பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை !
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! – மில்டன்

தூத்துக்குடி படுகொலை சம்பவத்தையும் அதனைத் தொடர்ந்து  பொய் வழக்குகளின் கீழ் போராடிய மக்களும், அவருக்கு துணையாக நின்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” கடந்த 29-06-2018, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர்.

அந்த கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் உரையாற்றினார். அவ்வுரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டிருக்கிறது.

*******

ஸ்டெர்லைட் போராட்டம் மக்கள் அலையலையாய் எழுந்த போராட்டம் !

“பிப்ரவரி மாதம் உண்ணாவிரதம் இருக்க இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிய மக்கள், நாள் முழுவதும் அங்கேயே இருந்தார்கள். போலீசு இதற்காக அவர்கள் மீது வழக்கும் போட்டது! அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை.

பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை !
ஸ்டெர்லைட்டை மூட திரண்டெழுந்த மக்கள்

மார்ச் 24-ல் தூத்துக்குடியில் ஒரு பொதுக்கூட்டம். பொதுவாக 1000 அல்லது 2000 பேர் வருவார்கள். அந்த பொதுக்கூட்டத்திற்கு சுத்துப்பட்டு பல்வேறு கிராமங்களிலிருந்து அலைஅலையாய் பல்லாயிரக்கணக்கில் வந்தார்கள். வந்து கொண்டே இருந்தார்கள்.

ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம். அதில் மட்டும் 10000 மக்கள் கலந்துகொண்டார்கள். இப்படி எந்த போராட்டம் என்றாலும் மக்கள் அலைஅலையாய் கலந்துகொண்டார்கள்.

அதே போல்தான், மே 22-ம் தேதி போராட்டமும்! கலெக்டர் அலுவலகம் செல்வோம். அங்கேயே உட்கார்வோம். முடிவு தெரியாமல் எழுந்து வருவதில்லை என்ற முடிவில் தான் குழந்தைகளோடு, பிஸ்கெட், பால் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பேரணியாய் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்தார்கள்.

போலீசை மக்கள் வீரத்துடன் எதிர்கொள்கிறார்கள் !

மே 22ந் தேதியன்று துப்பாக்கிச் சூடு படுகொலைகள், தொடர்ந்து கைது, சிறை. எப்படி மக்களை அச்சுறுத்துவது என போலீசு இன்றைக்கு வரைக்கும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் அதை வீரத்துடன் எதிர்கொள்கிறார்கள்.

மடத்தூர் என்ற ஊரில் தினமும் இரவில் போலீசு வந்து தொந்தரவு செய்வதும், கைது செய்வதுமாக இருந்தார்கள். பெண்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலில் படுத்துக்கொண்டார்கள். வயதானவர்கள் மட்டும் வீட்டில் இருந்தார்கள். போலீசு கும்பலாக வந்து, வீடு வீடாக, கதவை லத்தியால் தட்டிக்கொண்டே சென்றார்கள். அடுத்தநாள் 30 பெண்கள் ஒன்று கூடி, ஒரு புகார் எழுதி, வழக்கறிஞர்களுடன் போய் எஸ்.பி, கலெக்டர் அலுவலகம் என எல்லோரையும் பார்த்து முறையிட்டார்கள்.

சிலோன் காலனியில் வீட்டில் இரண்டு இரண்டு பெண்களாக இருந்து கொண்டார்கள். போலீசு இரவு உள்ளே நுழைந்த பொழுது, தைரியமாய் மறித்து, என்ன வழக்கு? உனக்கு யார் வேண்டும் என சொல்லு! என எதிர்த்து நின்றார்கள். இப்படி எல்லா காலங்களிலும் அடக்குமுறையை தூத்துக்குடி மக்கள் தீரத்துடன் எதிர்த்து நிற்கிறார்கள்.

போராடும் மக்களுக்கு துணை நிற்கிற வழக்கறிஞர்களை குறிவைக்கிறது போலீசு!

போராடும் மக்களுக்கு உதவி செய்கிற வழக்கறிஞர்கள் மீது அடுத்து குறி வைக்கிறார்கள். அந்த வகையில் தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது குறிவைத்து நகர்த்துகிறார்கள். அவர்கள் செய்தது என்ன?

பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்கித் தந்தார்கள். மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என ஒன்றாகக் கூடி முடிவெடுத்தார்கள். “அமைதி கூட்டம்” என்ற பெயரில் ஒரு சிலரை மட்டும் அழைத்து அரசு கூட்டம் நடத்தியது. போராட்டத்தில் உறுதியாக நின்ற மக்கள் அந்த சிலரை போராட்டக்குழுவிலிருந்து நீக்கினார்கள். ஆக, மக்கள் உறுதியோடு ஸ்டெர்லைட்டை மூடவேண்டும் என்ற போராட்டத்திற்கு அவ்வபொழுது சட்ட ரீதியாக ஆலோசனை சொன்னர்கள்.

பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை !
தூத்துக்குடி மக்களுக்கு உறுதுணையாக வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன்

பொதுவாக எத்தனையோ கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சம்பிரதாய போராட்டத்தை முன்வைக்கிறார்கள். மக்களின் உறுதிக்கு ஈடுகொடுக்க அவர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லை. அவர்களின் நோக்கத்துக்கு ஆலோசனை சொல்லி, அவர்களோடு பயணித்ததற்காகத்தான் இப்பொழுது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது! சிறை! அனைத்தும்.

தூத்துக்குடியில் மணிகண்டன் என்றொரு வழக்கறிஞர். இந்த பிரச்சினை குறித்து பம்பரமாக வேலை செய்யக்கூடியவர். அவரிடம் யாரெல்லாம் மக்களுக்கு சட்ட உதவிகள் செய்தார்களோ அவர்களைப் பற்றிய விவரங்களை கேட்டிருக்கிறது போலீசு! வழக்கறிஞர்கள் சிறைக்கு சென்று மக்களை சந்தித்தார்கள். அவர்கள் எல்லாம் யார்? யார்? அவர்களின் பின்னணி என்ன விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஆக, போராடும் மக்களுக்கு யார் யாரெல்லாம் அறிவுபூர்வமாக பங்களிக்கிறார்களோ அவர்கள் தான் போலீசின் அடுத்த குறி!

போராடும் மக்களுக்கு துணை நிற்க அறிவாளிகள் வேண்டும்!

சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அங்கு பங்களிக்க அறிவுத்துறையினர் யார் இருக்கிறார்கள்? அங்குதான் பற்றாக்குறை இருக்கிறது. அதை நிரப்ப வழக்கறிஞர் வாஞ்சிநாதன்கள் போல பலரும் தேவை! தூத்துக்குடியில் நிறைய வழக்கறிஞர்கள் அப்படி இருக்கிறார்கள் என வழக்கறிஞர் சுப. முத்துராமலிங்கம் சொன்னார். தூத்துக்குடியில் இருப்பது போல போராடும் மக்களுக்கு களத்தில் துணையாய் நிற்க நிறைய வழக்கறிஞர்கள், அறிவாளிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் நாடு முழுவதும் வேண்டும்.

தூத்துக்குடி போராட்டத்தின் மூலம், கலவரத்தை அரசு எப்படி தூண்டுகிறது, எப்படி கையாளுகிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவிற்கு அறிவாளிகள் தேவை! என்பதை இங்கு பதிவு செய்கிறேன்”

  • மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
    சென்னை.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க