தச்சார்பின்மையினைக் கொள்கையாகக் கொண்ட கேரளாவில் இருக்கும் இடதுசாரிகளின் அரசு, இராமாயணத்தைப் போற்றும் ஒரு மத விழாவை அரசு கொண்டாடப் போவதாக அறிவிக்கிறது. உடனே இது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகிறது.

கிருஸ்ண ஜெயந்தியை மார்க்ஸ், பகத்சிங் படங்களோடு கொண்டாடும் கேரள சிபிஎம் (கோப்புப் படம்: செப்டெம்பர் 2015)

“கேரளாவில் இந்துத்துவ கோஷ்டிகள் வளர ஆரம்பித்திருக்கின்றன. அதை தடுக்க வேண்டுமென்றால் நமக்கு ஆதரவாக இருக்கிற சமஸ்கிருத அறிஞர்களை பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் இராமாயண விழா கொண்டாடப்படுகிறது. இதை அரசோ, கட்சியோ ஸ்பான்சர் செய்யவில்லை. நாங்கள் ஆதரிக்க மட்டுமே செய்கிறோம்” என கேரள இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் விளக்கம் தருகிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.எம்.-மின் சமூக வலைத்தள தொண்டர்கள், தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, கேரள சி.பி.எம். காயர்குலம் சட்டமன்ற உறுப்பினர் பிரதீபா, இராமாயணம் பாராயணம் செய்வதை வீடியோவாகவே வெளியிட்டு, “இராமயணம் வாசிப்பது நன்மையை பரப்புவதற்கே” என ஆன்மீகப் பரவசத்துடன் தலைப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதாவது நாங்களும் வேதகால நாகரிகத்தை ஆதரிக்கிறோம் என ஜோதியில் கலந்து விட்டார்.

இதற்கு தமிழக சி.பி.எம் தோழர்கள் வேறு ஒரு விளக்கம் தருகிறார்கள். அதாவது ராமாயணம் ஒரு நாட்டார் மொழி வரலாறு போல பல அரிய சேதிகளை, வரலாற்றை, நமது பொக்கிஷத்தை கொண்டிருக்கிறது. அதை முற்றிலும் மறுக்கக் கூடாது, அது ஒரு மகத்தான இலக்கியம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி, அப்படி வைத்துக் கொண்டாலும் கூட இராமயண காலத்தில் சாதி எப்படி இருந்தது, சடங்குகள் எப்படி இருந்தது, என்ன படிப்பினை என்று கருத்தரங்கம் நடத்துவதற்கு பதில் இப்படி பாராயணம் செய்தால் நல்லது என்று பஜனை வழி போவது எப்படி சரி? மறைந்த நம்பூதிரிபாடு அவர்கள் எழுதிய வேதகால நாகரிகம் நூல் முதல் இவர்கள் நல்லதொரு இந்துமதம் இருப்பதாக கண்டுபிடித்து கூறுகிறார்கள். ஒருவேளை இந்தியாவின் வரலாற்றில் பெருமைப்படத்தக்க மரபு என்றால் அது பார்ப்பனியத்திற்கு எதிரான மரபு, போராட்டம், இலக்கியம் என்றுதான் சொல்ல முடியுமே அன்றி பார்ப்பனிய ஏரியாவில் நல்ல பார்ப்பனியம் இருப்பது என்பது அடிப்படையிலேயே தவறானது.

இந்துத்துவ அமைப்புகள் செய்யும் வேலையை இடது முன்னணி அரசே செய்யும் என தெரிந்துவிட்ட பிறகு, இனி பரிவாரங்களுக்கு வேலை இருக்காது இல்லையா? அவர்கள் ராமாயணம், மகாபாரதம் படிப்பதை நிறுத்திவிட்டு, இலக்கியம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் போலும். ஹரிஷ் என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்  ‘மீசை’ என்ற தொடரை ‘மாத்ருபூமி’ இதழில் எழுதி வந்தார். இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக ஒரு பகுதி வருகிறது.

கோவில் காதல் இல்லாத தமிழ் திரைப்படம் ஏது?

“உங்களுக்குத் தெரியுமா? கோயிலுக்குப் போகும்போது பெண்கள் ஏன் இப்படி அலங்காரம் செய்துகொண்டும், அழகான உடைகள் அணிந்தும் செல்கிறார்கள் என்று?”
– ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், என்னுடன் நடந்துகொண்டே இதைக் கேட்டார்..

“கடவுளை வணங்க” என நான் சொன்னேன்.

“இல்லை. நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள்…மிக அழகான உடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டு கடவுளை வணங்கவா அவர்கள் வருகிறார்கள்? அவர்கள் தாங்கள் பாலியல் உறவுக்கு தயாராகி விட்டதை தங்களை அறியாமல் சொல்லவே இப்படி செய்கிறார்கள்.”

