கருத்து சுதந்திரம்  – போலீசார் புது விளக்கம்

“சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது“ என்று கூறி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

செப்டம்பர் 8 திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழமுடியவில்லை இந்த நிலை நீடிக்கலாமா? என மாநாடு நடத்த திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் போலீசார் விசித்திரமான காரணங்களை சொல்லி அனுமதி மறுத்துள்ளனர்.

விவசாயியை வாழவிடு – தஞ்சையில் நடைபெற்ற மாநாடு

மோடி அரசிற்கு எதிராக எழுதினால், பேசினால், சிந்தித்தால், செயல்பட்டால் அவர்கள் தீவிரவாதி என முத்திரை குத்தி தாக்குதல் நடத்தும் இன்றைய பா.ஜ.க. அரசின் பாசிச நடவடிக்கை பரவிவரும் சூழலில், போராடும் மக்களை சுட்டுக்கொல்வதும், தேசதுரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதும் தவறில்லை என ஆட்சியாளர்கள் பேசிவரும் நிலையில் “அடக்குமுறைதான் ஜனநாயகமா?“ என்ற தலைப்பில் நடத்தப்படவிருக்கிறது இந்த மாநாடு.  இதில்,  நடைபெறும் மாநாட்டில் தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்.,  சி.பி.ஐ. எம்.எல்., த.தே.வி.இ. மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என பல தரப்பினர் பங்கேற்கவிருக்கின்றனர்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முறையாக விண்ணப்பித்த பின்னர் மொத்தம் 19 கேள்விகள் அடங்கிய ஒரு கடிதத்தை அனுப்பியது திருச்சி மாநகர காவல்துறை.

“அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்பதன் விளக்கம் என்ன? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை என்பதன் விளக்கம் என்ன? மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களின் நோக்கம், மைய கருத்துக்கள் என்ன? எவ்வளவு நபர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் அதில் ஆண்கள் பெண்கள் எத்தனை பேர்? என 19 கேள்விகள் கேட்டு திருச்சி மாநாகர போலீசார் கடிதம் கொடுத்தனர். இத்தைகய கேள்விகளைக் கேட்கும் அதிகாரம் போலீசுக்கு கிடையாது. இதற்கு எந்த சட்டத்திலும் இல்லை. இவ்வாறு கேட்பதே பேச்சுரிமை கருத்துரிமைக்கு எதிரானது என்ற ஆட்சேபணையுடன் காவல்துறையில் கடிதத்திற்கு பதில் எழுதி கொடுத்தோம்.

இதற்கு முன்னரும், மூடு டாஸ்மாக்கை, விவசாயியை வாழவிடு மாநாடுகள் மற்றும் பல பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்னால், போலீசாரால் “என்ன பேச போகிறீர்கள், பாடல் வரிகள் என்ன? மாநாட்டில் பங்கேற்பவர்களின் முகவரி செல் நம்பர் என்ன “ என்பன போன்ற மோசமான கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிக் கேள்வி கேட்பது, பின்னர் அனுமதி மறுப்பது, பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று நாங்கள் கூட்டம் நடத்துவது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி பெற்றுதான் மக்கள் அதிகாரம் பல கூட்டங்களை நடத்தி வருகிறது. எந்த நீதிபதியும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் இப்படிபட்ட கேள்விகள் கேட்கிறீர்கள் என காவல்துறையிடம் கேள்வி எழுப்பியதில்லை. கண்டித்ததுமில்லை.

செப்டம்பர் 8 திருச்சி மாநாட்டிற்கு போலீசார் கொடுத்த அனுமதி மறுப்பு உத்திரவில் காவல்துறை சொல்லியிருக்கும் காரணங்களில் முக்கியமானவை கீழ்வருமாறு –

1 கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான முழுமையான பதில்கள் தங்களால் அளிக்கப்படவில்லை.

2 உயர்நீதிமன்ற உத்திரவு பெற்று நடத்தப்பட்ட திருச்சி உறையூர் பொதுக்கூட்டத்தில் அத்துமீறி பேசி உள்ளதாக ம.க.இ.க., வி.சி.க., தி.வி.க., த.வி.ச. ஆகிய அமைப்புகளை சேர்ந்த எட்டு பேர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

3 திருச்சி மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை போஸ்டராக ஒட்டி உள்ளீர்கள் என ஒருங்கிணைப்பாளர் செழியன் மீது வழக்கு உள்ளது.

4 தங்கள் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது அரசு உழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக திருச்சியில் 4 வழக்குகள் உள்ளது.

5 மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் , புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி,  சென்னை என பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.

6 திருச்சி ம.க.இ.க. ஜீவா மீது ஒரு போஸ்டர் ஒட்டியதற்காக ஒன்பது ஸ்டேசன்களில் மாநகரின் அழகை சீர்குலைத்ததாக வழக்கு உள்ளது.

7 தங்கள் அமைப்பின் செயல்பாடு நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசின் திட்டங்களை செயல்படவிடாமல் தடுப்பதும் மக்களிடம் தவறான கருத்துகளை பரப்பும் செயல்பாடாகவும் தெரிகிறது.

8 பல வழக்குகளில் தங்கள் அமைப்பினர், குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில் தாங்கள் கோரி உள்ள இந்த அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்ற சிறப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தால் அது தாங்கள் மேலும் ஒரு நிகழ்வில் சட்ட மீறல் நடவடிக்கையில் ஈடுபட வழிவகுப்பதாக அமைந்து விடுமோ என்று தோன்றுகிறது. எனவே தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே சிறப்பு மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

இவைதான் அனுமதி மறுப்புக்கான காரணங்களாம்.

ஜனநாயக உரிமையும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது என்பதை இதைவிட பச்சையாகவும், வெளிப்படையாகவும் சொல்லமுடியுமா?

போலீசாரின் இந்த உத்திரவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வேறு தேதியில் மாநாட்டை நடத்துவோம்.

மேலும் கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் எந்த ஊரிலும் பொதுக்கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு போலீசார் அனுமதி தருவதில்லை. அரங்குகளில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை. ஆனால்  மண்டப உரிமையாளரை மிரட்டி கூட்டம் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்.

கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க