும் அஞ்சாமல் விடுதலைப்போரில் மேலும் மேலும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

சென்ற மூன்று நாட்களுக்கு முன்னதாக, மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையின் மீது தொடுத்துள்ளது. இசுரேலின் இந்தத் தாக்குதலானது 10 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி தேடுதல் வேட்டையைத் தொடங்கியது முதலாக அன்றாடம் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்து வருகிறது. தேடுதலைத் தொடங்கிய அன்றே 10-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றது. ஒரு பள்ளியின் மீது தாக்குதலைத் தொடுத்து எட்டு பேரைக் கொன்றது.

ஜெட்டுகள், ட்ரோன்கள், டாங்கிகள் கொண்டு இந்தத் தக்குதலை நடத்தியது. ஒரே நேரத்தில் அருகருகே பல இடங்களில் இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் மக்கள் எங்குமே தப்பித்துச் செல்ல இயலாத வகையில் இந்தத் தாக்குதல்கள் கொடூரமானவையாக இருந்தன.

மேற்குக் கரையின் ஜெனின், துல்கரெம், டுபாஸ் அருகில் இருக்கும் ஃபாரா அகதிகள் முகாம் ஆகியவற்றின் மீதான இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், “பாதுகாப்புப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை”க் குறிவைப்பதாகக் கூறி இஸ்ரேலால் நடத்தப்பட்டு வருகிறது.


படிக்க: காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை


அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தற்போதுவரை, காஸாவில் 40,534-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துள்ளது, இசுரேல். இஸ்ரேலின் தாக்குதலினால், 93,778 பாலஸ்தீனியர்கள் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்; உடலுறுப்புகளை இழந்துள்ளனர். இதே காலத்தில், மேற்குக் கரையில், 662 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 5,400 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஆனால், இஸ்ரேலின் இந்த கோழைத்தனமான போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸை ஒழித்துக் கட்டுவதற்காக இசுரேல் நடத்துவதாகப் கூறப்படும் இந்தப் போர் ஓராண்டை நெருங்கப் போகிறது. இஸ்ரேல் குறிப்பிட்டது போல இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை.

முடிவுறாத இந்தப் போரின் இன்றைய தருணம் நமக்கு உணர்த்துவதென்ன?

ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்த ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே மாதம் 19-ஆம் தேதி விமான விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட இரானின் அதிபர் இம்ராஹிம் ரைசிக்குப் பிறகு புதிய அதிபராக மசூத் பெசஸ்கியனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

ஏறக்குறைய அதே நாளில்தான் லெபானான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஃபாக் ஷுக்ரியைப் படுகொலை செய்தது இஸ்ரேல்.

அதாவது, தற்போது நேரடியாக களத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஹமாஸின் தலைவரைக் கொன்றுவிட்டது; அதற்கு உதவியாக இருக்கும் ஹிஸ்புல்லாவின் முக்கிய இராணுவத் தளபதியைக் கொன்றுவிட்டது. இனி, வேகமான ஒரு தேடுதல் வேட்டையை நடத்துவதன் மூலம், ஹமாஸுக்கு இறுதி நெருக்கடியைக் கொடுத்துவிடலாம் என்பதற்காகத்தான் இஸ்ரேலின் ஆகஸ்டு 27-க்குப் பிந்தைய தாக்குதலா?

இல்லை, அப்படி நேர்க்கோட்டில் இந்தத் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியாது.


படிக்க: காசா பள்ளியின் மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த இஸ்ரேல்


பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரானது, கடந்த 9 மாதங்களில் பல சிக்கலான வழியில் தான் நடந்து வந்துள்ளது. இன்று, இப்போரானது, மேலும் சிக்கலான, நெருக்கடியான தருணத்தை அடைந்துள்ளது.

ஜூலை மாத இறுதில் நடந்த மேற்கண்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையவை. போராளிக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டது, ஈரானின் அதிபரின் மரணம் போன்றவை, விடுதலைப் போராட்டத்திற்கு இழப்புகளை ஏற்படுத்துபவைதான். எனினும், இது பிரச்சினையின் ஒரு கூறு மற்றும் ஒரு கோணம் மட்டும்தான்.

உண்மையில், ஆகஸ்டு 19-ஆம் தேதி இஸ்ரேலின் தலைநகர் டெல்-அவிவ்-வில் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தப்பட்டதானது இஸ்ரேலின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. இச்சம்பவம் வேறு கோணத்தில் பிரச்சினையைப் பார்க்க வலியுறுத்துகிறது.

இது குறித்து இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் ஒமரின் மொழிகளிலேயே பார்ப்போம்.

”இது, மேற்குக் கரையில் உள்ள பாஸ்தீனிய விடுதலைக் குழுக்கள் இரகசிய செல்களில் அதிக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கி நகர்வதற்கான வெளிப்பாடு” என்று ஒமர் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாலஸ்தீனத்தின் அதிகாரமானது, “சமூக வர்க்கங்களின் ஆதரவை இழந்து வந்தாலும், குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு கரையில் புதிய தலைமுறை பாலஸ்தீனர்களின் எழுச்சியுடன் இணைந்து போராட்டத்தை தங்களது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது” என்கிறார்.

