பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !

சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையின் சாரம் இங்கு கட்டுரையாகவும் காணொளியாகவும் தரப்பட்டுள்ளது.

நீதிபதி அரி பரந்தாமன்
நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு)

இன்று சட்டக் கல்வியின் நிலை, பொதுக் கல்வியின் நிலை என்னவோ அதுவாகத் தான் இருக்கிறது. அதாவது வியாபாரமயமாக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் நிறைய தொடங்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, இங்கு இருக்கும் அரசு சட்டக் கல்லூரிகளை மூடுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடிவிட்டு திருவள்ளூருக்கு வெளிப்புறம் மாற்றப் போவதாகச் சொல்கிறார்கள்.

இதனை மூட வேண்டும் என்பது அரசாணையில் கூட குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம்தான் சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றத்தை நம்பி பலனில்லை. உங்கள் போராட்டம், நீதிமன்றத்தில் இருந்தால் அதற்கு எவ்விதப் பலனும் கிடையாது. இந்த கோர்ட் என்பது இன்று இராணுவமயமாக்கப்பட்டதாக இருக்கிறது. யார் உள்ளே செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் வரிசையில் நின்று செல்ல வேண்டியது இருக்கிறது. இது தமிழகத்திற்கு மட்டுமே உள்ள அவலம்.

அதே போல தமிழக வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக 50-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.  இதுவும் தமிழகத்தில் மட்டும்தான் நடந்திருக்கிறது. மேலும் ஒரு சட்டக் கல்லூரி மாணவர் மீது ஒரு முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அவர் வக்கீலாக பதிவு செய்ய முடியாது என்று புதிய விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் தமிழகத்திற்கு மட்டும்தான். ஏன் இதை எம்.எல்.ஏ.-களுக்கோ, எம்.பிகளுக்கோ வைக்க வேண்டியதுதானே ? அவ்வளவு ஏன், வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு விதிமுறை இல்லை.

சாராயக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் வழக்கு போட்டால், இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என நீதிமன்றம் விலகிக் கொள்கிறது. இப்படி மக்கள் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் நீதிமன்றங்கள் ஒதுங்கி நிற்கையில், இத்தகைய பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை, வெறுமனே நீதிமன்றத்தில் போய் தீர்க்க முடியாது.

பெரியாரும் அம்பேத்கரும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க நீதிமன்றத்திற்கு போகவில்லை. சரி அவர்கள்தான் கலகக்காரர்கள் என்று வைத்துக் கொண்டால், காந்தியும் நேருவும் வழக்கறிஞர்கள் தானே. அவர்கள் யாருமே சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க  நீதிமன்றம் செல்லவில்லை. களத்தில் தான் சந்தித்தார்கள். ஆகவே போராட்டக் களம் என்பதுதான் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடமேயன்றி நீதிமன்றம் அல்ல.

யூ-டியூப் காணொளி:

  • வினவு களச் செய்தியாளர்

1 மறுமொழி

  1. திரு அரிபரந்தமனின் கருத்துக்களிலுள்ள அடிப்படையினை வழக்கறிஞர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ளவேண்டும். அவர் சொன்னது சட்டக்கல்லூரிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் பொருந்தும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க