நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?

பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

ரலாறு கற்றுத்தரும் பாடங்களை உள்வாங்குவது மிக அவசியம் ஆகும். இந்து மதவாதம் மற்றும் முஸ்லிம் மதவாதம் காரணமாக இந்திய தேசம் பிரிவினைக் கொடுமைக்கு ஆளாகியது. பிரிவினை துயரங்களும் அந்த பிரிவினையை எதிர்த்துப் போராடிய அனுபவமும் சோகமான, ஆனால் முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளன. அந்த படிப்பினை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக்கூடாது.

பிரிவினையின் துயரங்கள் கணக்கற்றவை. உலகில் எத்தனையோ தேசங்கள் பிரிந்துள்ளன. செக்கோஸ்லேவாகியா செக் எனவும் ஸ்லோவாகியா எனவும் பிரிந்தன. சோவியத் ஒன்றியத்திலிருந்து பல குடியரசுகள் பிரிந்தன. யூகோஸ்லேவியா பல குடியரசுகளாக சிதைந்தது. சூடான் இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினைகளில் சில பின்விளைவுகளை உருவாக்கின. ஆனால், எந்த பிரிவினையும் இந்திய பிரிவினையை போல துயரங்களை விளைவித்தது இல்லை…

பிரிவினையின் சில அம்சங்கள் திரும்ப திரும்ப இந்த தேசத்தின் மீது தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளன. குறிப்பாக இந்து – முஸ்லிம் மக்களின் உறவில் இது ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எப்பொழுதெல்லாம் மதவாதம் தீவிரம் காட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரிவினை தொடர்பான விவாதங்களும் வேகம் எடுக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்களின் தேசபக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது…….

பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? அல்லது அதற்கான  புறச்சூழல்கள் இருந்தனவா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினையை எதிர்த்த குரல்கள் குறிப்பாக முஸ்லிம் குரல்கள் இருந்தனவா? அவை ஏன் வெற்றிபெறவில்லை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கும் சிறிய முயற்சிதான் இந்த நூல்.

– முன்னுரையிலிருந்து,

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களால் சித்தரிக்கப்பட்ட 1857 ஆயுத எழுச்சியில் மத – மொழி வேறுபாடின்றி தங்களை எதிர்கொண்டதை நன்கு உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக்கியது. ஒருபுறத்தில் இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடுகள்; பல்வேறுபட்ட மொழி வேறுபாடுகள்; அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்டு சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டு காலனி ஆதிக்க வாதிகள் தமது பிரிவினை நாடகத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர்.

1930-களில் வெளிப்படத் துவங்கிய தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காங்கிரஸ், முஸ்லீம் லீக் என இந்த இடைவெளியைப் பெருக்கிக் கொண்டே போனது. மறுபுறத்தில் இந்து மகாசபை, சமஸ்தான மன்னர்கள் என இந்து மத வெறியர்களும் இதற்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருந்தனர்.

முதலில் அது 1935-ஆம் ஆண்டில் பீகார் பகுதியிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரிசா என்ற மாநிலத்தை மொழி அடிப்படையில் உருவாக்கியது. பின்பு 1936 ஆம் ஆண்டில் சிந்த் பகுதியை மும்பை ராஜதானியிலிருந்து பிரித்து மத அடிப்படையில் வடமேற்கு மாகாணத்தை உருவாக்கியது. அதைப் போன்று பலுச்சிஸ்தான் உள்ளிட்டு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பகுதிகளையும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள எட்டு பகுதிகளையும் இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக உருவாக்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து 1937 இல் இந்தியாவிலிருந்து பர்மாவை முற்றிலுமாகப் பிரித்தது. இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அதை தனியொரு பிரிட்டிஷ் காலனியாக பிரித்திருப்பதாகவும் அதற்குக் காரணம் கூறியது. இது பின்னாளில் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றே கூறலாம்.

– டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்.

பிரிவினையின் பெரும் துயரங்கள்; பிரிவினையை இலட்சியமாக முன்வைத்த முஸ்லிம் லீக்; பிரிவினை கருத்துக்களை விதைத்த சங்பரிவாரம்; சவார்க்கரை அம்பலப்படுத்தும் அம்பேத்கர்; மத ஒற்றுமையைப் பறைசாற்றிய சில நிகழ்வுகள்; மத்திய காலம் – மத மோதலா? மத ஒற்றுமையா?; இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி பற்றிய ஒரு சமூக மதிப்பீடு; பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய போராட்டங்களும் மத ஒற்றுமையும்; இந்து – முஸ்லிம் மதவாத அரசியலின் தொடக்கம்; பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகள்; பிரிவினை எதிர்ப்பு கருத்து ஏன் தோல்வி அடைந்தது? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் அவசியமான புகைப்படங்களுடனும் விரிவான விளக்கங்களை அளிக்கிறார், நூலாசிரியர்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: தேசப்பிரிவினைக்கு காரணம் யார்?
முஸ்லீம மதவாதமா? இந்து மதவாதமா?
ஆசிரியர்: பாரத் கபீர்தாசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 2433 2424, 2433 2924.

பக்கங்கள்: 112
விலை: ரூ.100

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க