ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம், சமகாலத்தில் மிகமுக்கியமான வரலாற்று பதிவாகும். லட்சக்கணக்கான மக்கள் அமைதியாக நடத்திய போராட்டம் ரத்தச்சகதியில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அத்துடன் 200-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டும், 1000-க்கும்அதிகமானோர் கிரிமினல்களைப் போல தேடப்பட்டும், முக்கியமாக கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், சிறை வைக்கப்பட்டனர். 22.05.2018 நாளின் ஒரே சம்பவத்திற்காக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் 50 முதல் 100 வழக்குகள் என மக்கள் மீதான அடக்குமுறையும், மனித உரிமை மீறல்களும் கணக்கில் கொள்ள முடியாதவை.

PRPC chennai seminarஅதேவேளையில், மக்கள் மீது ஏவப்பட்ட இந்த அடக்குமுறையை எதிர்த்த, வழக்கறிஞர்களின் சட்டப்போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள், காவல்துறையின் சட்டவிரோத ‘முற்றுகையை’ தகர்த்ததில் துவங்கி, கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிறப்பு மருத்துவர் குழு மூலம் பரிசோதனை செய்வது, காவல்துறையால் பீதியூட்டும் வகையில் பதிவு செய்யப்பட்ட 200 மேற்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு பெற்றது, சட்டவிரோத கைதுகள், மிரட்டல்களை முறியடித்தது, NSA, குண்டர்சட்டம் போன்ற தடுப்புக்காவல் அடைப்புகளை தகர்த்தது, கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கு துணைநின்றது, தமிழக காவல்துறையின் ஒருதலைபட்சமான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றியது என வழக்கறிஞரின் பணி மக்கள் போராட்டத்தின் நிழல்போல் பின் தொடர்ந்தது என்றால் மிகையல்ல.

போராடும் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் நமது சட்டப்போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. தூத்துகுடியில் மட்டுமல்ல ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறலை எடுத்துப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி, நீதிமன்றம் சிறையிலடைக்க மறுத்ததால், ஒன்றன்பின் ஒன்றாக 24 பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது UAPA என்ற கருப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும்,  எட்டு வழிச் சாலைக்கு எதிராக யார் பேசினாலும் கைது என்பதான ’சட்டத்தின் ஆட்சியல்ல, இது போலிசின் ஆட்சி’ என்ற ஆபத்து பெறுகிவரும் காலத்தில் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் ஒன்றாய் இணைவதும், மக்களுடைய போராடும் உரிமையை காப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது.

தற்போது வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் முயற்சி எடுத்து வருகிறது. ஆலையின் மாசுபாடு பற்றியும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கு நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது பற்றியும், உரிமைப் போராட்டத்தில் மக்களுடன், வழக்கறிஞர் கடந்து வந்த பாதையையும், எதிர்காலத்தில் நாம் நம்முன் உள்ள கடமையையும் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.
தொடர்புக்கு: 9962366320, 9842812062

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க