கோவில்பட்டி : மக்கள் அதிகாரம் தோழர்கள் குடும்பத்தினரை மிரட்டும் வேதாந்தா எடுபிடி போலீசு !

நீதிமன்ற உத்தரவை மீறி நள்ளிரவில் வீடுபுகுந்து மிரட்டுதல், வீடுகளில் உள்ள பொருட்களை கைப்பற்றுதல் என தொடர்ந்து ஸ்டெர்லைட் முதலாளியின் அடியாள் வேலையை செவ்வனே செய்துவருகிறது போலீசு!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்குப் பிறகும் போலீசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஓயவில்லை. வன்முறையில்  ஈடுபட்டார்கள், ஆதாரம் இருக்கிறது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடு புகுந்து கைது செய்து சிறையில் அடைத்து, கொடூரமாக அடித்து சித்ரவதை செய்கிறது போலீசு. இன்னும் ரத்தவெறி அடங்கா காட்டேரியாக சுற்றி சுற்றி வருகிறது. தேடித் தேடி ஆட்களைப் பிடித்து தோதான வழக்குகளை ஜோடிக்கிறது.

தூத்துக்குடி போலீசு வன்முறை – ஸ்டெர்லைட்டுக்கு ஏவல்நாய் வேலை பார்க்கும் போலீசு

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் “மக்கள் அதிகாரம்” அமைப்பை சேர்ந்த தோழர் சக்திவேலைத் தேடி கடந்த 12.06.2018 அன்று  கருப்பு நிறக் காரில் கொப்பம்பட்டிகாவல் ஆய்வாளர்  மற்றும் காக்கிச் சட்டை அணியாத மற்றொரு போலீசும் ஊருக்குள் சென்றனர். மதியம் சுமார் 12 மணிக்கு தோழர் சக்திவேலின் அக்காவும், மாமாவும் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

எடுத்த எடுப்பிலேயே காக்கிச் சட்டை அணியாத போலீசு  சக்திவேலின் மாமாவை  பார்த்து  “ஏல ஓ மச்சான் எங்கல ? அவன ஸ்டேசன்ல வந்து ஆஜராகச் சொல்லு. பதிமூனு பேர கொலை பண்ணிருக்கான். அவன் தீவிராவாதி லிஸ்ட்டுல இருக்கான்” என்றார். அதற்கு சக்திவேலின் மாமா “பதிமூனு பேர கொன்னது யாருன்னு உலகத்துக்கே தெரியுமே“ என்று தைரியமாக கூற, சக்திவேலின் அக்கா இடைமறித்து போலீசிடம் “ மரியாத  இல்லாம பேசாதிங்க சார்” என்று கூறியிருக்கிறார்.

அந்த போலீஸோ “ உனக்கு என்ன முண்ட மரியாத “ எனத் திமிராக பேசியதுடன் நிற்காமல், சக்திவேலின் மாமாவைப் பார்த்து ”ஸ்டேசனுக்கு வால” எனக் கோபமாக  கத்தியுள்ளார். சக்திவேலின் மாமா ”அந்த வேட்டி எடும்மா… என்ன செஞ்சுருவாங்க பார்த்துருவோம் ” என கால்சட்டை போட்டு இருந்தவர்  வேட்டி அணிந்து, உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய தைரியத்தோடு போலீசோடு கிளம்பி இருக்கிறார். பாதி தூரம் நடந்து செல்லும் போது அருகிலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேலின் அத்தை வழி மறித்து என்ன விசயம் என கேட்டிருக்கிறார்.

சீருடை அணியாத போலீசு “இந்த ஆளு இவன் மச்சானை எங்கேயோ ஒழிச்சு வச்சு நாடகமாடுறான். ஸ்டேசனுல கூட்டி போய் விசாரிச்சா உண்மை தெரிஞ்சுரும் , நீ யாரும்மா?”  என திமிராக பதில் சொல்லியிருக்கிறார்.

“நான்  சக்திவேலோட அத்தை. எங்க புள்ளையை  15 – 20  நாளா காணல. எங்களுக்கு உங்க பேருல தான் சந்தேகம் இருக்கு . நீங்கதான் எங்க புள்ளையை கொன்னாலும் கொன்னுருப்பீங்க ! உங்க பேருலதான் கம்ளைண்ட்டு கொடுக்க போறோம்” என்று கோபம் கொப்பளிக்கக் கூறியுள்ளார்.

இப்பதிலில் மிரண்டு போன போலீசு, சக்திவேலின் மாமாவிடம் அலைபேசி எண் மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பியது. சிறிது நேரம் கழித்து, கொப்பம்பட்டி SI  சக்திவேலின் மாமாவிற்கு போன் செய்து   “நானும் உங்க சாதிதான், நாங்க வந்தா எங்களுக்கு நீங்க மரியாத குடுக்க மாட்டுக்கிறிங்க, அதான் அவரு உங்ககிட்ட மரியாத இல்லாம பேசிட்டாரு” என  நைச்சிமாக பேசி இருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தை சாதி ரீதியாக மடக்கப் பார்த்துள்ளார். சக்திவேலின் மாமாவோ இணைப்பைத் துண்டித்தார்.

அவருக்கு இது புதிதில்லை. ஊருக்குள் போலீசின் அராஜகம் ஏற்கனவே அரங்கேறிவிட்டிருந்தது. கடந்த  29.05.2018 அன்று இரவு 1 மணிக்கு ஒரு வேன், ஒரு ஜீப்போடு சுமார் 20 போலீசு சக்திவேலின் ஊருக்குள் புகுந்திருக்கிறது.”ஒருத்தன பிடிக்கிறதுக்கு இத்தினி பேரா?” என ஊரே மிரண்டு போயிருக்கிறது.

