பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம், கடந்த ஞாயிறு (செப்டம்பர் 2, 2018) இரவன்று பெரும் தீ விபத்தைச் சந்தித்தது. விபத்து குறித்த புகைப்படங்கங்களிலிருந்து முழு கட்டிடமும் தீயில் எரிவதைப் பார்க்க முடிகிறது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அருங்காட்சியகம் மூடிய நேரத்திற்கு பிறகே தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் யாரும் காயமடையவில்லை என உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தேசிய அருங்காட்சியகமானது அமெரிக்க கண்டங்களில் ( வட, தென் அமெரிக்கா) மிகப் பழையதும், பெரியதும் ஆகும். கிட்டத்தட்ட இரண்டு கோடி அரிய பொருட்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு வந்தன. பிரேசிலின் முக்கிய நகரான ரியோடி ஜெனிராவில் இருக்கும் போர்ச்சுகீசிய அரச குடும்பத்தினர் முன்னர் வசித்த அரண்மனையான சா கிரிஸ்டோவாவோ (Sao Cristovao palace) கட்டிடத்தில்தான் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

தீ விபத்தில் பிரேசில் அருங்காட்சியகம். புகைப்படம் நன்றி: RT

“கட்டிடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் ஏராளமிருப்பதால் கட்டிடம் முழுவதிலும் தீ விரைந்து பரவியது” என அருங்காட்சியக உதவி இயக்குநர் தெரிவிக்கிறார். மேலும் அத்தகைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு முன் எதிர்பாரத வகையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். விபத்தின் மூலம் அருங்காட்சியகத்தின் அரிய பொருட்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை.

“200 வருடங்களுக்குரிய பணி, ஆய்வு, அறிவு அனைத்தும் தொலைந்து விட்டன” என்று பிரேசில் அதிபர் மைக்கேல் டீமெர் (Michel Temer) டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். பிரேசிலின் மிகப்பழைய இந்த அருங்காட்சியகம் கடந்த ஜூனில்தான் 200-ம் ஆண்டு நிறைவை கொண்டாடியிருந்தது.

தீ விபத்தில் பிரேசில் அருங்காட்சியகம். புகைப்படம் நன்றி: RT

இத்தகைய வரலாற்று மதிப்பும், அறிவியல் மதிப்பும் கொண்டிருந்தாலும் இந்த அருங்காட்சியகம் சமீப வருடங்களாக நிதிப் பற்றாக்குறையினால் தத்தளித்துக் கொண்டிருந்தது. கடந்த ஜூனில்தான் இந்த அருங்காட்சியகத்திற்கு 5.3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அருங்காட்சியகத்திற்கும் பிரேசிலின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கான தேசிய வங்கிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அந்நிதியில் ஒரு பகுதி அருங்காட்சியகத்தின் தீ விபத்து தடுப்பு ஏற்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தீ விபத்து அனைத்தையும் அல்லது கணிசமானவற்றை அழித்து விட்டது.

வரலாறு என்பது ஒடுக்குபவர்களின் பார்வையில் எழுதப்படும் அவலம் ஒருபுறமிருக்க எதிர்காலத்தில் ஒடுக்கப்படுபவர்கள் பார்வையில் உலக மக்கள் தமது வரலாற்றை திருத்தி எழுதவாவது இத்தகைய அருங்காட்சியங்கள் மிக அவசியம்.

நாமறிந்த வகையில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது சமீபத்திய வரலாறாகும். சிங்கள இனவெறியர்களால் 1981-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி இரவு இந்த நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது. அப்போது யாழ் பொது நூலகத்தில் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்கள் இருந்தன. இந்த நூல் எரிப்பு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும், போராடத்திற்கான உரத்தை ஊட்டினாலும் அறிவுப் பூர்வமான இழப்பின் மதிப்பிற்கு அளவே இல்லை.

தீ விபத்தில் பிரேசில் அருங்காட்சியகம். புகைப்படம் நன்றி: RT

பிரேசில் நாடு ஒலிம்பிக் நடத்துகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்துகிறது. மெட்ரோ ரயில் வண்டிகளை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. ஆனால் அதன் நகரங்களில் பெருகி வரும் ஏழைகளும், அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களும் பிரேசிலின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்த தீ விபத்து.

அவ்வகையில் இந்த அருங்காட்சியக தீ விபத்தும், அதன் இழப்பிற்கும் பிரேசிலின் ஆளும் வர்க்கங்களே பொறுப்பேற்க வேண்டும். உலகமயக் கொள்கைகளுக்காக தீவிரமாக போராடி வரும் பிரேசில் மக்கள் இனி தமது நாட்டின் பண்பாட்டு – வரலாற்று நிறுவனங்களை பாதுகாக்கவும் போராட வேண்டும். ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயரிழிந்ததற்கு நிகரான அல்லது அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கும் அருங்காட்சிய விபத்து வெறுமனே விபத்தல்ல!

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க