தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மீது தாக்குதல்! மருத்துவமனையில் சிகிச்சை!

மிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் அவர்கள், மர்ம நபர்களால் நேற்றிரவு தாக்குதலுக்கு உள்ளானார்.

நேற்று 10.06.2018 இரவு 9 மணியளவில், தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்காக உழவன் தொடர்வண்டியில் ஏறுவதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் சீனிவாசனின் இரு சக்கர ஊர்தியில் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

தஞ்சை எப்.சி.ஐ. கிட்டங்கி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இன்னொரு இரு சக்கர ஊர்தியில் எதிர்திசையில் இடதுபுறம் வந்த, பின்னால் அமர்ந்திருந்தவன் தோழர் பெ.ம. அவர்களின் இடது கையை இழுத்து கீழே தள்ளிவிட்டான். அதில், கீழே விழுந்த தோழர் பெ.ம. அவர்களுக்கு, இடது முழங்காலில் கடுமையான காயமும் வலது கையிலும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டன.

கைப்பையையோ வேறு பொருளையோ திருடுவதற்காக வந்ததுபோல் இது தெரியவில்லை. திட்டமிட்டு அவர் கையை இழுத்து கீழே விழுகிற வரையிலும் பார்த்துவிட்டு, அந்த இருவரும் தொடர்வண்டி நிலையத் திசையில் சென்று விட்டனர். பொதுவில் தஞ்சையில் இத்தகைய வழிப்பறிகள் ஏதும் நடப்பதில்லை.

எனவே தோழர் பெ.மணியரசன் அவர்கள் மீது திட்டமிட்டத் தாக்குதலாகத்தான் இது தெரிகிறது. இதுகுறித்து தஞ்சை தெற்கு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தோழர் பெ.ம. தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். திட்டமிட்டத் தாக்குதலாகத்தான் தெரிகிறது என்றாலும், தோழர் பெ.ம. அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலை பல கட்சியினரும் கண்டித்திருக்கின்றனர்.

தகவல்: தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச : 9443291201

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க