ஊழலுக்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி

ஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்.

மோடி ஆட்சியின் மீது ஒரு ஊழல் புகார் கூற முடியுமா என சவடால் அடிக்கின்றனர் பாஜகவினர். ஆனால் மோடி ஆட்சியின் கீழ்தான் இந்தியாவில் இதுவரை நடக்காத மிகப்பெரிய ஊழல்கள் நடைபெறுகின்றன. இந்திய விமானப்படைக்கு ரஃபேல் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. ஏற்கனவே பாஜக-வில் முக்கியப் பதவிகளில் இருந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோரே சொல்கின்றனர். இது ஒரு புறமிருக்கட்டும்.

உச்சநீதிமன்றத்தின் சமூக நீதி அமர்வில், இந்தியாவில் பெருகிவரும் பெண்கள் மீதான வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விவாதத்தின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.

மோடியின் ஊழல்கள் - மக்கள் அதிகாரம் காளியப்பன் அம்பலப்படுத்துகிறார்
அரசு தலைமை நீதிபதி கே.கே. வேணுகோபால்

இந்தியாவில் கனிம வளங்கள் உள்ளிட்ட தொழில்துறை வளங்களை கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலமிட்டுக் கொடுக்கும் போது, ஏதேனும் விதிமீறல்கள் இருப்பதாக யாராவது பொதுநல வழக்கு தொடுத்தால், அதனை முன்வைத்து உச்சநீதிமன்றம் மொத்த ஏலத்தையும் ரத்து செய்து விடுகிறது. இதன் காரணமாக தொழில்துறை பின்னடைவும், மத்திய அரசுக்கு வருமான வீழ்ச்சியும் ஏற்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருமானம் குறைகிறது. மேலும் நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஏற்படுதன் காரணமாக அவற்றின் விலைவாசி உயர்ந்து சாதாரண மக்களைப் பாதிக்கிறது என்று வாதிடுகிறார் கேகே வேணுகோபால் வாதம். இதன் காரணமாக உச்சநீதிமன்றம் இது போன்ற அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித்தரும் திட்டங்களில் உச்சநீதிமன்றம் மூக்கை நுழைக்கக் கூடாது என மிரட்டுகிறார், கே.கே.வேணுகோபால்.

நீதித்துறையை மிரட்டுவது பாஜகவிற்குப் புதியதல்ல. தமது ஆதரவாளர்களையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் நீதித்துறையில் நியமித்துவருகிறது. தமக்கு ஒத்துவராதவரகள் வர நேர்ந்தால் அவர்களை ஓரங்கட்டவும், அவர்களை மூப்புப் பட்டியலில் தாழ்த்தி வைக்கவும் தம்மாலான அனைத்து வேலைகளையும் பகிரங்கமாகச் செய்கிறது.

இதற்கு, இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் உரிமையை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு என்ன உத்திரவாதம் கொடுக்கும்? என நீதிபதி லோக்கூர் கேட்கும்போது, அது மாநில அரசின் பிரச்சினை. மத்திய அரசு வழிகாட்டுதல்தான் கொடுக்கமுடியும் என்று மத்திய அரசை பொறுப்பில் இருந்து விடுவிக்கிறார் கே.கே.வேணுகோபால்.

தமக்கு வேண்டிய கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி இந்த நாட்டின் இயற்கை வளங்களை வாரிக் கொடுக்க இடையூறு எதுவும் இருக்கக் கூடாது, அப்படி வந்தாலும் அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட வேண்டும் என மறைமுகமாக மிரட்டுகிறார் கே.கே. வேணுகோபால்.

கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக இவர்கள் நீதித்துறையையே மிரட்டுகிறார்கள் என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? ஜனநாயகத்தின் குரல் வளையை இறுக பற்றி நெறிக்கிறது மோடி அரசு என்பதை இந்தக் காணொளியில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க