தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, எண்ணற்ற பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இன்று பிணை வழங்கியிருக்கிறது. மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு. பிரபு ராஜதுரை வாதாடினார். இவ்வழக்குகள் அனைத்தையும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.

பிணையில் விடுவிக்கப்பட்டோர் விவரம் வருமாறு

  • சதீஷ் (மக்கள் அதிகாரம், மதுரை)
  • முருகேசு (மக்கள் அதிகாரம், மதுரை)
  • மகேஷ் (குமரெட்டியாபுரம்)
  • ராஜ்குமார் (குமரெட்டியாபுரம்)
  • வியனரசு (நாம் தமிழர் கட்சி)

கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் குறைந்தபட்சம் பத்து முதல் அதிகபட்சம் 90 பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு வழக்கில் பிணையில் வந்தால், அடுத்த வழக்கில் ரிமாண்டு செய்வது என்ற அப்பட்டமான சட்டவிரோத வழிமுறையை போலீசு கையாண்டு வருகிறது.

அது மட்டுமல்ல. பொதுவாக மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்து அங்கே நிராகரிக்கப்பட்டால்தான் உயர் நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்பது நடைமுறை.  தன்னுடைய கேடான நோக்கத்துக்கு ஏற்ப நீதிமன்றத்தையும் போலீசு பயன்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களில் பிணை மறுக்கப்பட்டால் உடனே உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்க முடியும். அவ்வாறு எந்த முடிவும் எடுக்காமல் வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றன.

ஒரு சம்பவத்தின் மீது சுமார் 250 வழக்குகள். அத்தனையும் பொய்யான ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்ட வழக்குகள். அந்த பொய் வழக்குகளிலும் பிணை வாங்க முடியாமல் இழுத்தடிப்பு நடவடிக்கைகள்.

ஒருவேளை பிணை கிடைத்தாலும், யாருக்கு பிணை கிடைக்கிறதோ அவர்கள் மீது குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவுவது

– இப்படி எல்லாவிதமான முறைகேடுகளையும் திட்டமிட்டே தமிழக அரசு அரங்கேற்றி வருகிறது.

இதன் நோக்கம் வெறும் அடக்குமுறை மட்டுமல்ல.  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும்வரை மக்கள் அதிகாரம் அமைப்பினரையும், தூத்துக்குடி போராட்டத்தில் முன்னணியாக நின்ற மக்களையும் சிறையிலிருந்து விடுவிக்கக் கூடாது என்பதுதான்.

மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களா அல்லது பிற கட்சியினரா அல்லது கட்சி சாராத மக்களா என்ற பாகுபாடுகள் ஏதும் பார்க்காமல், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்காகவும் எல்லா வழிகளிலும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போராடி வருகிறது.

தற்போது 5 பேருக்கு கிடைத்திருக்கும் பிணை, இந்தப் போராட்டத்தில் கிடைத்திருக்கும் சிறியதொரு வெற்றி.

போராடிய மக்கள் விடுவிக்கப்படுவது மட்டுமல்ல, 13 பேரைக் கொன்ற கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படவேண்டும். அதுவரை நம் போராட்டம் தொடரும்.

இவண்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க