என் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்

சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல்.

ணிக்காலம் முழுதும் வேதியியல் ஆசிரியராகவே இருந்த நான், தலித் குடும்பமான என் குடும்பத்தின் கதையை ஒருநாள் எழுதுவேன் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.. என் குடும்பத்தின் மூன்று தலைமுறையின் கதையை எழுதியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான சம்பவங்கள், என் அப்பா ஓய்வு பெற்றபிறகு ஒவ்வொரு மாலையும் அவருக்கு  நான் சாராயம் வாங்கிக் கொடுக்க, அதைக் குடித்துக்கொண்டே அம்மாவும் அவரும் எங்களை வளர்க்க சிரமப்பட்ட காலங்களைப் பற்றி அவர் சொன்னவை.

வங்கபல்லி என்ற சிறு கிராமத்தில் தொடங்கி, தெலுங்கானாவின் பல்வேறு இடங்களைக் கடந்து ஆந்திராவின் தலைநகரம் ஹைதராபாதின் இரட்டை நகரான செகந்திராபாத்தில் வந்து முடிகிறது. யோசித்துப் பார்த்தால், ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திர நாடாக மாறிய இந்தியாவின், கொந்தளிப்பான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கும் கதை. கால கட்டத்தோடு மாறிக்கொண்டிருந்த வாழ்வுகளின் கதையும்கூட…

தாத்தாவின் மகனான என் தந்தை பாலய்யாவைப் பற்றியும் அவரின் பிள்ளைகள் பற்றியும் கூறும் இந்தக் கதை மூன்று தலைமுறைகளினூடாகப் படிப்பறிவற்றிருந்த எங்களின் குடும்பம் எப்படி கல்வியின் உச்சம் தொட்டது என்பதையும் பதிவு செய்கிறது. அன்றாடம் சம்பாதித்து அன்றாடம் உண்ட நிலையிலிருந்து ஆழமான சிந்தனைக்கும் சுய முன்னேற்றத்திற்குமான நிலைக்கு அவர்கள் பயணப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது…

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகள் ஒதுக்கிவைப்பட்டவர்களாக மிக மோசமான நிலைமையில் வாழ்ந்து வந்தார்கள். தீண்டாமையை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்..

காலம் காலமாக எவ்வளவு மனிதத்தன்மையற்ற சூழலில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்தனர் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சிதான் இந்தப் புத்தகம்.. முன்னேற்றமான வாழ்வை நோக்கி நகரும் எண்ணத்தில் இன்று இவர்கள் தங்கள் வரலாற்றிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்..

இந்தக் கதையை நான் எழுதியே தீரவேண்டும் என்ற எண்ணம் என் அழகான பேத்தியைப் பார்த்தபோது தோன்றியது. அவள் அமெரிக்காவில் பிறந்தவள். சிவப்பான உதடுகளும் சுருட்டை முடியும் அழகான பெரிய கண்களுமாக நான் பார்த்ததிலேயே அழகியாக அவள் இருந்தாள். இந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகும்போது இந்திய நாட்டிலிருந்தும் குறிப்பாகத் தலித் சமூகத்திலிருந்தும் அந்நியப்பட்டு இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது.

அமெரிக்க வரலாற்றையும் இன வெறியையும் அடிமை முறையையும் பற்றி அவளால் படிக்க முடியும். அடிமை முறையினும் கொடுமையான சாதிய முறைகள் பற்றியும் தீண்டாமை பற்றியும் அவள் எப்படி அறிந்துகொள்வாள்? தனது மூதாதையர்கள் யாரென்றோ, எங்கிருந்து வந்தார்களென்றோ அவளால் அறிந்து கொள்ள முடியுமா? அதனாலேயே இந்தப் புத்தகத்தை உடனடியாக எழுதத் தொடங்கினேன்..

என் தாத்தா மட்டும் தன் செருப்புத் தைக்கும் தொழிலில் சிறந்து விளங்கி, தான் தைத்த செருப்பை நிசாமுக்கு வழங்காமல் இருந்திருந்தால் எங்கள் கதையும் இன்றுவரை அடிமைத் தளையில் சிக்குண்டிருக்கும் பல தலித்துகளின் கதையைப் போலவே இருந்திருக்கும்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, தீண்டத்தகாதவர்கள் ஆற்றிய பங்கை இதுவரை யாரும் முழுமையாக அங்கீகரித்தது கிடையாது, பதிவு செய்ததும் கிடையாது. அப்படி அவர்கள் செலுத்திய உழைப்பில் விளைந்த பொருளாதாரத்தின் பயன்களைத் தலித்துகள் அனுபவித்ததும் கிடையாது.

நம் வரலாற்றை நாமே எழுத வேண்டிய காலம் வந்துவிட்டது. “ஒரு ஊர்ல ஒரு ஏழை பிராமணன் இருந்தானாம்…” என்று தொடங்கும் பிராமணர்களின் கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என் குடும்பத்தினர் மட்டுமல்ல ஒவ்வொரு தலித்தும் தலித் அல்லாத ஒவ்வொருவரும்கூட வருங்காலத்தைக் கட்டமைக்க, வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

– (என்னுரையில், நூலாசிரியர் ஒய்.பி.சத்தியநாராயணா)

நூல்: என் தந்தை பாலய்யா
ஆசிரியர்: ஒய்.பி.சத்தியநாராயணா
(தமிழில்: ஜெனி் டாலி அந்தோணி)

வெளியீடு: காலச்சுவடு,
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி)லிட்., 669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 91-4652–278525,
மின்னஞ்சல்: publications@kalachuvadu.com

பக்கங்கள்: 288
விலை: ரூ.325.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க