நான் மெலிதாக புன்னகைத்தேன்.

“அப்படியில்லை என்றால், அவர்கள் ஏன் மாதத்தின் நான்கைந்து நாட்கள் கோயிலுக்குள் செல்வதில்லை? இது வேறொன்றுமில்லை, நாங்கள் இப்போது தயாராக இல்லை என சொல்வதற்காகத்தான்”

இதைப் படித்து வெகுண்டெழுந்த ’ஹிந்து ஐக்கிய வேதி’ என்கிற பரிவார் கும்பல், எழுத்தாளர் ஹரிஷை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்கிறது. எழுத்தாளரின் குடும்பத்தினரை இழுத்து மோசமான வசைகளை எழுதுகிறது. ஹரிஷ் தனது முகநூல் கணக்கை முடக்குகிறார். தனது தொடரை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவிக்கிறார். சங் பரிவாரங்களுக்கு அதுவும் போதவில்லை. ஹரிஷின் கையை வெட்டுவோம் என அறைகூவல் விடுக்கிறார்கள். பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

தனது தொடரை நிறுத்திக் கொள்வதற்காக மாத்ருபூமிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மாத்ருபூமி வார இதழில் பிரசுரமாகிவரும் என்னுடைய மீசை நாவல் மூன்று அத்தியாயத்தை கடந்துள்ளது. சிறுவயது முதல் மனதில்கிடந்ததும் அது சுமார் ஐந்து வருட உழைப்பின் பலனுமாகும். ஆனால் நாவலின் ஒரு பாகத்தை மட்டும் பிரித்தெடுத்து சிலர் மோசமான பிரச்சாரத்திற்கு உபயோகிப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஹரிஷ்

எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து மிரட்டல் உள்ளது.  ஒரு மாநிலத்தலைவர் தொலைக்காட்சி விவாதத்தில் என் கன்னத்தில் அடிக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னார். அதைவிட என் மனைவியையும் இரண்டு சின்ன குழந்தைகளுடைய படங்கள் உபயோகித்து அசிங்கமான பிரச்சாரங்கள் தொடருகிறது. அம்மாவையும் சகோதரியையும் இறந்துபோன அப்பாவையும் அசிங்கமாக பேசுகின்றனர்.  

பெண்கள் ஆணையத்திலும் பல காவல் நிலையங்களிலும் எனக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர். அதனால் நாவலை தொடர்ந்து பிரசுரிப்பதிலிருந்து நான் பின்வாங்குகிறேன்.  உடனே புத்தகமாக்கும் எண்ணமும் இல்லை. சமூகத்தின் வெறுப்பு அடங்கி அது ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றும்போது வெளியிடுவேன்.

என்னை தொந்தரவு செய்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு முயற்சிக்கவில்லை.  காரணம் இங்குள்ள நீதிநியாய சட்டத்தில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழக்க நான் தயாரில்லை.

மேலும் நாட்டை ஆளும் வர்கத்திற்கு எதிரே போராடுவதற்கான பலம் என்னிடமில்லை. ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக மாத்ருபூமி பத்திரிகை நிர்வாக குழு அங்கத்தினர்களுக்கு மேலும் எப்போதும் என்னுடன் துணை நிற்கும் குடும்பத்தினருக்கும். எழுத்து தொடரும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் எழுதிய விசயத்தில் திடமாக இருக்கும் ஹரிஷ் மன்னிப்புக் கேட்கவில்லை. இராமாயண விழாவில் பிசியாக இருந்த, முற்போக்கு-கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான இடது முன்னணி அரசு, இந்த சர்ச்சை தேசிய அளவில் பேசுபொருள் ஆன பிறகு, எழுத்தாளருக்கு வேண்டிய பாதுகாப்பை செய்யும் என அறிவிக்கிறது.

கருத்துரிமைக்கு பங்கம் வரும்போதெல்லாம் முதல் குரலாக ஒலிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எம்மின் த.மு.எ.க.ச-வின் குரல் (தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்), ஹரிஷ் விவகாரத்தில் கொஞ்சம் தாமதமாக ஒலிக்கிறது. தங்களுடைய கட்சி மற்றும் கேரளாவில் ஆளும் அரசு என்ன சொல்கிறது பார்ப்போம் என காத்திருந்துவிட்டு, அறிக்கை விடுகிறது போலும். சி.பி.எம். கட்சி ஏடான தீக்கதிரில் அதன்பிறகே செய்தி வெளிவருகிறது.

