கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம் !
பு.மா.இ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி

தோழர் சுரேந்தர்

ல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் மசோதாவை எதிர்த்து புமாஇமு சார்பில் திருச்சி ஜங்க்சன் விக்னேஷ் ஹோட்டல் அருகில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் புமாஇமு மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்தர் தலைமை தாங்கினார். மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புமாஇமுவைச் சேர்ந்த தோழர் கபில் கண்டன உரையாற்றும் போது ”யூஜிசி-யைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருப்பதன் நோக்கம், தனியார் கையில் ஒட்டுமொத்தக் கல்வியையும் ஒப்படைத்து, ஏழை மாணவர்களை கல்வியிலிருந்து ஒதுக்கி வைப்பதேயாகும்.

தோழர் கபில்

அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் கட்டுப்பாட்டின் கல்வியைக் கொண்டு வருவதே அதன் நோக்கம்.  மாணவர்களின் எழுச்சி மட்டுமே இதனை மாற்றுவதற்கான வழி” என்று பேசினார்.

தி.க மாணவர் அணியின் மாநில துணைத் தலைவர் தோழர் அஜிதன் பேசுகையில், ”மாணவர்களுக்கான  கல்வி உதவித்தொகையை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சி இது. இதன் மூலமாக குலத்தொழிலை மீண்டும் திணிக்கத் திட்டமிடுகிறது அரசு. இதனை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

தோழர் அஜிதன்

அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தோழர் பாட்ஷா பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் போராடினாலும் மத்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து அதிக அழுத்தம் தரும் வகையில் மாணவர் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசுகையில், “யூஜிசியைக் கலைப்பது ஒரு சமூகத்தையே தற்குறியாக்குவதற்கு சமமானது. கல்வித்துறையில் கார்ப்பரேட்களின் கொள்ளையை உறுதி செய்ய மோடி அரசால் கொண்டு வரப்பட்ட முயற்சி இது.

1956-ல் இந்தியாவில் உயர்கல்வியை விரிவுபடுத்த மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட தன்னாட்சி அமைப்புதான் யூ.ஜி.சி. தற்போது அதனை ஒழித்துவிட்டு கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணையம், முழுக்க முழுக்க கல்வியாளர்கள் யாரும் உறுப்பினராக இல்லாமல், 8 அதிகாரிகள் மற்றும் அவர்கள் தேர்வு செய்யும் தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு அமைப்பாகவே இருக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம். அவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் அனில் அகர்வாலாகக் கூட இருக்கலாம்.

தோழர் கணேசன்

கடந்த 2000-ம் ஆண்டு அம்பானி, பிர்லா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, யூஜிசியைக் கலைத்துவிட்டு கல்வியை தனியார் கையில் கொடுத்து விடலாம் என பரிந்துரைத்தது. இன்று அதனை மோடி அரசு செய்து முடித்திருக்கிறது. இதனை முறியடிக்க பெற்றோர் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து போராட வேண்டும்.”- என்றார்.

இறுதியாக பு.மா.இ.மு தோழர் சுரேஷ் நன்றியுரையாற்றினார். அதில் மோடி அரசின் மோசடியை கேள்வி கேட்பவர்கள் அனைவரும் நக்சல்கள் என்றால் நாங்கள் அனைவருமே நக்சல்கள்தான் எனக் கூறினார். சுற்றி நின்ற மாணவர்களும், நாங்களும்தான் என்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

*****

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம்!
பு.மா.இ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் – விருத்தாசலம்

”கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம்” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருத்தாசலம் பாலக்கரையில் புமாஇமு விருத்தாசலம் மாவட்ட அமைப்பாளர் தோழர் மணியரசன் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்ட்டத்தை நடத்தினார். மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

புமாஇமு-வின் செயற்குழு உறுப்பினர் தோழர் யுவராஜ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் தோழர் மணிவாசகம், விருதாச்சலம் மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விருதை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க