ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் சே.வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கெ.அரிராகவன், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மற்றும் ஜிம்ராஜ் மில்டன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை மாவட்டச் செயலாளர் ஆகியோர், கடந்த 09.062018 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எவ்வாறு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என்பதையும், போராடும் மக்களுக்கு ஆதரவாக சட்ட உதவிகளை செய்துவந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் துப்பாக்கி முனையில் குறிவைக்கப்பட்டதையும், இன்றுவரையில் தென் மாவட்டங்களில் போலீசின் சட்டவிரோத கைதுகள் தொடர்வதையும், ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் முன்னணியாளர்களை கைது செய்து இது போன்ற மக்கள் திரள் போராட்டங்கள் தலையெடுக்கவிடாமல் அச்சுறுத்தி முடக்குவது என்ற தீய நோக்கத்துடன் போலீசு செயல்பட்டுவருவதையும் அம்பலப்படுத்துகிறது, அவ்வமைப்பினர் வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை.

***

தூத்துக்குடி பேரணியை நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். போராட்டத்திற்குப் பின்னர் எங்கள் மீதும், கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் மீதும், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் மீதும், தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி தெற்கு மற்றும் மத்திய காவல் நிலையங்களில் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 250- க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

போலிஸ் வேனைக் கவிழ்த்தது, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்தது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கியது, போலீசு வாகனத்தை கொளுத்தியது… என திட்டமிட்டே நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் எங்களையும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரையும் பலிகடா ஆக்கும் முயற்சி நடக்கிறது. எங்களையும் போராட்ட முன்னணியாளர்களையும் ஊபா சட்டம் (UAPA) மற்றும் குண்டர் சட்டம் போன்றவற்றில் கைது செய்து சிறையில் அடைத்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, இந்தப் பின்புலத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

தூத்துக்குடி மாடல் துப்பாக்கிச் சூடு என்பது இந்தியாவில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. துப்பாக்கிச் சூடு பற்றி எனக்கே தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று தமிழக முதல்வர் கூறியது முதல், நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட தூத்துக்குடி சார் ஆட்சியரின் உத்தரவு வரை தூத்துக்குடி கொலைத்திட்டத்தில் பல்வேறு சதிப் பின்னணிகள் உள்ளன. இதில் மத்திய மாநில ஆட்சியாளர்கள், மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கையாட்களாக செயல்பட்டிருக்கின்றனர். இந்தச் சதிகள் ஒவ்வொன்றாக வெளிவரும் சூழலில், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, எங்கள் மீதும் போராட்ட முன்னணியாளர்கள் மீதும் வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது.

மே 22 அன்று நாங்கள் தூத்துக்குடி அருகிலுள்ள மடத்தூர் கிராமத்திலிருந்து பேரணியாக கிளம்பிய மக்களுடன் இருந்தோம். காலை 9 மணி முதல் சுமார் 11.30 வரை மடத்தூர் விலக்கு அருகே மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தி, மக்கள் மீது தடியடியைத் தொடங்கினர். நாங்கள் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தினோம். மக்கள் கலைய மறுத்து அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகியிருக்கின்றன.

ஆனால், இதே நேரத்தில் நாங்கள் தூத்துக்குடி பனியமாதா கோயில் முன்பு கூடி நகருக்குள் வந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு, வேன் கவிழ்ப்பு முதல் தீ வைப்பு வரையிலான பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உண்மையில் மடத்தூர் விலக்கில் எஸ்.பி மகேந்திரனால் தடுத்து நிறுத்தப்பட்டதால், துப்பாக்கிச் சூடு நடந்த பின்பே நாங்கள் மூன்றாம் மைல் பகுதிக்கே வர முடிந்தது. பனியமாதா கோயிலுக்கும் மடத்தூருக்கும் சுமார் 6 கி.மீ தூரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 22 போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் நேரலை செய்திருக்கின்றன. நகரம் முழுவதும் சி.சி.டி.வி. காமெராக்களில் போராட்டம் பதிவாகியிருக்கிறது. காவல்துறை வீடியோகிராபர்கள் மட்டுமின்றி டிரோன் விமானங்களும் கண்காணித்தன. தாக்கப்பட்ட அரசு அலுவலகங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பிலும் சி.சி.டி.வி. காமெராக்கள் உள்ளன. மே 22 இல் பதிவான மேற்கண்ட அனைத்து வீடியோ பதிவுளையும் காவல்துறை வெளியிடட்டும். ஏதாவது ஒரு வீடியோ பதிவில் நாங்களோ மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளோ, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரோ வன்முறையில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருந்தால், உடனே நாங்கள் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம்.

