நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை… தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !

அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே!

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியது பிரிட்டிஷ் காலனிய போலீசு. ஸ்டெர்லைட்டை மூடு எனப் போராடிய சொந்த நாட்டு மக்கள் மீது குறிவைத்து 13 பேரை சுட்டுக் கொன்றுள்ளது ‘சுதந்திர’ நாட்டின் போலீசு.

முதல்வர் எடப்பாடி துப்பாக்கிச் சூடு பற்றி எனக்குத் தெரியாது என்றார். பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை.

“போராட்டம் நடந்த அன்று சட்ட ஒழுங்கை கண்காணிக்க சப்கலெக்டர், நிர்வாகத்துறை நடுவர்கள் 9 பேரை நியமித்திருக்க, அவர்கள் யாருமே சம்பவ இடத்தில் இல்லாத நிலையில், அவர்களின் ஒப்புதல் பெற்றதாக மோசடி செய்து இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளது, போலீசு.

இதற்கான ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வரும், டி.ஜி.பியும் சதித் திட்டம் தீட்டி இந்த படுகொலையை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ. அல்லது பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்”, என்கின்றன எதிர்க் கட்சிகள்.

கார்ப்பரேட் நாசகார திட்டங்களை எதிர்த்துப் போராடினால், பொய் வழக்கில் சிறை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது, முன்னணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு படுகொலை – என தூத்துக்குடி மாடலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முயல்கிறது போலீசு.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகிறது. அதை எதிர்த்து தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை கைது செய்கிறது போலீசு. இதுவும் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான்.

யார் சுடச்சொன்னார்கள் எனத் தெரியாதென்று புளுக ஆரம்பித்த அரசு, பின்னர் தாசில்தாரைக் கோர்த்து விட்டது, அதுவும் அம்பலமாகிப்போனது. ஸ்டெர்லைட்டுடன் கூட்டு சேர்ந்து சதித் திட்டம் தீட்டி குறிபார்த்து சுட்டு மக்களைக் கொன்ற நிகழ்வு இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒன்று.

தமிழ்நாட்டில் இனி யாரும் எதற்காகவும் போராடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் போராடும் முன்னணியாளர்களை “ஊபா” (UAPA) என்ற ஆள்தூக்கி கறுப்பு சட்டத்தில் கைதுசெய்து மாதக்கணக்கில் சிறைவைக்கவும், இயக்கங்களை தடை செய்யவும் முயல்கிறது எடப்பாடி அரசு.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டினால் ஏற்படும் 22 ஆண்டுகால பாதிப்பை உணர்ந்து போராடி வந்துள்ளனர். அவர்களை வெளியூரிலிருந்து சென்றவர்கள் போராடத் தூண்டினர் எனக் கூறுவது அந்த மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும். அம்மக்களின் நிலத்தை, காற்றை, நீரை, ஆரோக்கியத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் முதலாளி எந்த ஊர்க்காரர்? இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

ஸ்டெர்லைட் உருவாக்கிய பாதிப்புகள் குறித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால், அமைச்சர்களால் பதில் சொல்ல முடியுமா? கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதும், கலந்து கொள்வதும் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரின் கடமை!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டுமல்ல, நியூட்ரினோ, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம், சாகர்மாலா உள்ளிட்ட மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கெதிராக தன்னெழுச்சியாக உள்ளூர் மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடுகிறார்கள்.

இவ்வாறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான அரசின் நாசகாரக் கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள் தலையிட்டு சரியான திசையில் எடுத்துச் செல்கின்றன. இதுதான் கார்ப்பரேட்டுகள் ஆத்திரமடையக் காரணம்.