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷ் அவர்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை:

சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பற்ற சகிப்பின்மை குண்டர்கள், விமர்சிப்பவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவது, அவதூறு செய்வது, தாக்குவது, கொன்றொழிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்வாங்கச் செய்வது உள்ளிட்ட இழிவான வழிகளை கைக்கொண்டுள்ளனர்.

த.மு.எ.க.ச. தலைவர் சு.வெங்கடேசன்

பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்தில் கவிதையொன்றை மேற்கோள் காட்டியதற்காக ஊடகவியலாளர் கார்த்திக்கேயன் இவர்களது கடுமையான அவதூறுகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதேவிதமான நிலையை ஆண்டாள் குறித்த கட்டுரையொன்றில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளுக்காக எழுத்தாளர் வைரமுத்துவும் எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ஹரிஷ் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இதன் தொடர்ச்சிதான்.

மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டுவந்த அவரது ‘மீசை’ என்ற நாவலின் உள்ளடக்கத்திற்காக அவரது கைகளை வெட்டிவிடப்போவதாக யோக ஷேம சபா என்கிற அமைப்பினரால் மிரட்டப்பட்டுள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் பல்வேறு அவதூறுகள் சமூக வலைத்தலைங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் கடும் மனவுளைச்சலுக்காளான ஹரிஷ் தனது நாவலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். அவரை இந்த முடிவுக்கு நெட்டித் தள்ளிய சகிப்பின்மை குண்டர்களுக்கு எதிராக நாடெங்குமிருந்து ஒலிக்கும் கண்டனத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைகிறது.

மக்களாட்சி மாண்புகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கினை அனுமதிக்க முடியாதென்றும் எழுத்தாளர் ஹரிஷ் தனது படைப்பாக்கப் பணியைத் தொடர்வதற்குரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. அவரது கருத்துரிமைக்காக திரண்டுள்ள ஆதரவினால் உத்வேகம் பெற்று ஹரிஷ் தனது எழுத்துப்பணியை முன்னிலும் காத்திரமாக தொடர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

வெகுஜன ஊடகங்கள் ’சர்ச்சை’க்குரிய ஒரு செய்தியை வெளியிடும்போது, மிக சாமர்த்தியமாக  இந்த சர்ச்சை எதனால் வந்தது என்கிற விசயத்தை சொல்லாமல் மொட்டையாக சர்ச்சைக்குரிய வகையில் எழுதினார். எனவே, அதற்கு எதிர்ப்பு வந்தது என எழுதுவார்கள். வெகுமக்கள் மத்தியில் இந்த ’சர்ச்சைக்குரிய’ விசயத்தை சொன்னால் நமக்கும் எதிர்ப்பும் வரும் என்கிற சுயதணிக்கையே காரணம். ஆனால், தமுஎகச, தீக்கதிர் போன்ற முற்போக்கு-கடவுள் மறுப்பு-மதச்சார்பின்மையை ‘கொள்கை’யாகக் கொண்ட அமைப்பு-நாளேடு ஏன் சுயதணிக்கை செய்து கொள்கிறது? சுயதணிக்கை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு எழுத்தை எழுதிய எழுத்தாளருக்கு இவர்கள் ஏன் ஆதரவு தருவதாக சொல்கிறார்கள்?

இத்தகைய பாதுகாப்பான ‘கருத்துரிமைக்கான’ போராட்டம் என்பது நமது தோழர்களுக்கு முதல்முறையல்ல. “மாதொருபாகன்” நாவல் தொடர்பாக இந்துமதவெறியர்கள் எழுப்பிய பிரச்சினையில் பெருமாள் முருகனுக்காக “கருத்துச் சுதந்திரம்” என்றே தற்காப்புடன்தான் களமிறங்கினார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி, அதை உசுப்பிவிடும் இந்துமதவெறியர்களின் மதவெறி என்று குறிப்பாகச் சொல்வதை தவிர்த்தார்கள்.

கீழடியில் பூமி பூஜை, ஆந்திராவில் அம்மனுக்கு தீச்சட்டி, கேரளத்தில் இராமாயண பாராயணம், திருவண்ணாமலை தீபத்திற்காக சிறப்பிதழ் என வாக்கரசியல் சி.பி.எம் வகைப்பட்ட இடதுசாரிகளின் பரிணாமம் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஹரிஷ், பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற கேள்விக்கான பதிலை உளவியல் பூர்வமாகவும் பகுத்தறிவின் மூலமாகவும் தேட முயன்றிருக்கிறார்.

