திருப்பூர் தாராபுரம் அருகே குண்டடம் வண்ணாம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 11 வயதில் ராஜலட்சுமி என்ற மகளும், 4 வயதில் மாணிக்க சத்திய மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

முத்துச்சாமி தனது குடும்பத்தினருடன் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அங்கேயே குடிசை வீடு போட்டு குடும்பத்துடன் விவசாயத்தை பார்த்து வந்திருக்கின்றனர். உதவிக்காக தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயர் மயிலாத்தாள் ஆகியோரையும் உடன் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

 விவசாயி தற்கொலை
பத்திரிகைகளில் வெளியான செய்தி

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போகவே, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கிறார். மீண்டும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்தில் கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முத்துச்சாமியின் மனைவி செல்வி திருப்பூர் அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் வங்கி மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மிகுந்த மன உளைச்சலில் முத்துச்சாமி இருந்திருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கடன்காரர்கள் வந்து கடனை கேட்டு நெருக்கும் போது அவமானம் தாங்க முடியாமல், முத்துச்சாமியின் மனைவி செல்வி தனது பெற்றோர் வசிக்கும் ரங்கபாளையம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.

இதையடுத்து முத்துச்சாமி தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் கெத்தல்ரேவ் என்ற கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாத நிலையில் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறி விடலாம் என பேசியிருக்கின்றனர்.

 விவசாயி தற்கொலை
குடும்பத்தோடு தற்கொலை – புகைப்படம் மங்கலாக்கப்பட்டுள்ளது)

இந்நிலையில் நேற்று இரவு வயதின் காரணமாக நடமாட முடியாத தந்தை வேலுச்சாமியை மட்டும் விட்டு விட்டு, அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் ராஜலட்சுமி, மகன் மாணிக்க சத்தியமூர்த்தி ஆகியோரை முத்துச்சாமி வீட்டிற்குள்ளே தூக்கிட்டுள்ளார்.

அதன் பின்னர் தனது தாய் மயிலாத்தாளுடன் தானும் வீட்டிற்கு வெளியில் இருந்த வேப்பமரத்தில் ஏணியை போட்டு ஏறி, அதில் தூக்கு கயிற்றை மாட்டி அதிலிருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அதிகாலையில் முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி எழுந்து பார்த்த போது தனது மனைவி, மகன், பேரன், பேத்தி ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது ஊரை கூட்டியிருக்கிறார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டு விட்டு வெளிநாடுகளில் உல்லாசமாக திரிகின்றனர். வழியனுப்பி வைத்த ஆட்சியாளர்கள் விமானத்தில் போய் நலம் விசாரித்து வருகின்றனர்.

டாடா, அதானி, அம்பானிகள் போன்ற முதலாளிகள் பல்வேறு சலுகைகள் பெயரில் மக்கள் சொத்தை மானியமாக பெற்றுக் கொண்டு இலாபம் குவிக்கையில், சாதாரண ஏழை விவசாயிகள் தூக்கிட்டுச் சாவதுதான் விதியா? ஒரு குடும்பமே இப்படி தமது வாழ்க்கையை அழிப்பது அவர்களுடைய தோல்வியா? இல்லை உழைத்து வாழ்வதற்கு கூட இந்த நாட்டில் வழி இல்லை எனும் நிலை ஏற்படுத்திய இந்த அரசமைப்பின் தோல்வியா?

தகவல்: மக்கள் அதிகாரம், திருப்பூர்.
தொடர்புக்கு: 99658 86810