ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக கடந்த மே மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பொதுமக்களில் 13 பேர்களைச் சுட்டுக் கொன்றது போலீசு. அதன் பிறகு நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு, சிறை. மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது கடும் அடுக்குமுறை ஏவிவிடப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு, அரசு மீது இருந்த கோபத்தை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு ஒன்றரை பக்கத்தில் உத்தரவு பிறப்பித்தது. அப்போதே பலரும் இந்த தடை என்பது ஏமாற்று, அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றனர். ஏனெனில் இதற்கு முன்னரும் இத்தகைய தடைகளை நீதிமன்றம் சென்று ஆலையை திறந்திருக்கிறது ஸ்டெர்லைட்.
தற்போது தமிழக அரசு விதித்த உத்தரவுக்கு தடை கோரியும், மூடப்பட்ட ஆலையை திறக்க அனுமதி கேட்டும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பாயத் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரமும், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மோகனாவும் வாதிட்டனர். ஆலையால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்ய ஆலையை இயக்க அனுமதி கேட்டார் அரிமா சுந்தரம். தமிழக அரசு வழக்கறிஞரோ இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலையால் ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கை அளிக்க 10 நாள் அவகாசம் கேட்டார். இதிலிருந்தே தமிழக அரசு ஸ்டெர்லைட் குறித்து எத்தகைய அலட்சியத்தில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
இந்த வாதங்களுக்குப் பிறகு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்தக் குழுவில் மத்திய வனம் – சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் இருவர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் இடம்பெறுவார்களாம். இரண்டு வாரத்தில் குழு அமைத்து நான்கு வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டுமென மேற்கண்ட உத்தரவு கூறுகிறது.
இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இடம்பெறக்கூடாது என ஸ்டெர்லைட் ஆலை வழக்கறிஞர் வாதாடினார். தீர்ப்பாயமோ இது குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவெடுப்பதாக கூறியிருக்கிறது.இந்த உத்தரவு குறித்து நேற்று 20, ஆகஸ்டு, 2018 அன்று நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. அதில் ஸ்டெர்லைட் சார்பில் அதன் துணைத் தலைவர் அடைமொழியுடன் சுமதி என்பவர் தில்லியில் இருந்து கலந்து கொண்டார்.
விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன் முன்னே உள்ள லேப்டாப்பில் யாரோ தட்டச்சு அனுப்பிய பதில்களை நிறுத்தி நிதானமாக படித்தார் அந்த அம்மையார். மற்ற பங்கேற்பாளர்கள் நேரடியாக பேசும் போது தான் மட்டும் இப்படி ஒரு செட்டப்பில் அதுவும் பார்ப்போர் கண்டுபிடிக்கும் அளவு – ஒரு முழுமையான வாக்கியத்தில் இரண்டு மூன்று பிரேக் போட்டு சில விநாடிகள் நிறுத்தி – மோசடி செய்தார் அவர். ஒரு நேரலை விவாதத்தில் கூட இப்படி கோல்மால் செய்யும் வேதாந்தா நிஜத்தில் என்னென்ன செய்யும்?
மேலும் பொதுத்தேர்வில் மாணவர்கள் யாரும் காப்பி அடிக்க கூடாது என்று கடுமையாக சோதிப்பார்கள். அதே போன்று தொலைக்காட்சிகளில் இப்படி செட்டப் செய்து காப்பி அடித்து விவாதங்களில் பங்கேற்போரை தடை செய்யாமல் ஊக்குவிப்பது சரியா?
தொலையட்டும். சொந்த புத்தி இல்லாத அந்த அம்மையார் இப்படி ஸ்க்ரூ கொடுத்த பொம்மை போல பேசுவது அவரது ’உரிமை’. அதில் பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கும் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி கூடாது என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் வாதாடியதற்கு அவர் சொன்ன சாக்கு முக்கியமானது. அதாவது 13 பேர் கொல்லப்பட்டதால் தமிழ்நாட்டில் “எமோஷனல் பாண்ட்’” உணர்ச்சிகரமான பிணைப்பு அதிகம் இருப்பதால் வேறுமாநில நீதிபதிகளை கோரியதாக கூறினார் சுமதி.
இத்தகைய அயோக்கியத்தனத்தை நெறியாளர் குணசேகரனோ இல்லை சி.பி.எம்.மின் கனகராஜோ பொருத்தமாக கண்டிப்பதோ, சுட்டிக் காட்டுவதோ செய்யவில்லை.
13 பேர்களை அநியாயமாகச் சுட்டுக் கொன்ற போலீசு, அரசு, வேதாந்தா மீது தமிழக மக்களுக்கு பெருங்கோபம் இருப்பது உண்மையே! ஆனால் சுற்றுச்சூழல் அல்லது ஆலை மாசுக்கெதிராக போராடிய மக்கள் கேள்விக்கிடமின்றி சுட்டுக் கொன்றதில் இருந்தே தெரிகிறது இங்கிருக்கும் அரசு மற்றும் போலீசோடு வேதாந்தாவுக்கிருக்கும் பாசப்பிணைப்பு!
சரி இதே போல சுமதி எனும் இந்த அம்மையாருக்கு ஸ்டெர்லைட் ஆலையோடு பிணைப்பு இல்லையா? சில பல இலட்சங்களை மாதம் ஊதியமாக பெறுவதற்காகத்தானே இப்படி கூவுகிறீர்கள்? இந்த “money bond” குறித்து நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். அல்லது வேதாந்தா எனும் நிறுவனத்திற்கு தூத்துக்குடியில் இருப்பது வர்த்தகம் இலாபம் எனும் பொருளாதார பிணைப்புதானே? நீங்கள் என்ன தாமிரத்தை உருக்கும் அறிவியல் சோதனைகளுக்காகவா தூத்தக்குடி வந்தீர்கள்?
சரி, பசுமைத் தீர்ப்பாயம் எனும் அமைப்பு இந்திய அரசுக்கு கட்டுப்பட்டதுதானே? அவ்வகையில் இந்திய அரசாங்கத்தை வைத்திருக்கிற மோடி அரசின் பா.ஜ.க. கட்சிக்கு வேதாந்தா குழுமம் கிட்டத்தட்ட 15 கோடிரூபாய் நன்கொடையை கொடுத்திருக்கிறதே? அவ்வகையில் இந்த தீர்ப்பாயமும் கூட வேதாந்தா எனும் நிறுவனத்தோடு அரசியல் பிணைப்பு உள்ளது என நாங்கள் ஏன் கூறக்கூடாது? இதனால் இந்தப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிப்போம் என்றால் அதற்கு நீங்கள் தயாரா?
தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியமோ, இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ இந்த நாட்டின் அரசு அமைத்த அமைப்புக்கள்தானே? அதில் தமிழ்நாட்டு வாரியத்தை நாங்கள் நம்பமாட்டோம் என்றால் நீங்கள் அதாவது இந்தியாவை – இந்திய ஜனநாயக அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து மானசீகமாக பிரித்து விட்டீர்கள் என்றே பொருள்! இல்லையென்றால் தமிழக நீதிபதியைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?
இப்படியாக வேதாந்தா குழுமம் தமிழக அரசு எனும் பா.ஜ.க அடிமையைக் கொண்டு சட்டப்பூர்வமாகவே மோசடி செய்து ஆலையை திறக்க எத்தணிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் இன்னும் முடியவில்லை!
- வினவு செய்திப் பிரிவு.
//இந்தப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிப்போம் என்றால் அதற்கு நீங்கள் தயாரா?//
சரியான கேள்வி.