சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) ‘பயங்கரவாதம்’ தொடர்பான பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டால் பிணையில் வெளிவருவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கியது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பன், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க உத்தரப்பிரதேசம் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் தடுத்த போலீசுத்துறையினர், “பொது அமைதிக்கு குந்தகம்” விளைவித்ததாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) பின்னணியில் சித்திக் செயல்பட்டதாகக் கூறி, மதுரா போலீசுத்துறை அவர்மீது தேசத்துரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழும் வழக்குப் பதிவு செய்தது.
கடந்து செப்டம்பர் 2022-ல் உச்சநீதிமன்றம் அவருக்குப் ஜாமீன் வழங்கிய போது, அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தை சிறையில் கழித்திருந்தார். அந்த இரண்டாண்டு காலத்தில், அவர் தனது தாயாரை இழந்திருந்தார்; கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சையின் போது ஒரு தனியார் மருத்துவமனையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்; அவருடைய மனைவி மற்றும் வழக்கறிஞரின் தொடர் போராட்டத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் மதுரா கீழமை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தன.
உச்சநீதிமன்றம் இந்த UAPA வழக்கைக் கையாண்ட விதம், ஊடக சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக பத்திரிகையாளர்களால் பார்க்கப்பட்டது. ஜாமீன் வழங்கியதோடு, உச்ச நீதிமன்றம் “சித்திக் கப்பன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உ.பி போலீசுத்துறையால் நிரூபிக்க முடியவில்லை. ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க உரிமை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதற்காக பொதுக் குரல் எழுப்ப முயன்றது சட்டத்தின் பார்வையில் குற்றமா?” என்று கேள்வியும் எழுப்பியது.
படிக்க: உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சித்திக்கின் மனைவி ரைஹானா கப்பன் “அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு ஆண்டு கால போராட்டம். அவர் சிறையில் இருந்தது, எங்களின் இரண்டாண்டு வாழ்க்கை, நாங்கள் சந்தித்த துயரங்கள் – உடல், மன, பொருளாதார ரீதியிலான துயரங்கள் – எதுவுமே எளிதில் மறக்கக் கூடியது அல்ல. உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதானது, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் குறிக்கிறது; இது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது” என்று கூறினார்.
ஆனால் ரைஹானாவின் மகிழ்ச்சி குறுகிய காலத்திற்கே நீடித்தது. 760 நாட்கள் சிறை; கூடுதலாக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இரண்டு மாதங்களைக் கடந்தும் சித்திக் இன்னும் சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்.
எதனால் சித்திக் கப்பன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்?
சித்திக் கப்பன் 2020-ல் உத்தர பிரதேச போலீசுத்துறையால் கைது செய்யப்பட்ட போதே அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்து கொண்டது. 2018-ல் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் சித்திக்கை குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்த்து, பிப்ரவரி 6, 2021-ல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) பிரிவுகள் 3 மற்றும் 4-ன் கீழ் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தர பிரதேச போலீசுத்துறை தொடுத்த UAPA வழக்கிலிருந்து செப்டம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது; ஆனால், அமலாக்கத்துறை தொடுத்த PMLA வழக்கில் ஜாமீன் வழங்க கருப்புப்பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 31 அன்று மறுத்துவிட்டது.
அமலாக்கத்துறை 2018-இல் பதிவு செய்த வழக்கு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த 22 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் சித்திக் கப்பன் பெயர் இடம் பெறவில்லை. இந்த 2018 ஆம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கு, 2013 ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு வழக்கோடு தொடர்புடையது. ஆனால் அந்த வழக்கிலும் சித்திக் கப்பன் பெயர் இடம் பெறவில்லை. 2018-ல் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கிற்கும் 2020-ல் உத்தரப்பிரதேச போலீசுத்துறை தொடுத்த UAPA வழக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், அமலாக்கத் துறை கூறும் PFI-தொடர்பான வழக்கின் முக்கிய சதிகாரரான ராஃப் ஷெரீப் (KA Rauf Sherif) என்பவருக்கு, பிப்ரவரி 2021-லேயே எர்ணாகுளம் பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது ஷெரீபோ உத்தரப்பிரதேச போலீசுத்துறையால் UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு லக்னோ மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
படிக்க: பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!
திட்டமிட்டே மறுக்கப்படும் நீதி!
சித்திக் கப்பனுக்கு PFI-யுடன் தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அமலாக்கத்துறையின் வழங்கும் உத்தரப்பிரதேச போலீசுத்துறையின் UAPA வழக்கும் அமைந்துள்ளன. (சித்திக் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்).
UAPA வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ அவருக்கு ஜாமீன் வழங்கிவிட்டது. சித்திக்கின் வழக்கறிஞருக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை தேடிப் பிடித்து பிணையமாக (surety) நிறுத்துவதற்கே பத்து நாட்கள் ஆகிவிட்டது. ஜாமீன் வழங்கப்பட்டு 50 நாட்களைக் கடந்தும் (நவம்பர் 1 வரை) சுயூரிட்டிக்களை சரி பார்க்காமல் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தினர்.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகே அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு வந்தது. சித்திக்கின் PFI-தொடர்பு தொடர்பான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்ததை அறிந்திருந்தும், பண மோசடி தடுப்பு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.
நீதிமன்றங்களின் இந்த இரட்டை நிலைப்பாடுகள் எதை வெளிப்படுத்துகிறது என்றால், சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது என்பதைத்தான். ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைத்தது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!
ஊடகவியலாளராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி, பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு ஒத்திசைவாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் அல்லது UAPA போன்ற ஆள்தூக்கி சட்டங்களால் கைது செய்யப்பட்டு ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையிலேயே வைத்து வதைக்கப்படுவார்கள். இதுதான் இப்போதைய புது இந்தியா!
பொம்மி
மூலக்கட்டுரை: thequint