உளவியல் மருத்துவர் ஷாலினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதும், அலங்காரமாக உடை அணிவதும் ஆண்களை வசீகரிக்கவே. இதை தன்னை அறியாமல் செய்தாலும் உளவியல் பின்னணி இதுதான்’ என்று பேசியது இங்கே நினைவுகூறத்தக்கது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். எழுத்தாளர் ஹரிஷோ இந்த இனக்கவர்ச்சி நடவடிக்கைகளைத் தாண்டி அதை மதம் சார்ந்த பிற்போக்கு நடவடிக்கைகளை கண்டிப்பதற்கோ அல்லது சுட்டிக் காட்டுவதற்கோ பயன்படுத்துகிறார்.

ஒரு உளவியல் மருத்துவர் சொல்லத் துணிந்த சமூக யதார்த்தத்தை, புரட்சி செய்யப் போவதாகக் கூறும் சிபிஎம் கட்சியும் அதன் அமைப்புகளும் சொல்லத் தயங்குவது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்களை கோவிலில் அனுமதிப்பதில்லை. மற்ற நாட்களில் அனுமதிக்கிறார்கள். அப்படியானால் கோவிலுக்கு வருவது அல்லது வராததை வைத்து ஒரு பெண்ணை பாலியல் நோக்கில் ‘ஆண்கள்’ புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எவராவது சொல்ல முடியுமா? இல்லை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, பரிசீலிக்க கூடாது என்றால் மாத விடாய் நாட்களில் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதை மாற்ற வேண்டும். எல்லா பணிகளுக்கும் எல்லா நாட்களிலும் செல்லும் பெண்கள் கோவிலுக்கு மட்டும் எல்லா நாட்களிலும் செல்லக்கூடாது என்றால் அதுதான் ஆகப்பெரும் இழிவு அன்றியே எழுத்தாளர் ஹரிஷ் சுட்டிக் காட்டும் யதார்த்தம் அல்ல. பெண்ணை போகப் பொருளாக பார்ப்பனியம் கருதுவதாலேயே அந்த நான்கு நாட்களில் கோவிலுக்கு வரக்கூடாது என்று மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே ஒரு மூலையில் வைத்து வீட்டுசிறையில் அடைக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. இப்படி பல பொருளில் எழுத்தாளர் ஹரிஷ் எழுதிய அந்த உரையாடலை விவாதிக்க முடியும்.

இந்துக்களை ஒரேயடியாக விமரிசிக்க கூடாது, அப்படி விமரிசித்தால் ‘இந்துக்கள்’ நம்மை புறக்கணிப்பார்களோ என்ற தவறான தயக்கம் காங்கிரசு, தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இருப்பது போல சி.பி.எம் கட்சிக்கும் நிறையவே இருக்கிறது. இதுதான் சங்கிகளின் பலம். சிதம்பரம் தில்லை நடராசர் கோவில் போராட்டத்தை ம.க.இ.க – ம.உ.பா.மை எடுத்த போது பார்பனியம் என்ற சொல்லை பயன்படுத்துவதால் விலகுகிறோம் என்று சி.பி.எம் கட்சி கூட்டு நடவடிக்கையில் இருந்து விலகியது. ஆனால் இன்றைக்கு தமிழக சூழலில் சிபிஎம் தோழர்கள் நிறைய பேர் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதோ, சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்துவதையோ தொடர்ந்து செய்கிறார்கள். அத்தகைய மாற்றம் தொடரவேண்டும் என்றால் அவர்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும்.

பகுத்தறிவை நம்புகிற இயக்கம் அல்லது அமைப்பு, சமூகத்தின் உளவியலை ஆராய முனையும் ஹரிஷ் போன்ற எழுத்தாளர்களுக்கு ‘இன்னும் நீங்க நிறைய எழுதணும்’ என வெற்று வார்த்தைகளால் தைரியம் சொல்லாமல், அவர் என்ன எழுதினார் என்பதை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பத்தோடு பதினொன்றாக ஆதரவு கொடுப்பதற்கு முற்போக்கு இயக்கம் என்கிற பெயர் எதற்கு? சி.பி.எம் தோழர்கள் பரிசீலிக்க வேண்டும்.

– கலைமதி

செய்தி ஆதாரம்:

2 மறுமொழிகள்

  1. ஆர் எஸ் எஸ் திட்டமிட்ட சதி என்னவென்றால், ஒரு காட்சியையோ இயக்கத்தையே அழிக்கவேண்டும் அல்லது மக்கள் மத்தியில் சிறுமைப்படுத்தவேண்டும் என்றால், ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் உள்ள ஒரு ஆளை அந்த இயக்கத்துக்கும் அனுப்பி தவறை செய்யவைத்து, குறிப்பிட்ட இயக்கத்தை மக்கள் மத்தியில் தவறாக சித்தரிப்பது – மிகசிறந்த உதாரணம் பாபரி மஸ்ஜிதை இடிக்க துணைபோன காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் என்ற ஆர் எஸ் எஸ் உறுப்பினர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க