”144 தடை உத்தரவு இருக்கும் போது சட்டத்தை எப்படி மீறலாம்?” என போராடிய மக்களை கேள்வி கேட்ட போலீசு, ”போராட்டக்காரர்களின் வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்யக் கூடாது” என்ற நீதிமன்ற உத்தரவை கழிப்பறை காகிதமாக்கி வீசியது.

மலையையே குடைந்து நின்ற பி.ஆர். பழனிச்சாமியை பிடிக்கப் பாயாத போலீசுப் படை, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை பிடிக்கப் போகாத போலீசுப் படை, மக்கள் பிரச்சினைக்காக மக்களோடு தோளோடு தோள் நின்றார் என்பதற்காக தோழர் சக்திவேலை பிடிக்க வெறிகொண்டு அலைகிறதென்றால் இந்தப் போலீசுப் படை யாருக்காக இருக்கிறது ?

“அவன் தீவிரவாதி லிஸ்டுல இருக்கான்” என்று கதை கட்டுவது, இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து ”கையைக் காலை உடைப்பேன்” என மிரட்டுவது, செல்போனை பிடுங்கிக் கொள்வது என இந்த நிமிடம் வரை ஊருக்குள் அராஜகம் செய்து கொண்டிருக்கிறது போலீசு.

கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள தோழர் கணேசன் வீட்டிற்கு சென்ற 13-க்கும் மேற்பட்ட போலீசார், அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து  பார்த்துள்ளது போலீசு. அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவே, ”அவன் தீவிரவாதி, அவனுக்கு ஏன் வீட்ட வாடகைக்கு கொடுத்த ? வீட்ட காலி பண்ணச் சொல்லு, இல்லன்னா குண்டு வச்சு வீட்டை பொளந்துருவோம்” என மிரட்டியுள்ளது. தோழரின் மனைவி இல்லாத சமயத்தில் மறுமுறையும் சென்று அவ்வாறு நெருக்கடி கொடுக்கவே வீட்டு உரிமையாளர் பூட்டை உடைத்து தோழரின் வீட்டுப் பொருள்களை வெளியே எடுத்துப் போட்டிருக்கிறார்.

முதியவர் என்றும் பாராமல் தோழரின் தாயாரின் கையைப் பிடித்து இழுத்து வண்டியில் ஏற்ற முயற்சித்தது போலீசு. “தீவிரவாதின்னு உம் பையனோட படத்த போஸ்டர் அடிச்சு ஒட்டீருவோம்“ என பயமுறுத்திச் சென்றிருக்கிறது. இடி விழுந்த வீட்டில் புயலடித்தால் என்னாகுமோ அப்படி ஆகியிருக்கிறது தோழரின் வீடு. தோழரின் ஸ்டூடியோவிற்கும் சென்று, வேலை பார்ப்பவரையும் மிரட்டியிருக்கிறது போலீசு. “கம்ப்யூட்டரோடு வண்டியில் ஏறு என பணியாளரை மிரட்ட, கட்டிட உரிமையாளர் வந்து சண்டை பிடிக்கவே பின் வாங்கியிருக்கிறது போலீசு.

ஸ்டெர்லைட் ஆலையால் குழந்தைகள் கூட கேன்சர் வந்து சாகிறது. தயவுசெய்து ஆலையை மூடுங்கள் என்று குடிமக்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஆலையின் ஒரு செங்கல்லைக் கூட அசைக்காத  போலீசு, போராடிய மக்களுக்கு துணை நின்றார் என்ற காரணத்திற்காக தோழரின் வீட்டை குண்டு வைத்து தகர்ப்பேன் என குலைக்கிறதென்றால் யார் போட்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்டுகிறது?.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் இருக்கும் தோழர் பொன்ராஜின் வீட்டிற்குள் அதிகாலை 3 மணிக்கு நுழைந்த போலீசு, 5 மணி வரை வெளியே போகவில்லை. விசாரணை என்கிற பெயரில் குடும்பத்தாரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. 12.06.2018 அன்று தோழர் பொன்ராஜின் இரு சக்கர வாகனத்தை ‘பைனான்ஸ் கம்பெனியின்’ ரவுடிக் கும்பல் தூக்கிச் செல்வது போல் ஓட்டிச் சென்றுள்ளது போலீசு. எந்த சட்டத்தின்படி இதையெல்லாம் செய்கிறது போலீசு?

இது போல இன்னும் மதுரை, தூத்துக்குடி என பல ஊர்களில் போலீசு வெறி கொண்டு அலைகிறது. தூத்துக்குடியில் இன்னும் பலர் வீடு திரும்பவில்லை. பலருக்கும் போலீசிடம் வாங்கிய அடியின் தடம் மாற நாட்கள் பல பிடிக்கும். வீட்டின் முன் கொஞ்சம் மாடலான “பைக்” நின்றாலே அங்கே ஒரு இளைஞன் இருப்பான் என வீட்டிற்குள் புகுந்திருக்கிறது. இவ்வளவு நெருக்கடிகளிலும் உறுதி குலையாமல் நிற்கின்றனர் மக்கள் அதிகாரத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களும், ஆதரவாளர்களும்.

ஸ்டெர்லைட்டுக்கு அடியாளாக வேலை செய்யும் இரத்த வெறி பிடித்த கூலிப்படையாகவே செயல்பட்டு வருகிறது போலீசு. நாட்டை, கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாகாமல் காக்க, அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராடும் மக்களுடன் என்றும் இணைந்து நிற்கும் மக்கள் அதிகாரம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க