வளர்ச்சி என்ற பெயரில் 15% மக்கள் மட்டும் வளமோடு வாழவும் பெரும்பான்மை மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக்கப்படுவதும்தான் பாஜக அரசு பின்பற்றும் கொள்கை. அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் இயற்கை வளங்களையும், மனிதவளத்தையும், அரசு வங்கிகளையும் கொள்ளையடித்து கொழுக்க வைப்பதுதான் மோடி அரசின் கொள்கை. இயற்கையை சூறையாடி, உயிரினங்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாற்றுவதுதான் இவர்களின் ‘வளர்ச்சிப் பாதை’!

மக்களைப் போராடத் தூண்டுவதும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும் உண்மையில் இவர்களே! இவர்கள்தான் சமூக விரோதிகள்! விஷக் கிருமிகள்!

மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை, தீ வைப்பதல்ல, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதல்ல, பஸ்களை உடைப்பதல்ல! மக்களை அரசியல்மயமாக்கி, சரியான இலக்கில் போராட வழிகாட்டுவதுதான்.

இந்த அரசுக் கட்டமைப்பு எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க வக்கற்று திவாலாகி, எதிராகிவிட்ட உண்மையைப் பேசுகிறோம். டாஸ்மாக்கை மூடச் சொன்னது, ஜெயலலிதாவின் ஊழலை, காவிரியில் தமிழகத்தின் உரிமையை, ஒக்கிப் புயலில் மீனவர்களை அரசே கொன்றதை, பண மதிப்பு நீக்கமெனும் மோசடியை, நீட் திணிப்பை மக்களிடம் திரைகிழித்துப் போராடி… போராடி மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது, மக்கள் அதிகாரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை முகாந்திரமாக வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கண்ணில் பட்டவர்களை காரணம் சொல்லாமல் கைது செய்து பொய் வழக்கில் சிறையிலடைக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஜெயராமனோடு இருந்த கோட்டையன், கலிலூர் ரஹமான், 19, 21 வயது கொண்ட அவரது மகன்களான முகம்மது அனஸ், முகம்மது இசாத் மற்றும் முருகன், சரவணன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்த அடக்குமுறை, மக்கள் அதிகாரத்துக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள், இடதுசாரிகள் உட்பட அனைவர் மீதும் ஏவப்படும்.

சுயமரியாதை பாரம்பரிய மண்ணில் ரஜினியை முன்னிறுத்தி, பார்ப்பனிய அடிமைத்தனத்தை உருவாக்கும் சதித் திட்டத்தை தனது ஏவலடிமை எடப்பாடி மூலம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.

போலீசு, கலெக்டர், கார்ப்பரேட்டுகளுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னின்று நடத்துவதுபோல் காட்டிக்கொடுக்கும் என்.ஜி.ஓ.க்கள் (தன்னார்வ குழுக்கள்) தூத்துக்குடி மக்களால் இனம் கண்டு புறக்கணிக்கப்பட்டனர்.

மக்களே தலைமை தாங்கி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி! இதுபோல் வேரெங்கும் நடந்து விடக்கூடாது என அஞ்சுகிறது அரசு. ஸ்டெர் லைட் எதிர்ப்புப் போராட்டம் அறவழியில் அமைதியாக முடிந்து விடக்கூடாது என்ற வஞ்சக நோக்கில், துப்பாக்கிச்சூடு படுகொலை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது கார்ப்பரேட் அடியாள்படையான போலீசு.

ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்!!

*****

  • தூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறு!
  • படுகொலைக்குக் காரணமான அதிகாரிகளைத் தண்டிக்க உயர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு உருவாக்கி கொலை வழக்கில் விசாரணை நடத்து!
  • ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழ்நாட்டில் இனி மேல் தாமிர உருக்காலைகளுக்கு இடமில்லை எனக் கொள்கை முடிவெடுத்து தனி சட்டமியற்று!
  • போராடும் உரிமை, கருத்துரிமையை நசுக்கும் கார்ப்பரேட் போலீசு அடக்குறையை எதிர்த்து முறியடிக்க அனைவரும் வீதியில் இறங்கி போராடுவோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321

சந்தா