அப்படி ஒரு சான்றைக்கூட காவல்துறையால் காட்ட முடியாது. இருப்பினும் அரசு எங்கள் மீது அடுக்கடுக்காக பொய்வழக்குகள் போடுவதற்கு காரணம் இருக்கிறது. பிப்ரவரி 2018 இல் குமரெட்டியாபுரம் மக்கள் போராடத் தொடங்கியது முதல் இன்றுவரை நாங்கள் மக்களுடன் இருந்து சட்ட உதவி செய்து வருகிறோம். பொய் வழக்குகளில் பிணை எடுப்பது, நீதிமன்றத்தில் பொதுக்கூட்ட அனுமதி பெறுவது, மனுக்கள் தயாரித்து கொடுப்பது, வழக்குகளுக்கு ஆஜராவது எனவும் மே-22 க்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவிக்கான உத்தரவு பெற்றது, மறு உடற்கூராய்வுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.. என சாத்தியமான அளவுக்கு மக்களுடைய போராட்டத்துக்கு துணை நின்றிருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கர்சுப்பு, பாவேந்தன், பார்வேந்தன், மதுரை வழக்கறிஞர்கள், தூத்துக்குடி சங்க வழக்கறிஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து சட்ட உதவிகள் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று இன்றுவரை சட்ட உதவிகள் செய்து வருகிறோம். காவல்துறை அச்சுறுத்தலை மக்கள் எதிர்கொள்வதற்கு எங்களுடைய உதவிதான் காரணம் என்று அரசு நினைக்கிறது. எதிர்காலத்தில் ஆலை திறக்கப்பட்டாலும் நாங்கள் மக்களுடன் நிற்போம் என்ற காரணத்தினால்தான் UAPA, குண்டர் சட்டம் போன்றவற்றை எங்கள் மீதும் பாய்ச்சும்முயற்சி நடக்கிறது.

வழக்குகள் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பின்பும் சட்டவிரோதமாக உள்ளூர் போலீஸ் கைதுகளை தொடர்கிறது. மாநில, தேசிய மனித உரிமை ஆணையங்கள், சி.பி.சி.ஐ.டி, அரசு விசாரணைக் கமிசன் போன்றவற்றில் மக்கள் சாட்சியமளிப்பதைத் தடுக்கவே, வழக்கறிஞர்களான நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். மே 22 அன்று கொல்லப்பட்ட பிற முன்னணியாளர்களைப் போலவே, நாங்களும் துப்பாக்கிச் சூட்டில் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது ஜூன் 14 வரை எங்களைக் கைது செய்ய தடை உயர்நீதி மன்றம் தடை விதித்திருப்பதால் உங்கள் முன் பேசுகிறோம்.

(நன்றி: நக்கீரன்)

இந்த அடக்குமுறை என்பது எங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. தூத்துக்குடி மாடலின் பின்னால் உள்ள குற்றவாளிகளை, தமிழகத்தின் கட்சிகளும் மக்கள் இயக்கங்களும் போராடித் தண்டிக்கத் தவறினால், இந்த தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகம் முழுக்க எல்லா மக்கள் போராட்டங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கும் விரிவாக்கப்படும். இதற்கெதிராக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் போராடவேண்டுமெனக் கோருகிறோம்.

தங்கள்
சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க