குமரெட்டியாபுரத்தில் வெள்ளத்தாயம்மாள் ஸ்டெர்லைட் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கையெழுத்து வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் கடந்த 25-04-2020 அன்று சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர் மீது பிப்ரவரி 2018-ல் ஸ்டெர்லைட் விரிவாக்க இடத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக ஒரு வழக்கு இருப்பதாகவும் அது சம்பந்தமான விசாரணைக்கு 26-04-2020 அன்று சிப்காட் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் ஆஜரான இவரை ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெறக் கூடாது என்று காவல் ஆய்வாளர் மிரட்டியுள்ளார். குமரெட்டியாபுரத்தில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக இருந்தாலும் வெள்ளத்தாயம்மாள் முன்னணியாளராக இருப்பதால் காவல்துறை மூலம் இவ்வாறு ஒடுக்கப்படுகிறார். ஆனால் அதேவேளையில் தெற்கு வீரபாண்டியபுரத்தில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் நிவாரணப் பொருள் வழங்குவதை தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை.

பண்டாரம் பட்டியில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் அரசு அனுமதி வாங்காமல், சமூக இடைவெளியின்றி – முகக்கவசமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கியதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய சகாயம், சந்தோஷ் மற்றும் ஊர் நாட்டாமைகள் மீது ஸ்டெர்லைட்டின் மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர் என்று அறியப்பட்ட தனலட்சுமி புகார் கொடுக்கிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அன்று ஏற்பட்ட பிரச்சனையில் மாரியம்மாள் என்பவர் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை மாரியம்மாளிடம் புகார் வாங்கவே இல்லை.

சந்தோஷ் கல்லூரி மாணவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டதில் வீரியமாக கலந்து கொண்டவர். ஊர் நாட்டாமைகள் கிராம மக்கள் எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்றுவரை தோள் கொடுக்கிறார்கள்.

மீளவிட்டானில் முத்து அவர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்கனவே சிறை சென்றவர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இன்றுவரை உறுதியாக இருப்பவர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எந்த உதவிகளையும் வாங்குவதில்லை என்ற கிராம மக்களின் முடிவில் துணை நிற்பவர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றுபவர் ஸ்டெர்லைட் ஆதரவாளராக இருப்பதாகவும், தண்ணீர் ஏற்றாமல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்குவதாகவும் அவர் மீது ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குற்றச்சாட்டு அடிப்படையில் டேப் இன்ஸ்பெக்டர் வரும் போது அவரை பணிசெய்ய விடாமல் முத்து உட்பட நால்வர் தடுத்ததாக புகார் செய்து அதனடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பணியை சரிவர செய்யவில்லை என்பது தான் ஊர் மக்களின் உண்மையான குற்றச்சாட்டு.

படிக்க:
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
♦ கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !

முத்து அவர்களை சிறை வைக்க காவல்துறை கொடுக்கும் விண்ணப்பத்தினை நீதித்துறை நடுவர் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பிணையில் விடுவதற்கு தான் உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஏனெனில் உயர் நீதிமன்ற வழி காட்டுதல்படி கொடுங்குற்றம் புரிவோர் மட்டுமே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த வழக்கில் முத்து அவர்களை நீதித்துறை நடுவர் ரிமாண்ட் செய்தது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஒருவேளை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்தாலும், கொலை குற்றத்துக்கு சமமாக பாவிக்கப் படுகிறதோ என்னவோ?

இப்போது இந்த மூன்று வழக்குகளிலும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். முதலாவதாக குமரெட்டியாபுரம் வெள்ளையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. 2- வதாக பண்டாரம்பட்டியில் சகாயம், சந்தோஷ், ஊர் நாட்டாமைகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆனால் காவல் நிலைய ஜாமினில் விடாமல் கைது செய்ய காத்திருக்கிறார்கள். மூன்றாவது முத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வருகிறார்களா? இல்லையா? என்று மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, கடைசியில் முத்து அவர்களை கைது செய்வது வரை காவல்துறை சென்றுள்ளது.

தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.

இவ்வளவு செல்வாக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இருந்தும் அவர்கள் நினைத்ததை அத்தனை சுலபமாக நடத்தி முடிக்க வெள்ளத்தாயம்மாக்களும், சந்தோஷ்களும், முத்துக்களும் பெரும் தடையாக இருப்பதால் வழக்கு, ஜெயில் என ஒடுக்கப்படுகிறார்கள்.

ஸ்டெர்லைட் விவகாரம் தற்போது பத்திரிக்கை – ஊடகங்களில் பேசும் பொருளாக இல்லை என்பதால், நாங்கள் எங்களுடைய உரிமைகளுடனும், சட்டத்திற்குட்பட்டும் நடத்தப்படுகிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

பலம் வாய்ந்த வேதாந்தா கார்ப்பரேட்டுடன் நாங்கள் தினமும் போராடுவது சுகாதாரமாக வாழ்வதற்காக! நம்மை நம்பி போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக! சல்பர் சனியனிலிருந்து நமது சந்ததிகளை நிரந்தரமாக வாழ வைப்பதற்காக!

எனவே,
தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுங்கள்!

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க