தூத்துக்குடியில் வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து மக்களைச் சுட்டுக் கொல்வதற்கான காரணங்களாக போலீசு விவரித்திருக்கின்ற கதை இது.

இப்படிப்பட்ட கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்துத்தான் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராகவும் UAPA சட்டத்தை ஏவுவதற்கும் திட்டமிடுகின்றன மத்திய மாநில அரசுகள்.

தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப் படுத்துவதற்கு காவல்துறை இதுவரை சுமார் 250 முதல் தகவல் அறிக்கைகளைப் (FIR) பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி, திருநெல்வேலி, உசிலை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் 7 பேரிடம் போலீசார் பெற்றுள்ள “ஒப்புதல் வாக்குமூலத்தின் படி” வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், தங்கபாண்டியன் ஆகியோர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து தூத்துக்குடியையே கொளுத்தியிருக்கின்றனர். இது எப்படி நடந்தது என்பதை போலீஸ் விசாரணை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.

(குற்ற எண்- 298, 299, 301 / 2018 தெற்கு காவல் நிலையம்,
இதச பிரிவுகள் – 143, 147, 148, 341,   324, 353, 436, 3,4 of PPDL act)

(குற்ற எண் – 17, 178, 182 / 2018 மத்திய காவல் நிலையம்,
இதச பிரிவுகள் – 143, 147, 188, 341, 3 of PPDL act)

(குற்ற எண் – 190 / 2018, சிப்காட் காவல் நிலையம்,
இதச பிரிவுகள் – 147, 148, 188, 353, 506(2), 3 of PPDL act) 

காலை 10.30 – மடத்தூரில் பாரிகேடுகளை சேதப்படுத்தல், போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தல், மதுரை பை பாஸில் இருந்த வாகனங்களை எரித்தல்.

காலை 10.45 – வி.வி.டி. சிக்னலில் போலீசு மீது கல்லெறிதல். TN 69 G 0616 என்ற போலீஸ் வேனை கவிழ்த்து போட்டு, கல்லால் அடித்து கண்ணாடியை உடைத்தல்.

பகல் 12.15 – ஸ்டெர்லைட் குடியிருப்பு வாசலில் போலீசுக்கு ரத்தக்காயம் ஏற்படுத்தி, காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து கொளுத்துதல். வெளியில் வரும்போது எதிரில் நின்ற போலீசு சுமோ காருக்கு தீ வைத்தல்.

பகல் 12.30 – மாவட்ட தொழில் மையத்துக்குள் நுழைந்து பொலிரோ ஜீப், கணினி, ஜெனரேட்டர், ஜெராக்ஸ் மிசினுக்கு தீவைத்தல்.

பகல் 12.45 – கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தியிருந்த ஜீப்புகள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தபடியே நுழைய முயன்றபோது துப்பாக்கிச் சூடு, தடியடி நடந்ததால் திரும்பி வருதல். மூன்றாவது மைல் பாலத்துக்கு அருகே நெடுஞ்சாலைத்துறையின் 2 ஜீப்புகளை மறித்து, ஆட்களை இறக்கி விட்டு விட்டு, தீ வைத்து கொளுத்துதல்.

பகல் 1.30 – டீச்சர்ஸ் காலனியில் போலீசு டாடா சுமோவின் டிரைவரை கீழே தள்ளி, ஜீப்புக்கு தீ வைத்தல்.

மதிய உணவு இடைவேளை

பிற்பகல் 2.45 – காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள ஜெயராஜ் ரோட்டில் பழனியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தின் முன், பின் கண்ணாடிகளை உடைத்தல்

பிற்பகல் 3.00 – திருச்செந்தூரிலிருந்து மதுரை செல்லும் பேருந்தின் பயணிகளை இறக்கி விட்டு, கண்ணாடிகளை முன்னும் பின்னும் உடைத்தல்

பிற்பகல் 3.10 – திருச்செந்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் பேருந்தின் பயணிகளை இறக்கி விட்டு, முன்புறம் பின்புறம் மற்றும் சைடு கண்ணாடிகளை உடைத்தல்

“மேற்கண்ட காரியங்களை செய்து விட்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். தற்போது தூத்துக்குடியில் அமைதி நிலவுவதாகத் தெரிந்ததால் மீண்டும் ஏதாவது செய்து கலவரத்தை மூட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் (ஏழு பேரில் ஒருவரான சரவணன்) மற்றவர்களும் வந்தபோது, தாங்கள் என்னைக் கைது செய்தீர்கள். தாங்கள் என்னை விசாரித்த போது எங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தைக் கூறினேன்” என்று சரவணன் என்பவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறை கூறுகிறது.

இப்படி அப்பட்டமான பொய்களின் மூலம் போராடும் மக்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன மக்கள் அதிகாரத்தையும் ஒடுக்கிவிடலாம் என கனவு காண்கிறது போலீசு. மத்திய மாநில அரசுகளின் இந்த ஒடுக்குமுறையை வீழ்த்துவோம்!

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்:

  • மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க