ற்றை எஸ்.எம்.எஸ்-ன் மூலம் துவங்கிய நானோ எனும் ஒற்றைக் காரின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முந்தைய சிங்கூர் நினைவில் உள்ளதா?

த்தன் டாடாவின் நடுத்தர வர்க்கத்து மக்களின் கனவுக் காருக்காக அப்போது சிங்கூர் மக்களின் ரத்தம் ஆறாக வழிந்தோடியது. சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய சுமார் 950 ஏக்கர் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வழிப்பறி செய்து நிவாரணத்தொகை எனும் பெயரில் சில்லறைக் காசுகளை விட்டெறிந்து விட்டு அவற்றை மலிவு விலைக்கு டாடாவின் பாதத்தில் சமர்பித்தது மேற்கு வங்க மார்க்சிஸ்டு அரசு.

சில ஆயிரம் கோடி கடன், இன்னபிற சலுகைகள் என டாடாவின் பாதம் பணிந்த மார்க்சிஸ்டு கட்சியின் புத்ததேவ் அரசு, தமது வாழ்வாதாரமான விளை நிலங்கள் பறிபோனதை எதிர்த்துப் போர்குணத்துடன் போராடிய மக்களைச் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையில் நந்திகிராமில் இதே போல் விவசாய நிலங்களைப் பறித்து சிறப்பு பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவ முயன்றது மேற்கு வங்க அரசு.

வெகுண்டெழுந்தனர் மேற்கு வங்க விவசாயிகள். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டையும், அடக்குமுறையையும் துச்சமென மதித்து போர்க்களம் கண்ட மக்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் ரத்தன் டாடாவை ஓட ஓட விரட்டியது. இந்தப் போராட்டத்தை அறுவடை செய்து கொண்ட திரிணாமூல் காங்கிரசின் மம்தா பானர்ஜி, பின்னர் சி.பி.எம் கட்சிக்கு நிரந்தர சமாதி கட்டினார்.

மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பது அன்றைக்கு ரத்தன் டாடாவுக்குப் புரியவில்லை. மும்பையின் மழை நாள் இரவு ஒன்றில் தான் காரில் பயணம செய்து கொண்டிருக்க,  ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம் டாடா.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம் டாடா.

உடனே ஸ்கூட்டர் விலையில் அல்லது சற்று அதிகமாக ஒரு இலட்சத்தில் கார் தயாரித்து நடுத்தர வர்க்கத்தை கடைத்தேற்றுவது என்று முடிவு செய்தாராம். இந்த உயரிய லட்சியம் நிறைவேற அற்ப விவசாயிகள் தடை போட்டு விட்டார்களென டாடா மனமொடிந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவ முன் வந்தவர் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத்தின் முதலமைச்சருமான நரேந்திர மோடி.

குஜராத்தின் சதானந்த் பகுதியில் நானோ தொழிற்சாலைக்கென 1,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்து ’ஏழைகளுக்காக’ டாடா கண்ட கனவை நனவாக்க முன்வந்தார் மோடி.

விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதியை எல்லாம்  மீறி மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அள்ளிக் கொடுத்தார். இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடாவுக்காக ரத்து செய்யப்பட்டது.

மேலும் தொழிற்சாலையை அமைப்பதற்கு ரூ. 9,570 கோடியில் குஜராத் அரசு 0.1% வட்டிக்கு கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் ரூ.2,330 கோடியும் அடக்கம்.

இந்த ரூ. 9,570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் -அதுவும் பல தவணைகளில் – திருப்பினால் போதும். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்க முன்வந்தது. மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20 ஆண்டுகளுக்கு வாட் வரி கிடையாது. இவையன்றி சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, மின்சார வரி சலுகைகள்; பத்து ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி தள்ளுபடி.  இந்த நிலத்தை பதிவு செய்வதற்கான முத்திரைக் கட்டணம் 20 கோடியும் தள்ளுபடி. ஆலைக்கு செல்வதற்கான நான்கு வழிச்சாலையை மோடி அரசே அமைத்துத் தந்தது. குடியிருப்புகளை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தையும் மோடி அரசே வழங்கியது.

சுருக்கமாகச் சொன்னால் நானோ காரைப் போர்த்துக் கொண்டிருக்கும் தகர டப்பாவும், அதன் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர் எஞ்சினையும் தவிர்த்து மற்ற அனைத்தும் மக்களின் பணம்.

ஒரு வழியாக ’கார்’ எனும் பெயரில் மேற்படி சோப்பு டப்பா சந்தையில் விற்கப்பட்டது.  நடுத்தர வர்க்க மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கான வாகனம் எனச் சொல்லப்பட்ட நானோ கார், பாதுகாப்பிற்கான சோதனைகள் பலவற்றில் தோல்வியடைந்தது. செயற்கை விபத்துப் பரிசோதனைக்கு (Crash Test) நானோ கார்களை உட்படுத்த மறுத்தது டாடா நிறுவனம். அதனுள்ளே பயன்படுத்தப்பட்ட இணைப்புக் கருவிகளும், இன்ஜினும் தரக்குறைவானவை என்பதால் அடிக்கடி பழுதாகி நடு ரோட்டில் காலை வாரியது.