மேலும், ஈரானில் இருந்த ஹமாஸ் தலைவர் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. இதனால், ஈரான் ஆதரவுக் குழுக்களுக்கும் ஹமாஸும் இணைந்து கொள்ளும் என இஸ்ரேல் அஞ்சுகிறது என்கிறார்.

இவ்வாய்வாளர் குறிப்பிடும் இந்தக் கூறின் பொருள் என்ன?

இஸ்ரேல் நினைப்பது போல ஈரான் ஆதரவு குழுக்களுடன் ஹமாஸுக்கு தொடர்பு ஏற்படுகிறது என்பது உண்மையாக இருந்தால், அந்த அளவிற்கு ஹமாஸ் இன்னும் பலமாக இருப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பார்வை மிகவும் முக்கியமானதும் நம்பிக்கையளிப்பதுமாகும்.

எனினும், ஈரான் குழுக்களும் ஹமாஸும் இணைந்து கொள்ளும் என்ற இஸ்ரேலின் எதிர்ப்பார்ப்பானது அடிப்படையற்றது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பீதியில் இருப்பவன் சிறு அசைவுகளையும் பார்த்து மேலும் பீதியடைவதைப் போலத்தான் இஸ்ரேலின் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது.


படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


உண்மையில், பாலஸ்தீனத்தின் இளந்தலைமுறையினர் தங்களது உறவினர்கள் அன்றாடம் இறப்பதைப் பார்த்தும், பாலஸ்தீனத்தின் விடுதலையை சாதிக்கவும் எந்தவித தியாகத்திற்கும் அஞ்சாமல் விடுதலைப்போரில் மேலும் மேலும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதற்கு ஹமாஸ் மட்டுமே காரணமல்ல. பல்வேறு இயக்கங்கள் இணைந்ததுதான் இன்றைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டமாகும்.

மேலும், பாலஸ்தீனர்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதானது பாலஸ்தீனியர்களை மேலும் போராட்டக் களத்திற்கு தள்ளியுள்ளது.

மற்றொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிவந்த துருக்கி போன்ற நாடுகள் தமது உதவிகளை நிறுத்திவிட்டன. இது இஸ்ரேல் மட்டுமல்ல, அதற்கு ஆயுத உதவிகளைச் செய்து, காஸா முனையில் இரத்தைத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அமெரிக்காவையும் அச்சங்கொள்ளச் செய்கிறது.

ஜூலை மாதம் 19-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம், பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் மேற்கு கரை மற்றும் ஜெருசெலேமில் இருக்கும் அனைத்துக் குடியிருப்புகளையும் இஸ்ரேல் காலி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடக்கும் ஆகஸ்டு 19-22 தேதிகளில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதற்கு முன்னதாக, ஏப்ரல்-மே மாதங்களில் கலிஃபோர்னியா மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியதை நாம் அறிவோம்.

மிகக் கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கு கரையில் தொடுத்திருக்கும் இன்றைய தருணத்தில், ஹமாஸ் தலைவர், உலகம் முழுவதும் இருக்கின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக போராட்டங்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்திருப்பது இதன் தொடர்ச்சியாகும். இதுவும் உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அறைகூவலாகும்.

இன்னொரு பக்கம், இஸ்ரேலுக்கு இன்னொரு போர் முனை உருவாகியுள்ளது. கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 25) அன்று, ஹெஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களின் மீது 340 ராக்கேட்டுகளை ஏவி தாக்குதல்களை நடத்தியது.

இவற்றையும், இஸ்ரேலில் உள்ள தீவிர வலதுசாரிகளின் நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு, நெத்தன்யாகு கும்பல் போரைத் தீவிரப்படுத்தும் மேலும் சிக்கலான வழியையே தேர்ந்தெடுக்கிறது.

தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம் பாலஸ்தீனர்கள் அனைவரையும் வெளியேற்றி, முழு பாலஸ்தீனத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடலாம் என இஸ்ரேல் ஆளும் வர்க்கங்கள் கனவு காண்கின்றன. ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கம் போரைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.

மொத்தத்தில், இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரப் போவதில்லை. இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைவதும், இந்தியா போன்ற இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு எதிராக சொந்த நாட்டில் மக்கள் போராட்டங்கள் வளர்வதும்தான் பாலஸ்தீன மக்களுக்கு விடுதலை வாங்கித் தரும்.

கோழைகள் என்றைக்குமே தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை; வீரர்கள் என்றைக்குமே பணிந்து பின்வாங்கப் போவதுமில்லை.

தேச விடுதலை வேட்கை வீரர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். உலகெங்கும் அளிக்கப்படும் ஆதரவுகள், அவர்களுக்கு உந்துதலைக் கொடுத்தே தீரும்.

சிக்கலான தருணம்தான், எனினும் போர் முடிவுக்கு வரும்!

சுதந்திர பாலஸ்தீனம் மலரும்!


மகேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க