தெற்கு வீரபாண்டியபுரம் மகேஷ் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியாளர். மே 22 போராட்டத்தையொட்டி இவர் மீது 92 வழக்குகளைப் போட்டு சிறையில் வைத்திருந்தது தூத்துக்குடி போலீஸ்.
ஜூலை 24 அன்று மதுரை உயர்நீதிமன்றம் அத்தனை வழக்குகளிலும் அவருக்கு பிணை வழங்கியது. உடனே, மே 22 போராட்டத்துக்கு முன்னர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களுக்காக அவர் மீது போடப்பட்ட 3 வழக்குகளை தூசு தட்டி எடுத்து, அவற்றில் அவரை ரிமாண்டு செய்து, சிறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தடுத்தது. இரண்டு வழக்குகளில் 24 அன்றே உயர்நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்றோம்.
ஆனால், ஜுலை 24 அன்று மாலையே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பதாக உத்தரவிட்டார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இது வெளிப்படையான அதிகார முறைகேடு. இவ்வாறு தடுப்புக்காவல் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என பல தீர்ப்புகள் இருந்தபோதும் மகேஷ் மீது மிகுந்த வன்மத்துடன் குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இந்த சட்டவிரோதக் காவலை எதிர்த்து 26-ஆம் தேதி அன்றே மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் அழகுமணி, வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர். ஓரு மாதத்துக்கும் மேலாக ஒருவரை சிறையில் வைத்து விட்டு, அவர் பிணையில் வரும் நேரத்தில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுகாலம் சிறைவைக்க முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோதம் என்ற வாதத்தை ஏற்று உடனடியாகவே மகேஷுக்கு எதிரான குண்டர் சட்ட தடுப்புக்காவலை ரத்து செய்தது, நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு.
“ஒரு ஆண்டு காலத்துக்கு ஒருவரை விசாரணையே இல்லாமல் சிறை வைக்க வேண்டும்” என்பதுதான் குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களின் நோக்கம். இவ்வாறு சிறை வைக்கப்படுபவர்களை விடுவிப்பதெனில் எத்தனை விரைவாக முயற்சித்தாலும் ஓரிரு மாதங்களாவது ஆகும். இரண்டு நாட்களில் விடுதலை என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.
சாதாரணமாக இது நடந்துவிடவில்லை. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் அசாத்திய வேகத்துடனும், போலீசின் சதியை முறியடிக்கின்ற முனைப்புடனும் பணியாற்றியிருக்கின்றனர்.
ஜூலை 20 ஆம் தேதியன்றே மகேஷ், அவரது சகோதரர் ராஜ்குமார், மக்கள் அதிகாரம் அமைப்பின் சதீஷ், முருகேஷ், நாம் தமிழர் கட்சியின் வியனரசு ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை பெறப்பட்டு விட்டது. மே 22 போராட்டம் தொடர்பான எல்லா வழக்குகளிலும் பிணை வழங்குவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிணை கிடைத்ததை தூத்துக்குடி போலீசால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. தூத்துக்குடி எஸ்.பி முரளி ரம்பா உடனே நீதித்துறை நடுவரிடம் டி.எஸ்.பியை அனுப்பினார். மே 22 போராட்டம் தொடர்பான வழக்குகளுக்கு மட்டும்தான் பிணை தரப்பட்டுள்ளது. மே 22 க்கு முன் மகேஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு பிணை கொடுக்க கூடாது என்றது போலீசு. நீதித்துறை நடுவரும் ஏற்றுக்கொண்டார்.
உடனே மே 22 க்கு முன் மகேஷ் மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகளில் ம.உ.பா மைய வழ்க்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை எடுத்தனர். இன்னொரு பழைய வழக்கு இருப்பதாக சொன்னது போலீசு. அந்த வழக்கையும் தேடி எடுத்து அதற்கும் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆம் தேதியன்று அதற்கும் பிணை கிடைத்து மகேஷ் வெளியே வந்து விடுவார் என்ற நிலையில், 24 மதியம் அவசரம் அவசரமாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.
24 ஆம் தேதியன்று மாலையே அந்த உத்தரவை சிறையிலிருந்த மகேஷிடமிருந்து வாங்கிய நெல்லை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் அதனை தூத்துக்குடி வழக்கறிஞர் குழுவுக்கு அனுப்பினர். 45 பக்கங்கள் கொண்ட அந்த தடுப்புக்காவல் உத்தரவு இணையம் வழி உடனே மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்று இரவே அதற்கு எதிரான வழக்கு தயாரானது. மறுநாள் குமரெட்டியாபுரத்திற்கு நேரே சென்று மகேஷுடைய மனைவியிடம் வக்காலத்திலும் பிரமாண பத்திரத்திலும் கையெழுத்து பெற்று 26 ஆம் தேதி வியாழன் அன்றே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் இடப்பட்டு, 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.
