தயவு செய்து தற்கொலை செய்து கொள்!

நாங்கள்
சமையலராக இருக்கிறோம்

நாங்கள் சமைத்த உணவு
உனக்கு வேண்டாமெனில்…

நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்

செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக் கொள்

பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக் கொள்

பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்.

வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே வாதாடிக் கொள்

முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக் கொள்

ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக்கொடு

ஓட்டுநராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக் கொள்

கூலிகளாய் இருக்கிறோம்
உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்

மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்

சாக்கடை வாருபவராக இருக்கிறோம்
உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்

கலப்புமணம் புரிந்தவராக
இருக்கிறோம்
உன்னையே நீ புணர்ந்துகொள்

நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை
எழுதியவராக இருக்கிறோம்

இதுவும் உனக்கு
வேண்டாமெனில்

தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.

***

சுகிர்தராணி

நன்றி: சுகிர்தராணி, எழுத்தாளர், கவிஞர்.

 

 

 

 

செய்தி: அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா என்று கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம் செய்திருக்கின்றனர். பாத்திரங்களை உடைத்து, சமையல் செய்யவிடாமல் செய்தனர். அரசுப் பள்ளி நிர்வாகமும் பாப்பம்மாளை ‘காலனி’யில் செயல்படும் பள்ளிக்கு இடமாற்றம் செய்து விட்டது.
பிறகு பாப்பம்மாளுக்கு ஆதரவாகவும், சாதிவெறியர்களுக்கு எதிராகவும் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் கருத்து வர ஆரம்பித்ததும் அவரை அதே பள்ளியில் பணியில் அமர்த்தியது அரசு. ஆனாலும் சாதிவெறியர்கள் அதை ஏற்பதாக இல்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பது போன்றவை செய்து தமது எதிர்ப்பில் உறுதியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னரும் பாப்பம்மாள் இதே சாதிவெறிக் காரணத்தால் நான்கைந்து பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

4 மறுமொழிகள்

  1. இந்தக்காலத்தில சாதி எங்கேயிருக்கிறது என்று கேட்பவர்களுக்கு இதுதான் பார்ப்பனீயம் என்று நெத்திப்பொட்டில் குறிபார்த்து அடித்துள்ளனர் பார்ப்பனீய பாரம் சுமப்பவர்கள்.
    சுகிர்தராணி அவர்களின் கவிதையும் பார்ப்ப்பனீயத்தை குறிபார்த்து சுடுகிறது சிறப்பு….

    • ithil parpanagar enge vanthargal , thelivaga kuripida patturikirathu koundargal endru ,avargalai ethirthu pesa naam en mun varavillai

Comments are closed.