ஒன்றரை லட்சத்துக்கு வாங்கிய காரைப் பராமரிக்க பல லட்சங்கள் செலவு செய்த வாடிக்கையாளர்கள், “வெண்கலப் பூட்டை உடைத்து விளக்குமாத்தைக் களவாடிய” திருடனின் நிலைக்கு ஆளானார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் நானோ காரைப் போர்த்துக் கொண்டிருக்கும் தகர டப்பாவும், அதன் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர் எஞ்சினையும் தவிர்த்து மற்ற அனைத்தும் மக்களின் பணம்.

இறுதியாக டாடா நானோ தற்போது மரணப்படுக்கைக்கு வந்துள்ளதென பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ கார் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதே ஜூன் மாதத்தில் கடந்தாண்டு மட்டும் 275 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இன்று அது ஒன்றல் நிற்கிறது. அதே போல் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் சுத்தமாக நின்று விட்டது.

எனினும் பத்திரிகைச் செய்திகளுக்கு எதிர்வினையாற்றியுள்ள டாடா நிறுவனம், ’நானோ’ கார்களின் விற்பனை குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டு நிறுவனத்தைக் காப்பாற்ற மேலும் முதலீடு தேவையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. அடுத்து எந்த வங்கியின் தலையில் முக்காடு விழப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலை நீடித்தால் 2019-ம் ஆண்டுக்குள் டாடா நானோ முற்றிலுமாக இழுத்து மூட வேண்டிய நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றன பத்திரிகைச் செய்திகள். உற்பத்தியை நிறுத்தியுள்ள டாடா நிறுவனம், ஆர்டர்களின் பேரில் மட்டும் தயாரித்துக் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நானோ கார்கள் சாவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், மின்சாரத்தில் ஓடும் கார் வகைகளை அறிமுகம் செய்ய ஆலோசித்தனர். இதற்குத் தேவைப்படும் மூலதனம் ஒரு பக்கமிருக்க மின்சாரக் கார்களின் விலை அதிகமென்பதாலும், அவ்வகைக் கார்கள் ஓடுவதற்குத் தேவையான ரீசார்ஜ் மையங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் இல்லை என்பதாலும் அத்திட்டம் கைவிடப்பட்டது.

மலிவான கார் என்பதாலேயே மக்கள் அள்ளிக் குவித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் மலிவான தரத்தில் கார்களைத் தயாரித்ததே தோல்விக்குக் காரணம் என்கின்றன முதலாளிய பத்திரிகைகள். உண்மையில் நானோ கார் டாடா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி. முதலில் சர்வதேச அளவில் பொதுவாக பங்குச் சந்தைகளும் குறிப்பாக கார் சந்தையும் பெரும் சரிவில் இருந்த சமயத்தில்தான் நானோ காரின் அறிவிப்பு வெளியானது. பத்தாண்டுகளுக்கு முன்பு துவங்கிய பொருளாதார நெருக்கடியும் மந்த நிலையும் பங்குச்சந்தையின் சூதாட்ட அரங்குகளில் ஒருவிதமான தேக்க நிலையை ஏற்படுத்தியிருந்தன.

கார் நிறுவனங்களின் பங்குகள் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்த மாடல்கள் அனைத்தும் சந்தையில் விலை போகாமலிருந்த சமயத்தில் தான் ”ஒரு லட்சம் கார்” அறிவிப்பு வெளியானது. இதனால் பங்குச் சந்தையில் டாடாவின் பங்குகளுடைய மதிப்பு கூடியது; டாடா மோட்டார்ஸ் ஒரு பெரும் நெருக்கடியில் இருந்து தப்பிக் கொண்டது.

இரண்டாவதாக, மேலே விளக்கியது போல் இந்தக் காரை உற்பத்தி செய்யும் ஆலைக்கான செலவு அனைத்தையும் திருவாளர் மோடியின் மூலம் மக்களின் தலையில் சுமத்தியது டாடா நிறுவனம். ஒருவேளை இந்த தகர டப்பா சந்தையில் வெற்றி பெற்றிருந்தால் டாடா மோட்டார்ஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்திருக்கும்.

நானோ கார் திட்டமே திருவிழாக் கூட்டங்களில் ஆடப்படும் லங்கர் கட்டை விளையாட்டு தான் – பூ விழுந்தால் வெற்றி டாடாவுக்கு, தலை விழுந்தால் தோல்வி மக்களுக்கு. இப்போது தலை விழுந்துள்ளது என்பதுதான் செய்தி.
  • சாக்கியன்

1 மறுமொழி

  1. டாடா-வை எப்போ மோடி டாட்டா காட்டி லண்டனுக்கு வழி அனுப்பி வைக்க போறாரோ தெரியலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க