43 நாட்கள் ஒருவரை விசாரணைக்கைதியாக சிறை வைத்து விட்டு, பிணையில் வெளியே வரும்போது, தடுப்புக்காவலில் கைது செய்வது சட்டவிரோதம் என்று கூறி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போதே குண்டர் சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம். பதிலளிப்பதற்கு இரண்டு வாரம் அவகாசம் வேண்டுமென்று அரசு தரப்பு வாய்தா கேட்ட போதிலும், நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இனி எஞ்சியிருக்கும் ஒரு வழக்கில் திங்களன்று மகேஷுக்கு பிணை கிடைத்துவிடும். சிறையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பிணையில் எடுத்து விட்டது. மீதமிருப்பவர்களையும் விரைவிலேயே பிணையில் எடுத்து விடுவோம்.
நேரடியாக சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, பிணையில் வெளியே வரவே முடியாது என்று அஞ்சும் வகையில் அடுக்கடுக்காக பொய் வழக்குகளையும் போடுகிறது போலீஸ். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் இனி போராடுவதற்கு வரக்கூடாது என்பதுதான் இந்த பொய் வழக்குகளின் நோக்கம். இந்த பொய் வழக்குகளுக்கு அஞ்சாமல் மக்கள் போராட முன்வர வேண்டும் என்பதுதான், கட்டணமில்லாமல் நீதிமன்றத்தில் மக்களுக்காக வழக்கு நடத்தும் எங்களது வழக்கறிஞர்களின் நோக்கம்.
*****
மகேஷ் இந்தப் போராட்டத்தின் முன்னணியாளர். இவர் தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலைக்காக குமரெட்டியாபுரத்தில் போர்வெல் தோண்டத் தொடங்கிய நாள் முதலாக அதனை எதிர்த்துப் போராடி வருபவர். குமரெட்டியாபுரம் மகேஷ் என்று அழைக்கப்படும் அளவுக்கு இந்தக் கிராமத்து மக்களோடு போராட்டத்தில் இணைந்தவர். இவர் மட்டுமின்றி இவரது சகோதரர் ராஜ்குமார் மீதும் 120 வழக்குகளைப் போட்டிருக்கிறது போலீஸ். இன்னொரு சகோதரரையும் தேடி வருகிறது. மகேஷின் அம்மாவும் போராட்டத்தின் முன்னணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் மகேஷுக்கு சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது. இந்த மார்ச் மாதத்தில் குழந்தை பிறந்து விட்டது. ஆனால் பெயர் சூட்டு விழா நடத்த நேரமில்லாமல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மகேஷைப் போன்ற எண்ணற்ற இளைஞர்கள், பெண்களின் உணர்வுபூர்வமான பங்கேற்புதான் தூத்துக்குடி போராட்டம் மாபெரும் மக்கள் எழுச்சியாக உருப்பெற்றதற்குக் காரணம். “சமூக விரோதிகள் தூண்டினார்கள், தீவிரவாதிகள் தூண்டினார்கள், மக்கள் அதிகாரம் தூண்டியது” என்றெல்லாம் கதை அளந்தாலும், மகேஷைப் போன்ற முன்னணியாளர்கள் வெளியில் இருக்கும்வரை ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்ற காரணத்தினால்தான் இவர்களைக் குறி வைத்து வழக்குகளைப் போடுகிறது தமிழக அரசு.
மகேஷ் என்ற இந்த சமூகப்பொறுப்பு மிக்க இளைஞரைப்பற்றி, மாவட்ட ஆட்சியர் என்ன சொல்கிறார் என்பதை அவரது தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து பார்ப்போம்.
“தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச்சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொளித் திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1982 , பிரிவு 2 (f) இன் படி” மகேஷ் என்கிற மகேஷ்குமார் என்பவர் ஒரு “குண்டர்” என்றும், அவரை தடுப்புக்காவலில் வைப்பது “அத்தியாவசியமான அவசியம்” என்றும் தான் “மனமாறக் கருதுவதாகவும்” கூறியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
குண்டர் சட்டத்தின் பட்டியல் குறிப்பிடுகின்ற அனைத்து குற்றங்களையும் அன்றாடம் இழைப்பவர்கள் அமைச்சர்களாகவும், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும் இருப்பதால், மகேஷ் போன்றவர்களை தடுப்புக்காவலில் வைப்பது அத்தியாவசியமான அவசியம் என்று மாவட்ட ஆட்சியரும், போலீசும் இவர்களது ஸ்டெர்லைட் எசமானர்களும் மனமாறக் கருதுவதில் வியப்பென்ன இருக்கிறது?
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு
(பின் குறிப்பு: இச்செய்திப் பதிவு, பிரசுரிக்கப்பட்ட பின்னர் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன)
மகேஷை உடனடி சட்டத்தின் உதவிக் காெண்டு வெளிக்காெணர்ந்த இயக்க வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள் …! உரிமைக்காக பாேராடுபவர்கள் மீது பாேடுகின்ற ஜாேடிக்கப்பட்ட வழக்குகளை வாதாடி நீதியை நிலை நிறுத்த நமக்கு உதவிபுரிய இயக்கத்தினர் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படுத்தியவர்களுக்கு ..நன்றி ..!!
அதிகாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடே குண்டர் சட்டம்.