உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது

0

த்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்படுவது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் 1, 2022 நிலவரப்படி உலகம் முழுவதிலும் 363 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 20 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த தகவல் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to protect Journalists – CPJ) டிசம்பர் 14 அன்று வெளியிட்ட “2022 சிறை கணக்கு” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதேச்சாதிகார அரசுகள் ஊடக சுதந்திரத்தின் குரல்வலையை தொடர்ந்து நசுக்கி வருகின்றன. ‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது” என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) மேலும் கூறுகிறது.

பத்திரிகையாளர்களை கைது செய்வதில் உலக அளவில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 62 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். மாசா அமினி என்ற இளம்பெண் ‘ஒழுக்கநெறி’ போலீசால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. அங்கு போராட்டம் துவங்கப்பட்ட பின்பு மட்டும், 22 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 49 பத்திரிகையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!


இந்தியாவில் 7 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டு முதல் சி.பி.ஜே சிறை கணக்கெடுப்பு நடத்த தொடங்கியதிலிருந்து இதுதான் புதிய உச்சம். அந்த எழுவர்: ஆசிப் சுல்தான் (Aasif Sultan), சித்திக் கப்பன் (Siddique Kappan), கவுதம் நவ்லகா (Gautam Navlakha), மனன் தர் (Manan Dar), சஜாத் குல் (Sajad Gul), ஃபஹத் ஷா (Fahad Shah) and ரூபேஷ் குமார் சிங் (Rupesh Kumar Singh). இந்த எழுவரில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் நான்கு பேர்.

ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் (Jammu and Kashmir Public Safety Act) என்ற ஆள்தூக்கி சட்டத்தின் கீழ் ஆசிப் சுல்தான், ஃபஹத் ஷா மற்றும் சஜாத் குல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சில தனி வழக்குகளில் பிணை கிடைத்தும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

தற்போது சிறையில் இருக்கும் எழுவரில் 6 பேர் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிப் சுல்தான் – காஷ்மீர் நரேட்டர் (Kashmir Narrator) என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அவர் ஆகஸ்டு 27, 2018 என்று கைது செய்யப்பட்டார். அவர் 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களாக சிறையில் இருக்கிறார். ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் பிணை கிடைத்தது. ஆனால் பிணை வழங்கப்பட்ட மறுகணமே அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டார்.

சித்திக் கப்பன் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அக்டோபர் 5, 2020 இல் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களாக சிறையில் உள்ளார். ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான போராட்டங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் பதியப்பட்டுள்ள வழக்கின் காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.

கவுதம் நவ்லகா – சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான இவர் ஏப்ரல் 14, 2020 அன்று புனே போலீசால் எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், 30 மாதங்கள் சிறையில் இருந்தார்.

மனன் தர் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அக்டோபர் 10, 2021 அன்று கைது செய்யப்பட்டு 1 வருடம் மற்றும் 2 மாதங்களாக சிறையில் உள்ளார்.


படிக்க: சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !


சஜாத் குல் – காஷ்மீர் வாலா (Kashmir Walla) பத்திரிகையில் பணிபுரியும் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறையில் இருக்கிறார். போராட்டம் ஒன்றைப் பற்றி ட்வீட் செய்த காரணத்திற்காக இவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் இவருக்கு பிணை கிடைத்தது; ஆனால் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSA ) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஃபஹத் ஷா – காஷ்மீர் வாலா (Kashmir Walla) பத்திரிகையில் பணிபுரிந்து வந்த இவர் “பொய் செய்தி” பரப்பினார் என்று ராணுவம் குற்றம்சாட்டியைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது வேறு இரண்டு வழக்குகளும் பதியப்பட்டன. இரண்டு வழக்குகளில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது; ஆனால் மூன்றாவது வழக்கின் காரணமாக இன்னும் சிறையிலேயே இருக்கிறார்.

ரூபேஷ் குமார் சிங் – ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான இவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது; கூடுதலாக இரண்டு வழக்கங்களும் பதியப்பட்டுள்ளன.

உலக அளவில் பத்திரிகையாளர்கள் அரசு எந்திரத்தால் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்பதையே இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு. ஊபா போன்ற கொடுமையான சட்டத்தை பத்திரிகையாளர்கள்-முற்போக்கு எழுத்தாளர்கள்-ஊடகவியளாளர்கள்-ஜனநாயக சக்திகள் மீது பயன்படுத்தி அவர்களை செயல்படவிடாமல் முடக்குவதே இவர்களின் நோக்கம்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க